எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்?

திரைத் தெறிப்புகள்-13:

மனிதர்கள் எல்லோருக்குமே வாழ்வில் இக்கட்டான நேரங்கள் வந்திருக்கலாம். நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்றுகூட மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் குரல் கேட்டிருக்கலாம்.

அப்படி மனதில் இருள் சூழ்ந்த மாதிரியான நேரத்தில் சிறு வெளிச்சக் கீற்றைப் போல் சில சொற்களோ, பேச்சுக்களோ, பாடல் வரிகளோ நம்பிக்கை ஊட்டலாம்.

அப்படிப்பட்ட நம்பிக்கை ஊட்டும் பாடல்தான் 1962-ம் ஆண்டு வெளிவந்த, இயக்குநர் ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம்பெற்ற,

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை”

– என்று துவங்கும் இந்தத் தத்துவரீதியான பாடலை எழுதியிருப்பவர் கவியரசர் கண்ணதாசன்.

இளம் பஞ்சைப் போன்ற மிக மென்மையான குரலில் இந்தப் பாடலை பாடியிருப்பார் P.B.ஸ்ரீனிவாஸ். பாடலுக்கு இசையமைத்தவர் எம்.எஸ். விஸ்வநாதன்.

இதே பாடலில் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி எவ்வளவு எளிமையாக சொல்லி இருக்கிறார் கவிஞர்.

“எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை – இதுதான் பயணம் – என்பது யாருக்கும் தெரியாது;
பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்”.

வாழ்க்கையின் எந்த விதமான அடுக்கில் இருக்கிறவர்களாக இருந்தாலும் எல்லோருக்கும் இந்தப் பாடலின் அர்த்தம் புலப்படும்.

தமிழ்த் திரைப்பட இசை வரலாற்றில் இந்தப் பாடலுக்கு எப்போதும் தனித்துவமான ஒரு மென்மையான இடம் இருக்கும்.

Comments (0)
Add Comment