நினைத்துப் பார்த்தால் வியப்பாக உள்ளது. அன்றைய தினத்தில் இருந்து சமீபமான சுஜாதா காலம் வரை அறிவியல் கதைகளிலும், சினிமாக்களிலும் புனைவுகளாக சொல்லப்பட்ட எல்லாம் காசப்மெரின், ஸ்மார்ட் போன், லேப்டாப், ஜிபிஎஸ், ட்ரோன்… என அன்றாடக் கருவிகளாக வடிவெடுத்துள்ளன; ஒரு சுவையான அலசல்.
நினைவுகள், நிகழ்வுகள், கனவுகள் ஆகியவற்றின் உணர்வும் அறிவும் அழகியலும் கலப்பதன் வெளிப்பாடுதான் இலக்கியம். அதன் ஒரு கிளை தான் அறிவியல் இலக்கியம்.
அறிவியல் புனைக் கதைகள் ஆராய்ச்சியாளர்களின் சாதனைகள் பற்றிய நிகழ்கால வாழ்க்கையை மட்டும் பேசுவதில்லை, வருங்கால அனுபவமாகக் கூடிய புதிய தொழில்நுட்பங்கள், அவற்றால் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் பேசுகின்றன.
வாசிப்புக்கான எழுத்தாக்கங்களில் தொடங்கி, திரைப்படம் உள்ளிட்ட நிகழ்த்து கலைகள் வரையில் பயணிக்கின்றன. துய்ப்போருக்கு ரசனையின் இன்பத்தை வழங்குவதோடு, புதிய முனைப்புகளுக்கான விசையாகவும் வினைபுரிகின்றன.
நரம்பு மண்டலம் குறித்த பழைய கருத்துகளை மாற்றிய ஆராய்ச்சிக்காக நோபல் விருது பெற்ற ஸ்பானிய நோயியல் வல்லுநர் சான்டியாகோ ராமோன் ஒய் காஜல்,
“கலையிலும் சரி, அறிவியலிலும் சரி, மகத்தான ஆக்கங்கள் அனைத்தும், ஒரு சிறப்பான கருத்திற்கு மிகுந்த ஆர்வ முனைப்பைச் செலுத்துவதிலிருந்தே விளைகின்றன,” என்று கூறினார் (இளம் ஆய்வாளர்களுக்கான ஓர் அறிவுரை, 1897).
“அறிவியல் என்பது பகுத்தறிவுக்கு மட்டும் விசுவாசியல்ல, காதலுக்கும் கற்பனைக்கும் கூட விசுவாசி தான்,” என்று, பேரண்டம் பரிணமித்ததன் உண்மைகளில் கூடுதல் வெளிச்சம் பாய்ச்சிய ஸ்டீபன் ஹாக்கிங் எழுதியிருக்கிறார் (பிளாக் ஹோல், பேபி யுனிவர்ஸ்ஸ் அன் அதர் ஆர்ட்டிகிள்ஸ்–1993).
மாறுபட்ட பார்வை!
வாழ்க்கையில் எல்லோரும் பார்ப்பதைத்தான் கலை–இலக்கியப் படைப்பாளிகள் பார்க்கிறார்கள். ஆனால் மாறுபட்ட கோணத்தில் அவற்றை அலசுகிறார்கள்.
ஒரு நாவலில் வரக்கூடிய காட்சியைப் படிக்கிறபோது, “அட, நமக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது, ஆனால் நாம் இப்படி யோசிக்கவில்லையே,” என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா?
நாமெல்லோரும் வாழ்கிற இதே மண்ணையும் விண்ணையும்தான் அறிவியலாளர்களுக்கும் இயற்கை வழங்கியிருக்கிறது.
ஆனால் அவர்கள் மாறுபட்ட ஆர்வத் துறுதுறுப்போடு அவற்றைப் புலனாய்வு செய்கிறார்கள். உலகத்திற்குப் புதிய புதிய கண்டுபிடிப்புகள் கிடைக்கின்றன.
படைப்பாளர், அறிவியலாளர் இருவரும் இணைகிற புள்ளிதான் கற்பனை. அதை வளமாக வளர்த்துக் கொடுப்பது கலை–இலக்கியம்.
சும்மா கட்டுக்கதை என்று தள்ளப்படக்கூடிய புனைவு, புதிய முயற்சி எனும் சுடரைத் தூண்டுகிறது.
