“நான் பாட இன்றொரு நாள் போதுமா?”

திரைத் தெறிப்புகள் – 69 :

*

ஒரு “மேஜிக்” போல தமிழ்த் திரையிசையில் நிகழ்ந்த அற்புதம் என்றே இந்தப் பாடலைச் சொல்ல வேண்டும்.

1965-ம் ஆண்டில் ஏ.பி. நாகராஜன் அவர்களின் மேலான இயக்கத்தில் வெளிவந்த ‘திருவிளையாடல்’ படத்தில் இடம்பெற்ற “ஒரு நாள் போதுமா?” என்று துவங்கும் இந்தப் பாடலை பல ராகங்கள் ஒன்றிணைந்த இசை சாம்ராஜ்யமாகவே மாற்றியிருப்பார் திரை இசைத் திலகமான கே.வி.மகாதேவன்.

“ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா?
நான் பாட
இன்றொரு நாள் போதுமா?
நாதமா, கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா?
புது நாதமா சங்கீதமா ?
அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா?…”

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி, நாகேஷ் போன்றோரின் அருமையான நடிப்பில் உருவான ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் இந்தப் பாடலைப் பாடும் ஹேமநாத பாகவதராக அமர்க்களமாக நடித்திருப்பவர் மூத்த நடிகரான டி.எஸ்.பாலையா.

“ராகமா..
சுக ராகமா கானமா
தேவ கானமா?
என் கலைக்கிந்த திருநாடு சமமாகுமா?
நாதமா கீதமா ?”

பாண்டிய மன்னரின் அவையில் தனக்கு நிகராகப் பாடுகிறவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்கிற ஆணவத்தோடு பாலையா இந்தப் பாடலை பாடுகிறபடி நடித்திருப்பார்.

பாடல் காட்சியில் அவரது உடல் மொழியும், முகபாவங்களும் அட்டகாசமாக வெளிப்பட்டிருக்கும்.

“குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்,
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்.
அழியாத கலையென்று எனைப் பாடுவார்.
எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்…”

இப்பாடலை படு கம்பீரமாகப் பாடியிருப்பார் கர்நாடக இசையுலகில் தனித்துப் பெயர் பெற்றவரான பாலமுரளி கிருஷ்ணா.

தன்னுடைய வசியக் குரலில் பல ராக ஆலாபனைகளை நிகழ்த்தி அவர் காட்டியிருக்கும் ஜெகஜால வித்தைகள் இப்பாடலை உச்சநிலைக்குக் கொண்டு போயிருக்கும்.

வட இந்திய ராகத்தில் தொடங்கி தோடி, மோகனம் என்று பலவிதமான ராகங்கள் குழைந்த ஒன்றாக மாறி சிறப்புப் பெற்றிருக்கும் இந்தப் பாடல்.

“எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ?”

பார்ப்பதற்கு நிறைவான மனநிலையை அளிக்கும் இந்தப் பாடலை அழகாக காட்சிப்படுத்தி இயக்கியிருப்பார் ஏ.பி. நாகராஜன்.

படத்தின் கதைப்படி இந்தப் பாடலைப் பாடுகிற ஹேமநாத பாகவதர் கதாபாத்திரம், தோல்வியடைந்து அதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதை உணர்ந்து இயக்குநர் கேட்டுக்கொண்டபடி அருமையான ஒத்துழைப்பைத் தந்து பாடியிருப்பார் பாலமுரளி.

காலத்திற்கும் நிலைத்து நிற்கும் இப்பாடலைப் பாடிய பாலமுரளி கிருஷ்ணாவையும், இசைமயமான வரிகளால் இப்பாடலைப் பின்னி எடுத்திருக்கும் கவியரசர் கண்ணதாசனையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

“கலையாத மோகனம் சுவை நானன்றோ
மோகனம் சுவை நானன்றோ
மோகனம்…”

– என்று பாடல் நிறைவடையும் போது தியான அமைதி கூடிய மாதிரி இருக்கும்.

இந்த பாடல் வெளிவந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும், கால ஓட்டத்தை மீறி தனித்துத் தெரியும் அழகான வர்ணஜாலமான நுரைத்துளி போல, இப்போது கேட்டாலும் அல்லது பார்த்தாலும் எவ்வளவு மெருகேறிய அழகு.

*

-மணா.

Comments (0)
Add Comment