கல்வி தான் சமூகத்தின் ஆணிவேர்!

திரைக்கலைஞர் சிவகுமார் உருக்கம்

சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவில் ப்ளஸ்-டூ முடித்து கல்லூரி சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியும், மூத்த ஓவியர் ஒருவருக்கு நிதியும், விருதும், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகத் தன்னலமற்று உழைத்து வரும் மூன்று முக்கிய அமைப்புகளுக்கு நிதியுதவியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. 
 
1979-ஆம் ஆண்டு திரைக்கலைஞர் சிவகுமாரின் 100-வது திரைப்படமான ‘ரோசாப் பூ ரவிக்கைக்காரி’ படத்திற்காகப் பெற்ற முழுச் சம்பளமான ரூ.25,000-ஐ வங்கியில் முதலீடு செய்து, அதன் வட்டித் தொகையைக் கொண்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் சிவகுமார் அவர்களின் சொந்த நிதியில் இருந்து உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.

2006-ஆம் ஆண்டு முதல் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ இந்த அறக்கட்டளையின் பொறுப்பை முழுமையாக ஏற்று, ஆண்டுதோறும் உதவித்தொகைகளையும் விருதுகளையும் வழங்கி வருகிறது. 
 
ஓவியர் ஜீவானந்தனுக்கு விருது :

கல்வியில் சிறந்த மாணவர்களை ஊக்குவிப்பதோடு, ஓவியத் துறையில் நீண்ட காலம் சிறப்பாகப் பங்காற்றிய மூத்த கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் சிவகுமார் கல்வி அறக்கட்டளை விருது வழங்கி வருகிறது.

இதுவரை ஓவியர்கள் அம்புலிமாமா சங்கர், ராமு, ஜெயராஜ், மாயா, மணியம் செல்வன் ஆகியோர் பெற்றுள்ளனர்.

இந்த 47-வது ஆண்டு விழாவில் சிறந்த ஓவியரும் கலைத்துறையின் குறிப்பிடத்தக்க ஆளுமையுமான ஓவியர் ஜீவானந்தன் அவர்களுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 
25 மாணவ, மாணவியருக்குக் கல்வி ஊக்கத்தொகை!

பொருளாதாரச் சவால்களையும் பல்வேறு தடைகளையும் கடந்து, பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2,50,000 கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

மாணவர்களின் சாதனையைப் பாராட்டி, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  

தொடர்ந்து, விளிம்புநிலை மாணவர்களின் கல்விக்காகச் செயல்படும் கீழ்க்கண்ட மூன்று அமைப்புகளின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

1. திண்டிவனம் ‘தாய் தமிழ்ப் பள்ளிக்கு’ ரூ. 6,28,000/- நிதியுதவி:

திண்டிவனம் ரோசனை பகுதியில் ‘தாய்மொழிக் கல்வியே சிறந்த கல்விமுறை’ என்ற உயரிய சிந்தனையோடு கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் பள்ளி ‘தாய் தமிழ் தொடக்கப்பள்ளி’.

இப்பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்வியோடு மதிய உணவுத் திட்டத்தையும் வழங்கி வருகிறது.

இப்பள்ளியின் சீரிய பணிகளுக்குக் கடந்த 16 ஆண்டுகளாக அகரம் துணைநின்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, 2026 – 2027 கல்வியாண்டில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் மாதச் சம்பளப் பங்களிப்பிற்காக ரூ. 6,28,000/- வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் தாய் தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. 
 
2. ஈரோடு ‘சுடர்’ அமைப்புக்கு ரூ. 2,00,000/- நிதியுதவி:

ஈரோடு மாவட்டப் பழங்குடி குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அமைப்பு ‘சுடர்’.

சத்தியமங்கலம் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் பள்ளி இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கவும், கற்றல் இடைவெளியைப் போக்கவும் 25 மாலை நேரப் படிப்பகங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நற்பணிகளுக்குத் தேவைப்படும் நிதி ஆதாரத்தின் சிறு பகுதியாக ரூ. 2,00,000/-க்கான காசோலை சுடர் அமைப்பின் நிறுவனர் திரு. நடராஜன் அவர்களிடம் வழங்கப்பட்டது. 
 
3. ‘வாழை’ அமைப்புக்கு ரூ. 3,00,000/- நிதியுதவி:

சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்டு, தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் (Mentoring) பணிகளை மேற்கொண்டு வந்த ‘வாழை’ அமைப்பு.

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் அமைந்துள்ள 7 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து கல்வி மேம்பாட்டு பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

இவர்களின் தன்னார்வப் பணிகளுக்கு உதவும் வகையில், மாதந்தோறும் ரூ.25,000/- வீதம் இந்த ஆண்டிற்கான பங்களிப்பாக ரூ. 3,00,000/- வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் வாழை அமைப்பின் தன்னார்வலர்களிடம் வழங்கப்பட்டது. 

Comments (0)
Add Comment