‘கூலி’ படத்தில் ரஜினியின் பெயர் ‘தேவா’!

‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘லியோ’ என தொடர் வெற்றிகளை அளித்த லோகேஷ் கனகராஜ், கோடம்பாக்கத்தில் இன்றைய தினம் ‘மோஸ்ட் வாண்டட்’ இயக்குநராக உள்ளார்.

அவரது இயக்கத்தில் ரஜினி, நாயகனாக நடிக்கும் படம் ‘கூலி’. வேட்டையன் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படம் இது. அவருக்கு இது 171 – வது படம்.

இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் ‘மெகா ஸ்டார்’ நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

அனிருத் இசையமைக்கும் ‘கூலி’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் சன் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொடங்கியது. பின்னர் சென்னையில் ஆக்ரோஷமான சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் படத்தின் பிரதான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்தப் படப்பிடிப்பை தொடர்ச்சியாக 50 நாட்கள் படமாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அங்கு கொட்டித் தீர்க்கும் கனமழையால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பி விட்டனர்.

மழையும் தூவானமும் விட்டதும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலேயே தொடங்கவுள்ளது.

ரஜினி பெயர் ‘தேவா’:

‘கூலி’ படத்தில் ரஜினி கதாபாத்திரத்தின் பெயர் இப்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயர் ‘தேவா’.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான, தளபதி படத்தில் ரஜினியின் நண்பராக வரும், மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டி ‘தேவா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

‘கூலி’ படத்தின் ரஜினி எப்படி வருகிறார்? எனும் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த சுவரொட்டியில், கறுப்பு வெள்ளை பின்னணியில் ரஜினிகாந்த் காட்சி அளிக்கிறார். கையில் 1421 என்ற எண்ணிடப்பட்ட சுமை தூக்குவோர் ‘பேட்ச்’சை வைத்துக்கொண்டுள்ளார்.

கறுப்பு தலைமுடி, மீசை, தாடியுடன் தோற்றமளிக்கும் ரஜினியின் தோற்றம் அவரது ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment