“நிலவே என்னிடம் நெருங்காதே…”!

திரைத் தெறிப்புகள் – 74 :

*

மிகவும் மிருதுவான தன்மைக்கு உதாரணமாக, பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸின் குரலைச் சொல்லலாம். அந்தக் குரலில் தான் எவ்வளவு இனிமை? எவ்வளவு மென்மை!?

1966- ம் ஆண்டு வெளிவந்த ‘ராமு’ திரைப்படத்தில் இடம்பெற்ற,

“நிலவே என்னிடம் நெருங்காதே.
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை.

மலரே என்னிடம் மயங்காதே.
நீ மயங்கும் வகையில் நான் இல்லை…”

– என்று துவங்கும் இந்தப் பாடல் காட்சியைத் திரையில் பார்க்கும் போது, நளினமான கருப்பு – வெள்ளைக் காட்சியைப் போலத் தோன்றும்.

இப்பாடலைப் பாடுகிறவராக நடித்திருப்பார் ஜெமினி கணேசன்.

தன் மீதான காதலை மறுத்து, ஒருவர் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பாடலை மிகவும் எளிமையான கவித்துவத்துடன் எழுதியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்.

“கோடையில் ஒரு நாள் மழை வரலாம்.
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ!

பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்.
என் பார்வையில் இனி மேல் சுகம் வருமோ…”

மனதில் அமைதி இழந்து தத்தளிக்கும் நிலையை, எப்படி உணர்த்திருக்கிறார் பாருங்கள் கவிஞர். அதற்கு எவ்வளவு லாவகமாக இசையமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதன்.

“அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்.

நிம்மதி இழந்து நான் அலைந்தேன்.
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்…”

இந்தப் பாடல் வெளிவந்து நீண்ட காலம் ஆனாலும், இப்போது கேட்கும்போதும், மனதுக்கு நெருக்கமாக இருப்பதைப் போன்றதொரு உணர்வைத் தந்து கொண்டிருக்கிறது பி.பி.எஸ்-ஸின் குரல்.

திரையுலகில் மகத்தான பல சாதனைகளைப் படைத்த பாடகரான எஸ்.பி. பாலசுப்ரமணியம், எம்.எஸ்.விஸ்வநாதனிடம் பாடுவதற்கு வாய்ப்புக் கேட்டுப் போனபோது, பாடிய பாடலும் இதுதான் என்பது கூடுதல் சிறப்பு.

*

-மணா.

Comments (0)
Add Comment