“இருபத் தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்”!

திரைத் தெறிப்புகள் – 64 :

*

மாதச் சம்பளம் வாங்குபவர்களின் சிறிது காலக் கொண்டாட்டத்தையும், சற்றே நீண்ட காலத் திண்டாட்டத்தையும், உடுமலை நாராயண கவியையும், கலைவாணரையும் விட்டால், வேறு யாரும் இவ்வளவு துல்லியமாகச் சொல்லிவிட முடியாது.

மாதச் சம்பளம் வாங்கும் பலரும் ஒன்றாம் தேதியையொட்டி முகம் நிறைந்த பூரிப்போடு இருப்பார்கள். அதே மாதம் 20-ம் தேதிக்குப் பிறகு வாடி வதங்கியதைப் போல் இருப்பார்கள்.

பொருளாதாரம் உருவாக்கும் இந்தத் தோற்ற மாற்றத்தைத் தான் சொல்லியிருக்கிறது 1955-ம் ஆண்டு வெளிவந்த ‘முதல் தேதி’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல்.

இந்தப் பாடலைக் கேலியும், கிண்டலுமான குரலுடன் அமர்க்களமாகப் பாடியிருப்பார் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்.

“ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்
கொண்டாட்டம் – சம்பளத் தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்
கொண்டாட்டம் – இருபத் தொண்ணிலே இருந்து
முப்பது வரைக்கும் திண்டாட்டம்…”

சாதாரண மக்களின் பேச்சு வழக்கில் இந்தப் பாடலை எழுதியிருப்பார் உடுமலை நாராயண கவி.

இத்திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக வரும் டி.ஏ. மதுரத்தைப் பார்த்து கலைவாணர் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் டி.ஜி. லிங்கப்பா.

“பண்ணிய வேலைக்குப் பலன் தருவது ஒண்ணிலே,
தேதி ஒண்ணிலே – மனுஷன்
படாத பாடு படுவது இருபத்தொண்ணிலே
இருபத்தொண்ணிலே…
முன்னே பட்ட கடனைத் தீர்ப்பான் ஒண்ணிலே –
தேதி ஒண்ணிலே – பின்னும்
மூணாம் பேஸ்து விழுந்தது போலே
முகம் சோர்ந்திடும் இருபத்தொண்ணிலே…”

மாதச் சம்பளம் வாங்கும் பலரும் பட்ஜெட் போடும் நிதியமைச்சரைப் பற்றியும் கவலைப்படுவார்கள். தங்கள் வீட்டில் போடும் பட்ஜெட்டில் அடிக்கடி விழும் துண்டைப் பற்றியும் கவலைப்படுவார்கள்.

இந்த எளிய உளவியல் பற்றித்தான் சொல்கிறது இந்தப் பாடல்.

“சினிமா ட்ராமா காட்சிகளுக்கு
டிக்கட் கிடைக்காதொண்ணிலே,
தியேட்டர் காலி, ஆளிருக்காது தேதி இருபத்தொண்ணிலே..
சிகரெட் பீடி வெற்றிலை பாக்கு விற்பனை
அதிகம் ஒண்ணிலே…”

மாதத்தின் முதல் வாரத்தில் பணக் கையிருப்பால் மனம் உற்சாகம்கொள்ளும். அதே மனம் பத்து நாட்கள் கழிந்த பிறகு, பிரஷர் ஏறி அவதிப்படும். கோபப்படும். எதற்கெடுத்தாலும் எரிச்சலும் படும்.

மாறிக் கொண்டேயிருக்கும் இந்த மனத்தைப் பற்றி, அதனால் குடும்பத்தில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் பற்றி எவ்வளவு நயமாக நையாண்டி செய்கிறது இந்தப் பாடல்!

“கொண்டவனும் கொண்டவளும் குழந்தை குட்டியோடு
கும்மாளம் கொட்டுவது ஒண்ணிலே – தேதி (ஒண்ணிலே,
அவர் – கூச்சல் கிளப்பிகிட்டு குஸ்திகளும் போட்டுக்கிட்டு
கோணிக் கொள்வார் இருபத்தொண்ணிலே – கொஞ்சம்

தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
தரையில் நடந்து வருவார் இருபத்தொண்ணிலே
நண்பர் நடமாட்டமெல்லாம் ஒண்ணிலே – எந்த
நாயும் எட்டிப் பார்க்காது இருபத்தொண்ணிலே….”

மத்திய, மாநில பட்ஜெட்கள் பற்றி புள்ளிவிவரங்களுடன் அலசி, ஆராய்பவர்கள் நிஜமாகவே பல குடும்பங்களில் பட்ஜெட் ஏற்படுத்தும் வாழ்வியல், உளவியல் தாக்கங்களைப் பற்றியும் யோசிக்கலாம்.

*

-மணா.

Comments (0)
Add Comment