அந்த முயற்சி, கனவுலகின் அந்தப் புனைவை நனவுலக நடப்பாக மாற்றுகிறது. இந்தக் கொடுக்கல் வாங்கலுக்கு சில சாட்சிகளைப் பார்ப்போம்.
ஜேம்ஸ் பாண்ட் சாகசங்கள்!
முதல் சாட்சியாக வருவது உலகம் முழுதும் மக்களை ஈர்த்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள்.
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனின் உளவுத்துறை அதிகாரியாகப் பணியாற்றியவரும், ஓய்வுக்குப் பின் எழுத்தில் ஈடுபட்டவருமான ஐயான் ஃபிளெமிங் உருவாக்கிய தனித்துவமான கற்பனை உளவாளி தான் ஜேம்ஸ் பாண்ட்.
ஃபிளெமிங் மறைவுக்குப் பின் வேறு சில எழுத்தாளர்களும் அதே கதாபாத்திரத்தை வைத்து நாவல்கள் எழுதினார்கள்.
ஃபிளெமிங்கின் நாவல்களையும் மற்றவர்களின் கதைகளையும் அடிப்படையாக வைத்து பாண்ட் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. பிற்காலத்தில் திரைக்காகவே புனையப்பட்ட கதைகளும் படமாக்கப்பட்டன.
அந்தப் படங்களில், சிறியவர் பெரியவர் அனைவரையும் கவர்ந்தது பாண்டின் சாகசங்கள் மட்டுமல்ல, அந்த சாகசங்களுக்குத் துணையாகப் பயன்படும் தொழில்நுட்பக் கருவிகளும்தான்.
உளவுத்துறை அலுவலகத்தில் அவற்றை உருவாக்குவதற்கென்றே தனிப்பிரிவு இயங்கும்.
வல்லுநர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை பாண்டுக்கு இயக்கிக் காட்டுவார்கள். அவற்றை அவர் சரியான நேரத்தில் பயன்படுத்தி எதிரிகளை முறியடிப்பார். அந்தக் கற்பனைக் கருவிகள் பலவும் இன்று நடைமுறைக்கு வந்திருக்கின்றன.
1956- இல் வந்த ‘தண்டர்பால்’ படத்தில், தோளில் மாட்டிய பையோடு வரும் பாண்ட், தன்னை எதிரிகள் சூழும்போது, கைக்குள் இருக்கும் ஒரு விசையைத் தட்டுவார்.
உடனே முதுகுப் பை வேதிப்பொருள் வாயுவை வெளியேற்றி அவரை அப்படியே செங்குத்தாக வானத்திற்குக் கொண்டுசொல்லும்.
உண்மையாகவே அப்போது பெல் ஏரோ சிஸ்டம் என்ற நிறுவனம் ‘ஜெட் பேக்’ எனப்படும் கருவியை உருவாக்கும் சோதனைகளில் ஈடுபட்டிருந்தது.
ஐயான் ஃபிளெமிங் அந்தத் தகவல்களைத் திரட்டி, துல்லியமான முறையில் தனது கதையில் கையாண்டிருப்பார்.
மிகக் குறைவான நேரமே பறக்க முடிகிறது, மிக அதிகமான எரிபாருள் தேவைப்படுகிறது என்ற காரணங்களால் ஜெட் பேக் இன்னமும் நேரடி நடைமுறைக்கு வரவில்லை.
இவற்றை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் தொடர்கின்றன என்று பத்திரிகையாளர் விஜய் ஆனந்த் பாண்ட் கருவிகள் நவீன தொழில்நுட்பத்தின் மாதிரி வடிவங்களாக மாறியது பற்றிய கட்டுரையில் தெரிவிக்கிறார் (‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, ஆகஸ்ட் 25).
1965இல் ‘கோல்டு ஃபிங்கர்’ படத்தில் நவீன வசதிகள் கொண்ட அதிவேகக் காருக்கு தொலையுணர்வுத் தொழில்நுட்பம் வழிகாட்டும். இன்றைய நம் கைப்பேசிகளில் பாதை காட்டுகிற ஜிபிஎஸ் எனும் புவி நிலையறி அமைப்பின் அன்றைய கற்பனை இது!
1997-இல் வந்த ‘டுமாரோ நெவர் டைஸ்’ என்ற படம், விரல் ரேகையை அடையாளம் காண்கிற, தொலைவிலிருந்து காரை இயக்கக்கூடிய கைப்பேசியைக் காட்டியது.
