சக்தித் திருமகன் – ‘மாஸ்’ சினிமா எப்படி இருக்கணும்?!

‘அருவி’, ‘வாழ்’ படங்களை இயக்கிய அருண்பிரபுவின் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களையே கொஞ்சம் ‘ஜெர்க்’ ஆக வைத்தது.

இரண்டுமே நல்ல படங்கள் என்ற பெயரைப் பெற்றாலும், அவற்றை ரசித்தவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு.

ஆனால், விஜய் ஆண்டனியின் படங்களோ பட்டி தொட்டியெங்கும் செல்லக் கூடியவை.

‘விஜய் ஆண்டனி மாஸ் ஹீரோவா’ என்று கேட்டால், நம்மிடம் பதில் இல்லை. ஆனால், அவர் நடித்தவற்றில் கணிசமானவை ‘மாஸ்’ படங்கள் தான். இயல்பாகவே, அப்பாத்திரங்களைக் கைக்கொள்கிற திறமை அவரிடம் உள்ளது என்பதை ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ படங்களே சொல்லும்.

சரி, இந்த ‘சக்தித் திருமகன்’னில் அருண்பிரபு – விஜய் ஆண்டனி ‘காம்போ’ தந்திருப்பது ‘மாஸ்’ சினிமாவா?

‘ச.தி.’ கதை என்ன?

மயிலாடுதுறை அருகேயுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் ஒரு இளம்பெண் தூக்கிலிட்ட நிலையில் கிடக்கிறார். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அவர் கொலையானது நன்கு தெரிகிறது.

ஆனால், அந்த இல்லத்தை நடத்தி வருபவர் தமிழ்நாட்டு, இந்திய அரசியல், பொருளாதார உலகத்தை ஆட்டுவிப்பவர். அவரது பெயர் அப்யங்கர் (சுனில் கிரிப்லானி).

அவரது சொல் கேட்டு, அந்த சடலத்தை எரிக்கிறார் இன்ஸ்பெக்டர். அந்த இளம்பெண் விட்டுச் சென்ற கைக்குழந்தையை குப்பைக்கிடங்கில் வைக்கின்றனர் போலீசார்.

1989-ல் நடந்த இந்த பிளாஷ்பேக் நிறைவுற்ற பிறகு, 2025-ல் சென்னையில் நிகழ்வதாகக் கதை தடம் மாறுகிறது.

சென்னையிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் அனைவராலும் அறியப்படுகிற நபராகத் திகழ்பவர் கிட்டு (விஜய் ஆண்டனி). அதிகார மையங்களில் இருப்பவர்கள் மத்தியில் அவர் பாலியல் தரகராக அறியப்படுபவர். அது போக, தலைமைச் செயலகத்தில் பல துறைகளிலும் அவருக்கு வேண்டியவர்களை உருவாக்கிக் கொள்கிறார்.

அதிகார மையத்தில் இருப்பவர்களுக்குத் தெரியாமலேயே மெல்ல ஒரு ‘லாபியிஸ்ட்’ ஆக உருவெடுக்கிறார்.

பெரிய அதிகாரிகளின் பணியிட மாற்றம் முதல் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது வரை பலவற்றில் கிட்டுவின் தலையீடு இருக்கிறது. அதன் வழியே அவர் கோடிகளைச் சம்பாதிக்கிறார்.

ஆனாலும், அப்யங்கரின் வீட்டில் நடக்கும் பூஜை புனஸ்காரங்களைக் கிட்டுவே ஏற்பாடு செய்கிறார். அவரது அடிமை போல நடந்து கொள்கிறார்.

லஞ்சம், ஊழலில் திளைப்பவர்களுக்குப் பணம் வாங்கிக்கொண்டு உதவும் கிட்டு, உண்மையில் பணம் இல்லாமல் கல்வி, மருத்துவம் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்குப் போராடுபவர்களுக்குத் தானே முன்வந்து உதவுகிறார்.

