எம்.ஜி.ஆரையும், பொதுவுடைமைச் சிந்தனையையும் பிரித்துப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அந்தக் கருத்துகள் அவருக்குள் ஊறிப் போய் இருந்தன. அவர் நடித்த கதாபாத்திரங்களும், அவரது படங்களில் இடம்பெற்ற பாடல்களும் இதனை வெளிப்படையாகவே பறைசாற்றக் கூடியவை.
50 கள் வரையிலான அவரது திரைப்படப் பாடல்கள் தமிழக மக்கள் மனதில் அழுத்தமாக இடம்பிடித்ததற்கு பொதுவுடைமைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகள் மிகப்பெரிய காரணம் என்பதை நாடறியும்.
எம்.ஜி.ஆரின் அரசியல் பரிணாமத்திலும் கூட அன்றைய பொதுவுடைத் தலைவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. தோழர் ஜீவா, பாலதண்டாயுதம், கல்யாணசுந்தரம் என அப்போதைய மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது எம்.ஜி.ஆர். ஈடற்ற மதிப்பும், இணையற்ற அன்பும் கொண்டிருந்தார்.
ஆலிவுட் திரையுலகில் அவர் விரும்பி ரசித்த நாயகன் எரோல் ஃப்ளின் வாழ்க்கையிலும், உச்சக்கட்ட நிகழ்வாக அமைந்தது, கியூப விடுதலைக்காக போராடி வென்ற பிடல் காஸ்ட்ரோவுடனான அவரது சந்திப்பே ஆகும். ஆம்… பொதுவுடைமை சித்தாந்த ஈடுபாட்டிலும் கூட, எம்.ஜி.ஆருக்கும் எரோல் ஃப்ளினுக்கும் இருந்த ஒற்றுமை நம்மை வியப்படையவே வைக்கிறது.
கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நாட்களில், Cuban Rebel Girls என்ற திரைப்படத்தை எடுப்பதற்காக எரோல் ஃப்ளின் கியூபாவுக்கு சென்றுள்ளார். இதுதான் அவர் நடித்து வெளிவந்த கடைசி திரைப் படமும் அதுதான்.
அப்போது பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்ததுடன், மலைப்பகுதியில் தலைமறைவாக இருந்த புரட்சியாளர்களுடன் தங்கி, அரசுப் படையுடனான மோதல்களிலும் ப்ளின் பங்கேற்றுள்ளார். அந்தக் காலக்கட்டத்தில், அரசுப் படையினர் நடத்திய தாக்குதலில் தனது கால் பகுதியில் காயம் ஏற்பட்டதாக ப்ளின் தனது கட்டுரையில் எழுதியிருக்கிறார்.
பிடல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி குறித்து எரோல் ப்ளின் எழுதிய “Me and Castro” மற்றும் “I fought with Castro” போன்ற கட்டுரைகள் The New-York Journal American பத்திரிகையில் வெளியாகி உள்ளன.
இத்துடன், கியூபா புரட்சி குறித்த ஆவணப்படம் ஒன்றையும் எரோல் ப்ளின் தயாரித்துள்ளார். இந்த ஆவணப்படத்தின் தொடக்கத்தில் எரோல் ப்ளின் நேரில் தோன்றி கியூப புரட்சி குறித்தும், பிடல் காஸ்ட்ரோ குறித்தும் விவரிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
ஆனால், கியூப புரட்சி குறித்த எரோல் ப்ளினின் கட்டுரைகள், ஆவணப்படம் ஆகிய அனைத்தும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக யாருக்கும் தெரியாமலே அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக காப்பகத்தில் இருந்துள்ளன.
எரோல் ப்ளினின் நூற்றாண்டான கடந்த 2009ன் போதுதான் இவை அனைத்தும் கண்டறியப்பட்டு, வெளிக் கொணரப்பட்டது.
எரோல் ப்ளின் குறித்து இன்றளவும் பேசப்படும் பல்வேறு சுவாரஸ்யமான சர்ச்சைக்குரிய நிகழ்வுகளில், அவரது கியூபப் பயணமும், பிடல் காஸ்ட்ரோவுடனான சந்திப்பும் ஒன்று.
திரைப்படத்தில் அட்வெஞ்சர் நாயகனாகவும், நிஜவாழ்வில் உல்லாசப் பிரியராகவும் வாழ்ந்த எரோல் ப்ளினுக்குள், விடுதலைக் கான புரட்சியை ஆதரிக்கும் தீவிர மனோபாவமும் இருந்தது கியூப பயணத்தின் போது வெளிப்பட்டதாக அவரது காதலிகளில் ஒருவரான Beverly Aadland தெரிவித்துள்ளார். இவர் கியூபன் ரிபெல் கேர்ள்ஸ் படத்தில் நடித்த இரண்டு நாயகிகளில் ஒருவரும் ஆவார்.
கியூபப் பயணத்தை, வாழ்வின் இறுதி நாட்களில் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரலாற்று வாய்ப்பாக ப்ளின் கருதியுள்ளார்.
இத்தனை பெரிய வாழ்வை வாழ்ந்த எரோல் ப்ளின், இறுதியாக கடனாளியாகி அவதிப்பட்டுள்ளார். அந்தக் கடனைத் தீர்ப்பது குறித்து பேசுவதற்காக கனடாவில் உள்ள வான்கூவருக்கு சென்ற ப்ளின், அங்கேயே மாரடைப்பால் மரணமடைந்தார்.
1959 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி அவரது 50 ஆவது வயதில் உயிர் பிரியும் வரை, புகழின் உச்சியிலேயே இருந்த எரோல் ப்ளின்னின் வாழ்க்கை, ஆலிவுட் ரசிகர்களுக்கு இன்று வரை ரசிக்கவும், அசைபோடவும் தீராத பாடுபொருளாகவே இருக்கிறது.
மூன்றுமுறை திருமணமான எரோல் ஃப்ளின், இறக்கும் தருவாயில் மூன்றாவது மனைவியைப் பிரிந்தே இருந்திருக்கிறார். அவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர்.
மகன் ஸீ ப்ளின் பத்திரிகையாளராக இருந்துள்ளார். 1971 ஆம் ஆண்டு வியட்நாம் போர் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றவர் அங்கேயே காணாமல் போனார். பல ஆண்டுகள் கழித்து ஸீ ப்ளின் இறந்து விட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மொடாக்குடியர், பெண்கள் பிரியர் எனச் சில முரண்கள் இருந்தாலும், வசீகரமான நாயகன், சாகசங்கள் மீது ஈடுபாடு, புரட்சியாளர்கள் மீது ஈர்ப்பு என எம்.ஜி.ஆருக்கும், எரோல் ப்ளினுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்துள்ளன.
இத்தகைய ஒத்த அம்சங்களே, எரோல் ப்ளினை தனது ரோல் மாடலாக வரித்துக் கொள்ள எம்.ஜி.ஆருக்கு தூண்டுதலாக இருந்திருக்கக் கூடும்.
1958ல் வெளியான நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு பின்னர், தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னன் என்ற இடத்திற்கு உயர்ந்த எம்.ஜி.ஆர், அதே காலக்கட்டத்தில் மறைந்த எரோல் ஃப்ளின்னை தமது மானசீக ரோல் மாடலாக கருதியது, மிகப்பெரிய வரலாற்று சுவாரஸ்டம் என்பதை மறுப்பதற்கில்லை!
-மனோலயன்
முற்றும்…..