2002-இல் வெளியான “டை அனதர் டே’ என்ற படத்தில் ஜேம்ஸ் பாண்டின் கார், யாருடைய கண்ணுக்கும் புலப்படாததாக மாறிவிடும்.
2006 இல் டியூக் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், கண்ணாடியிழைப் பொருள்களால் ஆன, கண்ணாமூச்சி காட்டக் கூடிய மறைப்பு ஆடை ஒன்றை உருவாக்கினார்கள்.
2021இல் ‘நோ டைம் டு டை’ என்ற படம் வந்தது. அதில் குறிப்பிட்ட ஒரு மரபணு யாருடைய உடலிலாவது ஊசி மருந்துடன் செலுத்தப்படும்.
அவருக்கு ஒன்றும் ஆகாது, ஆனால் அவர் பின்னர் அந்த மரபணுவுக்கு உரியவரைத் தொடுவாரானால், தொடப்பட்டவர் உடற்சிதைவுகளுக்கு உள்ளாகி இறந்துவிடுவார்.
அந்த ஊசி மருந்தைக் கைப்பற்றும் எதிரி இலக்கு வைத்து சிலரைக் கொலை செய்கிறான். பாண்ட், தன் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற அந்த மரபணுவுக்குத் தானே இலக்காகிவிடுவார்.
இலக்கு சிகிச்சை படத்தில் சித்தரிக்கப்படும் தொழில்நுட்பம் நோய்த் தடுப்பு மருந்து உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சிகளில் கையாளப்படுகிறது. அந்தப் படம் தான் இவ்வகை ஆராய்ச்சிகளைத் தூண்டியதென்று சொல்வதற்கில்லை.
ஆனால், வெறும் சினிமா தானே என்றில்லாமல், அறிவியல் சார்ந்த தகவல்களை வெகு மக்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு திரைக்கதையாளர்கள் எவ்வளவு மெனக்கிடுகிறார்கள் என்று அந்தப் படம் காட்டியது.
“குறிப்பிட்ட நோயாளிக்கென இலக்கு வைக்கப்பட்ட குறிப்பிட்ட சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் எதிர்காலம் உருவாகிக்கொண்டிருக்கிறது.
ஜேம்ஸ் பாண்ட் தொழில்நுட்பங்களின் உண்மையான சிறப்பு, அவற்றில் பொதிந்திருக்கும் நம்பிக்கைதான்,” என்கிறார் என்கிறார் விஜய் ஆனந்த்.
இது தொடர்பாக மேற்கொண்டு தேடுகிற ஆர்வத்தைத் தூண்டிய அந்தக் கட்டுரை தான் இந்தக் கட்டுரைக்கு வழி செய்தது. 1963-ல் வெளியான ‘ஃபிரம் ரஷ்யா வித் லவ்’ படம் நினைவுக்கு வருகிறது.
அதில், ஜேம்ஸ் பாண்ட் தரையில் இருந்தபடி ஒரு கையடக்கக் கருவியால் ஒரு சிறிய ஹெலிகாப்டரை இயக்குவார்.
இன்று தொலைக் கட்டுப்பாட்டுக் கருவிகள் மூலம் இயக்கப்படுகிற மின்னணுப் பறவைகள் (‘ட்ரோன்’) அந்தக் கற்பனையின் செயல் வடிவம் தான்.
பாண்ட் அணிந்திருக்கும் கைக்கடிகாரம் நேரத்தைக் காட்டுவதோடு லேசர் கதிர்களைப் பாய்ச்சும், தொலைக் குறியீடுகளை மொழிபெயர்த்துத் தரும்.
கடந்த பத்தாண்டுகளில் உடல் நலத்தைக் கண்காணிக்கும் திறன் கடிகாரங்கள் (ஸ்மார்ட் வாட்ச்) விற்பனைக்கு வந்துவிட்டன.
மடிக்கணினி முன்னறிவிப்பு!
1960களில் ‘ஸ்டார் ட்ரெக்’ என்ற தொலைக்காட்சித் தொடர் ரசிகர்களை ஈர்த்தது. கணினி என்றால் அறை முழுக்க ஆக்கிரமித்திருக்கும் என்ற நிலைமை இருந்த அந்தத் தொடக்கக் காலத்தில்,
இத் தொடரின் கதை மாந்தர்கள் கையடக்கமான ‘கம்யூனிகேட்டர்’ (தொடர்பாளர்) என்ற கருவிகளைக் கையாண்டனர். மடிக் கணினிகளுக்கும், கைக் கணினிகளுக்கும் திறன் பேசிகளுக்குமான முன்னறிவிப்புகளாக அந்தக் கருவிகள் அமைந்தன.
