மலையாளத்தின் தலைச் சிறந்த இயக்குநர்களில் ஜியோ பேபியும் ஒருவர். இவர் இயக்கிய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற படம் 2021ஆம் ஆண்டில், சிறந்த படத்துக்கான கேரள மாநில அரசின் விருதைப் பெற்றது. ஜியோ பேபி இயக்கியுள்ள ‘தி காதல் கோர்’ எனும் மலையாளப்படம் கடந்த 23 ஆம் தேதி வெளியானது.
நடிகர் மம்முட்டி கதாநாயகனாக நடித்திருப்பதுடன், இந்தப் படத்தை அவரே தயாரித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் ஜோதிகா நடித்திருந்த ‘தி காதல் கோர்’ விமர்சன ரீதியாக பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
தன் பாலின் ஈர்ப்பு குறித்து, அருவருப்பு இல்லாமல் பேசி இருந்த இந்தப் படத்தை வெளியிட கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தடை விதித்தன.
எந்த நடிகரும் ஏற்கத் தயங்கும் வித்தியாசமான வேடத்தில் மம்முட்டி நடித்திருந்தார். ‘தி காதல் கோர்’ படத்தைப் பார்த்த நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மம்முட்டியை பாராட்டித் தள்ளி உள்ளார்.
‘இந்த ஆண்டின் சிறந்தப் படம் ‘தி காதல் கோர்’ மம்மூட்டி சார், நீங்கள் தான் எனது ஹீரோ, இந்தப் படத்தின் பாதிப்பில் இருந்து நான் வெளியே வருவதற்கு இன்னும் சில நாட்களாகும்’ என தெரிவித்துள்ள சமந்தா ‘ஐ லவ் யு ஜோதிகா, ஜியோ பேபி லெஜன்டரி’ என்றும் புகழ்ந்துள்ளார்.
-பாப்பாங்குளம் பாரதி.