இந்த நிலையில், பள்ளியிலுள்ள நீச்சல்குளத்தில் ஒரு குழந்தை மூழ்கி இறந்ததாகக் கேள்விப்படுகிறார் கிட்டு. உண்மையில், நடந்தது ஒரு கொலை என அறிகிறார்.

அதற்குக் காரணமான நபரைக் கொலை செய்ய, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை பயன்படுத்துகிறார். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகி கொலை செய்யப்பட்டபிறகே, இறந்தவர் அப்யங்கரின் உறவினர் என்று அறிகிறார் அந்த இன்ஸ்பெக்டர். கிட்டுவைச் சந்தித்து, தனது ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறார்.

அவரிடம் ‘இதை செய்யச் சொன்னதே அப்யங்கர் தான்’ என்று ‘பொய்’ சொல்கிறார் கிட்டு.

அது மட்டுமல்லாமல், அப்யங்கர் சம்பந்தப்பட்ட ஒரு மத்திய அமைச்சரிடம் தனது வேலையைக் காட்டுகிறார். அந்த செயலின் பின்விளைவாக, கிட்டுவின் ‘பவர்’ அரசியல் பற்றி அப்யங்கர் அறிய நேரிடுகிறது.

“யார்றா இவன்? என் காலுக்கு கீழே, எனக்கே தெரியாமல் இவ்ளோ நாளா இப்படி இருந்திருக்கான்” என்று கோபமுறும் அப்யங்கர், கிட்டுவைப் பொறிவைத்துப் பிடிக்க ஒரு ‘அதிரடிப் படை’யைக் களமிறக்குகிறார்.

அப்போதுதான் சுமார் ஆறாயிரம் கோடி ரூபாயைப் பணமாகவே கிட்டு வைத்திருப்பது தெரிய வருகிறது.

அந்த விஷயம் தெரிந்ததும் காவல் துறையினர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மட்டுமல்லாமல் கிட்டுவுடன் பழகிய பலர் அதிர்ச்சியடைகின்றனர்.

உண்மையில் கிட்டு என்பவர் யார்? அவர் எதற்காக இதையெல்லாம் செய்கிறார்? அவருக்கு முடிவு கட்டும் அப்யங்கரின் எண்ணம் நிறைவேறியதா என்று சொல்கிறது ‘சக்தித் திருமகன்’ படத்தின் மீதி.

இந்த படத்தின் முதல் பாதி முழுக்கப் பரபரவென்று நகர்ந்து, நம்மை அடுத்தக் காட்சிக்கு இழுத்துச் செல்கிறது. இரண்டாம் பாதி அந்த அளவுக்கு இல்லை; எனினும், அது தரும் திரையனுபவம் பெரிதாக போரடிக்கவில்லை.

அது மட்டுமல்லாமல், நம் எதிர்பார்ப்பினைத் தாண்டி உயர்ந்து நிற்கிற திரைக்கதையோட்டம் ‘இது ஒரு சூப்பர் கமர்ஷியல் படம்’ என்கிற எண்ணத்தைத் தானாக உண்டாக்கிவிடுகிறது. ’மாஸ் சினிமான்னா எப்படி இருக்கணும்.. இப்படி இருக்கணும்’ என்று ‘கிளாஸ்’ எடுத்திருக்கிறது.

கொஞ்சம் நிதானித்திருக்கலாம்..!

விஜய் ஆண்டனியைப் பொறுத்தவரை, ‘பிச்சைக்காரன்’ படத்திற்குப் பிறகு அவர் கையில் கிடைத்திருக்கும் ‘ப்ளாக்பஸ்டர்’ கதை இது. அதனால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்கு ரசிகர்களை அழைத்து வந்தாலே போதும்’ என்று திட்டமிட்டுக் களமிறங்கியிருக்கிறார்.

படத்தில் அவரது ஆக்‌ஷன், ரொமான்ஸ், சென்டிமெண்ட் நடிப்பு அளவாக, சிறப்பாக அமைந்திருக்கிறது. நிச்சயமாக, ‘இது எனது 25வது படம்’ என அவர் சொல்லிக் கொள்ளலாம்.