அதே தொடரில் யுனிவர்சல் டிரான்ஸ்லேட்டர் (பேரண்ட மொழிபெயர்ப்பாளர்) என்ற கருவி வேற்றுக் கோள்வாசிகளின் மொழிகளைப் புரிந்து கொள்ள உதவும்.
2006 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் ‘கூகுள் டிரான்ஸ்லேட்’ என்ற இணைய வழி மொழிபெயர்ப்புச் செயலியை அறிமுகப்படுத்தியது.
இன்று செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிகள் உலகின் பல மொழிகளையும் கற்றுக் கொடுக்கின்றன. 1968 ஆம் ஆண்டின் ‘எ ஸ்பேஸ் ஒடிஸி’ தொடரும் இந்த ஏஐ செயலிகளுக்கு ஒரு முன்னோடியாக அமைந்தது.
தற்போதைய இணைய வழி காணொளிக் கூடுகைத் தொடர்பிகளான ஜூம், கூகுள் மீட், சிக்னல், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ், சிஸ்கோ வெபெக்ஸ், டிஸ்கார்ட், வாட்ஸ்அப், டெலிகிராம், ஜிட்ஸி மீட் போன்றவை அதன் பின்னோடியாக வந்தவை எனலாம்.
இலக்கிய சாட்சிகள்!
இலக்கியப் படைப்பாக்கத்தின் அறிவியல் வளர்ச்சியில் வந்தவை தான் திரைப் படங்கள். தொலைக்காட்சிக் கதை.
வலைத்தொடர், சமூக ஊடக நாடகம் ஆகிய அனைத்து வடிவங்களும். அறிவியல் புனைவாக வந்த ஆக்கங்களுக்கான கதைகள் புறப்பட்டதும் இலக்கியங்களில் இருந்துதான்.
19ஆம் நூற்றாண்டின் அறிவியல் புனைவு எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்ன் தனது ‘ஜர்னி டு தி சென்டர் ஆஃப் தி எர்த்’, ‘தி ட்வென்டி தௌஸண்ட் லீக்ஸ் அண்டர் தி ஸீ’ நாவல்களில் நீர் மூழ்கிக் கப்பல்கள் பற்றி விரிவாகச் சித்தரித்திருப்பார்.
அப்போது இது ஒரு சுவையான கற்பனையாகவே இருந்தது. இன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் பல நாடுகளின் கடற்படைகளில் கட்டாயத் தேவையாகி இருக்கின்றன.
அதற்கடுத்த நூற்றாண்டின் அறிவியல் புனைவாளர் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘1984’ என்ற நாவலில் ‘டெலிஸ்கிரீன்’ என்ற கருவி வருகிறது. இன்றைய காணொளி அழைப்பு, கண்காணிப்பு கேமரா இரண்டின் முன்மாதிரி அது.
எந்திர மனிதத் தொழில் நுட்பத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஐசக் அசிமோவ் தனது நாவல்களில் ரோபோவியல் தொடர்பான மூன்று விதிகளை உருவாக்கி, அவை மனிதர்களுக்கு எப்படிப் பயனளிக்கும் என்று விளக்கியிருப்பார்.
இன்று தொழிற்சாலைகளில், மருத்துவத்தில், போக்குவரத்தில், உணவகங்களில், ஏன் வீடுகளிலும் கூட ரோபாக்கள் பல வேலைகளைச் செய்கின்றன.
இணையம், மெய்நிகர் உண்மை (வர்ச்சுவல் ரியாலிட்டி), விரிவாக்கப்பட்ட உண்மை (ஆக்மென்ட் ரியாலிட்டி), ட்ரோன் கருவிகளுக்கு முன்னோடியான ஓடும் கண்காணிப்பிகள், குரல் அடையாளக் கருவிகள், முக அடையாள எந்திரங்கள் ஆகியவையெல்லாம் பல சிறுகதைகளிலும் நாவல்களிலும் இடம்பெற்றுள்ளன.
புராணங்கள்!
பல நாடுகளில் புராணங்களை மதங்கள் கைப்பற்றிக்கொண்டன என்றாலும் அவற்றிலும் தொன்மங்களிலும் அந்தந்தக் காலத்து மனிதர்களின் தொழில்நுட்ப கனவுகள் பிரதிபலிக்கின்றன.
கிரேக்கப் புராணங்களில் வரும் கட்டடக் கலைஞர் டேடலஸ், அவரது மகன் இகாரஸ் இருவருமாகச் சேர்ந்து இறகுகளைச் சேர்த்துச் சிறகை உருவாக்குகிறார்கள். கடவுள்களின் தூதுவரான ஹெர்ம்ஸ், சிறகுள்ள காலணிகளை அணிந்திருப்பார்.
பறவையாகப் பறக்கும் ஆசையின் அடையாளமாக வந்த அந்தச் செயற்கை இறக்கைகள் விமானத் தொழில்நுட்பத்தின் தொடக்ககாலக் கற்பனைகளாக அமைந்தன.
சீனப் புராணங்களில் கடவுள்களும் அரக்கர்களும் பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்துவார்கள். அவை வெடிமருந்து, விண்கலத் தொழில்நுட்பங்களின் தொன்மைக் கற்பனைகள. கருதப்படுகின்றன.
பட்டாசு உட்பட வெடிமருந்துகள் சீனாவில்தான் முதலில் தயாரிக்கப்பட்டன. ஐரிஷ் புராணங்களில் சித்தரிக்கப்படுகிற பறக்கும் கேடயம் மின்னணுப் பறவைகளுக்கும் தானியங்கி ஆயுதங்களுக்குமான அக்காலப் புனைவுகளே.
புஷ்பக விமானம்
இந்தியப் புராணங்களின் கதாபாத்திரங்கள் வானில் புஷ்பக விமானங்களில் பறந்ததை, மாயக் கண்ணாடிகளில் வேறு இடங்களில் நடப்பவற்றைப் பார்த்ததை, சக்கர ஆயுதம், விரைவான அம்பு போன்ற போர் ஆயுதங்களைச் சுழற்றியதை இலக்கியப் புனைவாக ரசிக்கலாம்.
அறிவியலாளர்களாக உருவெடுக்கக்கூடிய இளம் மனங்களுக்கு இவையும் ஓர் உந்துதலாக இருக்கும்.
எங்கே சிக்கல் என்றால், இந்தச் சுவையான புனைவுகளை உண்மை வரலாறுகளாகப் புகுத்த முயல்வதில்தான். அறிவியலாளர் மாநாடுகளில் கூட, அந்தக் காலத்திலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது, அப்போதே ஏவுகணைகள் இருந்தன, விமானங்கள் பறந்தன என்று “ஆய்வறிக்கை” தாக்கல் செய்கிற அளவுக்குப் போகிறது.
அண்மையில் கூட, ஒரு பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒன்றிய ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், உலகின் முதல் விண்வெளிப் பயணி யார் என்று கேட்டிருக்கிறார்.
குழந்தைகள் தங்கள் பாடப் புத்தகத்தில் படித்தபடி யூரி ககாரின் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவர், “இல்லை, அனுமன்தான் முதல் விண்வெளிப் பயணி,” என்று சொல்லிவிட்டு, நமது முன்னோர் வரலாறுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தொனியில் அறிவுரை கூறியிருக்கிறார்.
இதெல்லாம் உண்மை வரலாறுகளாகவே போதிக்கப்படுமானால், எதிர்காலத் தலைமுறைகள் எப்படி வார்க்கப்படுவார்கள் என்ற கவலை ஒருபுறம் ஏற்படுகிறது.
மறுபுறம், உலக அளவிலான கல்வி, வேலை வாய்ப்புத் தேர்வுகளில் பொது அறிவுக் கேள்விகளுக்குத் தப்புத்தப்பாகப் பதிலளித்து, திரைகடலோடியும் திரவியம் தேடுகிற வாய்ப்பை இழப்பார்களே என்ற பதைப்பும் தொற்றுகிறது.
வரலாறு அதையெல்லாம் சரிப்படுத்தும் என்றாலும், அதற்கு எவ்வளவு காலமாகும், நாடு எவ்வளவு விலை தர வேண்டியிருக்கும்!
கலை அரசியும், எந்திரனும்!
அந்த கவலையிலிருந்து விடுபட, தமிழில் சுஜாதா எழுதிய நாவல்கள் கணினி மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது பற்றிப் பார்க்கலாம்.