நாயகி திருப்தி ரவீந்திராவுக்கு இது முதல் படமா எனத் தெரியவில்லை. அவர் வரும் காட்சிகள் குறைவென்றபோதும், அப்பாத்திரத்திற்குத் தோதான உடல்மொழியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

’காதல் மணம் செய்து விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணை நாயகனுக்கு ஜோடியாக்குவது’ என்ற எண்ணமே கொஞ்சம் புதிதாகத்தான் இருக்கிறது.

இதில் வாகை சந்திரசேகர் பாத்திரம் பின்பாதியில் வருகிறது. அவருக்கான வசனங்களில் சில ‘பிரச்சார’ ரகம். ஆனாலும், அது பெரிதாக நெருடவில்லை.

அதிரடிப்படை அதிகாரியாக வருபவர் ஓரளவுக்கு ஈர்க்கிறார். ஆனால், திரைக்கதையில் அவருக்குத் தனியாக முக்கியத்துவம் தரப்படவில்லை.

செல் முருகன் படம் முழுக்க வருகிறார். இவர்கள் போக ரினி போட், ரியா ஜித்து, ஷோபா விஸ்வநாத் எனப் பலர் இதிலுண்டு.

இதில் வில்லனாக சுனில் கிரிப்லானி வருகிறார். ‘காதல் ஓவியம்’ கண்ணனாக நமக்கு ஏற்கனவே அறிமுகம் ஆன இவர், கிட்டத்தட்ட 42 ஆண்டுகள் கழித்து இதில் நடித்திருக்கிறார்.

அவரது பாவனைகள் ‘ஓகே’. ஆனால், குரல் இரவலா எனத் தெரியவில்லை. கேட்கும்போது, அனிருத் தந்தை ராகவேந்தர் குரலைப் போலிருக்கிறது.

ஆங்காங்கே சமஸ்கிருதம், ஆங்கிலம் கலந்து வசனம் பேசுவது ‘ஓகே’ என்றாலும், பல இடங்களில் அது கேட்கிற வகையில் இல்லை என்பது ஒரு குறை.

இது போக ’டப்பிங்’ ராஜேந்திரன் உட்படப் பலர் இப்படத்தில் இருக்கின்றனர்.

படத்தில் ‘ஹேண்டி’ ஷாட்கள் நிறைய என்றபோதும், பிரேம்கள் பெரும்பாலும் ஒரே சீரான வண்ணக்கலவையோடு, ஒன்றுக்கொன்று பொருந்தி நிற்கிற பாங்கோடு இருக்குமாறு வடிவமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆர் கேலிஸ்ட்.

ரேமண்ட் டெர்ரிக் கிரஸ்டா மற்றும் தின்சாவின் படத்தொகுப்பில் ஒவ்வொரு ‘ஷாட்’டும் தீப்பொறியாகத் திரையில் தெரிகிறது.

‘இவ்ளோ பாஸ்ட் தேவையா’ என்று சொல்கிற அளவுக்கு ஒருகட்டத்தில் பிரேம்கள் திரையில் தெறிக்கின்றன. அதனைக் கொஞ்சம் கட்டுப்படுத்தி, திரையில் நிதானத்தை விதைத்திருக்கலாம்.

கலை இயக்குனர் ஸ்ரீராமன், இப்படத்தில் சில இடங்களை ‘லைவ் லொகேஷன்’ போல காட்டி நம்மை ஏமாற்றியிருக்கிறார். அதுவே அவரது திறமை.

இப்படத்தில் ஒலிப்பதிவு தரம் ‘சுமாராக’ உள்ளது. அதனால் பின்னணி இசை வசனங்களைப் பின்னுக்குத் தள்ளுகிறது. சில இடங்களில் ஒவ்வொரு பாத்திரமும் என்ன சொன்னது என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. அவற்றைத் தவிர்த்திருக்கலாம்.

இதுபோக ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, டிஐ எனப் பல நுட்பங்கள் இதில் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இசையமைப்பைப் பொறுத்தவரை விஜய் ஆண்டனி, ஒரு ‘மாஸ்’ பீல் தர முயற்சித்திருக்கிறார்.

அவரே ஒரு நாயகன் என்பதால், ‘எங்கு மாஸ் காட்ட வேண்டும்’ என்பது அவருக்கு நன்றாகக் கைவருகிறது. பின்னணி இசை வழியே ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைக்க முடியும் என்று நூறு சதவீதம் நம்பிக் களமிறங்கி, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

இந்த படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அருண் பிரபு.

‘சக்தித் திருமகன்’ கதை நிச்சயம் புதிதல்ல. ஆனால், ‘லாபியிஸ்ட்’களின் உலகைத் திரையில் காட்டுவது புதிது தான். அதற்கேற்ப ஹீரோ, வில்லன் பாத்திர வார்ப்பை அமைத்திருக்கிறார் வெகு சிறப்பாக.. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

அனைத்துக்கும் மேலாக ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் வருவதைப் போல ‘ஹீரோயிசம்’ இதில் ‘ஒவராக’ இல்லை. மாறாக, ஹீரோவை ஒரு ‘பாலியல் விவகாரத் தரகர்’ ஆகக் காட்டியிருக்கிறார்.

முன்பாதியில், ஹீரோ பாத்திரம் எவ்வளவு ‘பவர்’ கொண்டது என்று காட்ட அவர் வடிவமைத்திருக்கும் இரண்டொரு காட்சிகள் ரசிகர்களைக் கதைக்களத்திற்குள் சட்டென்று இழுத்துக் கொள்கின்றன.

போலவே, சாதாரண மக்களின் வாழ்வைச் சொல்கிறேன் என்று அவர்களை பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே காட்டவில்லை. அவர்கள் கையில் ‘அதிகாரம்’ கிடைத்தால் எப்படியிருக்கும் என்று சொல்ல முயற்சித்திருப்பது நல்ல விஷயம்.

இந்தப் படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் உள்ளன. அவை எதுவும் படம் பார்க்கும்போது நம் கண்கள் முன்னே விஸ்வரூபமெடுக்காது. நல்லதொரு கமர்ஷியல் படத்திற்கு அதுவே தேவை.

முதலமைச்சர் வீட்டு டைனிங் டேபிள் முதல் கிரிப்டோகாய்ன் பரிமாற்றம் மேற்கொள்ளும் அலுவலகம் வரை, இதுவரை திரையில் காட்டாத சில இடங்களை இப்படத்தில் காட்டியிருக்கிறார் அருண்பிரபு.

சென்சார் பிடியில் அந்த காட்சிகள் சிக்குமா, படம் வெளியானபிறகு சில தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வருமா என்பது உட்படச் சில விஷயங்கள் பற்றி கவலைகள் இருந்தால் மட்டுமே, அப்படியொரு காட்சியை சிந்திப்பதும் படமாக்குவதும் சாத்தியம்.

அதற்கு விஜய் ஆண்டனியும் துணை நின்றிருக்கிறார் என்பதுவும் இன்ன பிற நாயகர்களிடம் நாம் எதிர்பார்க்க முடியாதது.

அது போன்ற விஷயங்களே இப்படத்தை இன்னும் அழகாகக் காட்டுகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டின் மெகாஹிட்டான ‘ஆக்‌ஷன் பொலிடிகல் த்ரில்லர்’ ஆக உருவெடுத்திருக்கிறது ‘சக்தித் திருமகன்’. இதனைப் பார்க்கிற சாதாரண ரசிகர்களில் பலர் ‘இதை.. இதை.. இதைத்தான் நாங்க உங்ககிட்ட எதிர்பார்க்கிறோம்..’ என்று நிச்சயம் விஜய் ஆண்டனியைப் பாராட்டுவார்கள்..!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
Comments (0)
Add Comment