‘என் இனிய இயந்திரா’, ‘மீண்டும் ஜீனோ’ உள்ளிட்ட கதைகளில் அவர் மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் ரோபோக்களைச் சித்தரித்திருப்பார்.
அவருடைய கதையாக்கத்தில் ஷங்கர் தயாரிப்பு–இயக்கத்தில், ரஜினிகாந்த் மையப் பாத்திரமாக நடித்து 2010-இல் வெளியான ‘எந்திரன்’ படம், ஆபத்தான பணிகளில் ரோபோக்களை இறக்கிவிடலாம் என்று காட்டியது.
எந்திர மனிதனுக்கே உணர்ச்சிகள் உருவாகி காதலும், பொறாமையும் ஏற்படுகிறது என்ற சுவையான கற்பனையும் இருந்தது.
அந்த சிட்டி, அந்த நாட்களின் தொலைபேசி முகவரிப் புத்தகத்தைக் கண்களுக்கு முன்னால் ஒரே அசைப்பில் படித்துவிட்டு எண்களைச் சரியாகச் சொல்வதை ரசித்தோம்.
நவீன ஸ்கேன் கருவிகளின் புழக்கத்திற்குத் தமிழ் மக்களை அந்தப் படமும் தயார்ப்படுத்தியது அல்லவா?
இதற்கொரு முன்னோடியும் இருக்கிறது. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றது 1963இல் வந்த ‘கலை அரசி’.. சரோடி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த அந்தப் படத்தை ஏ. காசிலிங்கம் இயக்கியிருந்தார்.
எம்.ஜி.ஆர்., பி.பானுமதி, எம்.என். நம்பியார், பி.எஸ் வீரப்பா, சச்சு ஆகியோர் நடித்திருந்தார்கள். வேறோரு கோளில் வாழும் மனிதர்கள், தொழில்நுட்ப அறிவில் முன்னேறியிருந்தாலும் கலைகளை அறியாதவர்களாக இருந்தார்கள்.
பூமியின் கலை வளர்ச்சி பற்றித் தெரியவரும்போது, அவர்களின் படைக்குழு ஒரு பறக்கும் தட்டில் வந்து, நடனக் கலைஞர் பானுமதியைக் கடத்திச் செல்லும். எம்ஜிஆர் அங்கே சென்று அவரை மீட்பார், அந்தக் கோளின் மக்களுக்கும் கலையில் ஈடுபாடு ஏற்பட்டிருக்கும்.
இந்தியாவில் விண்வெளிப் பயணத்தையும், வேற்றுக்கோள் மக்களையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தொடக்கப் படங்களில் ஒன்று என்ற அடையாளத்தைப் பெற்றது.
இன்றைக்கும் எந்த இடத்திற்கும் உடனடியாகப் பயணிப்பது (டெலிபோர்ட்டேஷன்) தொடர்பான அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சிகள் சிறு சிறு முன்னேற்றத்தோடு நடைபெறுகின்றன.
வேறு பல முன்னேற்றங்களுக்கான அறிவியல்–தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மனதை வாசிக்கும் எந்திரங்களை உருவாக்க முடியுமா என்ற ஆராய்ச்சிகள் தொடங்கியிருக்கின்றன. மிக நெடுங்காலக் கனவாக காலப் பயண ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இத்தகைய கனவுகளைக் கதைகள் காப்பாற்றி வருகின்றன.
“யாரேனும் ஒரு சிறந்த அறிவியல் புனைவு எழுத்தாளரின் எந்தவொரு கற்பனையும், எதிர்காலத்தில் கட்டாயம் சாத்தியமாகிவிடும்,” என்றார் ஆர்தர் சி கிளார்க். நவீன விண்கலங்களின் வடிவமைப்புக்கு உந்துவிசையாக அமைந்தவை எனக் கூறப்படும் கதைகளை வழங்கியவர் அவர்!
நேற்றைய கற்பனைகளை, இன்றைய ஆராய்ச்சிகள் நாளைய நடப்பென ஆக்கும்.
அதேவேளையில், அனைத்துலகமும் இன்பமுறுவதற்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை உடைமையாக்கப் போகிறவர்கள் யார்? அதைப் பொறுத்தே அவை முழுமையான சுதந்திரமும் சமத்துவமும் நிலைபெறுவதற்குத் துணையாகுமா என்று தீர்மானிக்க முடியும்.
கட்டுரையாளர்; அ. குமரேசன், மூத்த பத்திரிகையாளர்.
நன்றி: அறம் இணையதளம்