“அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்”!

திரைத் தெறிப்புகள் – 89 

*

“மக்கள் எளிமையாக இருக்கிறார்கள். வாழ்வும் எளிமையாகத்தான் இருக்கிறது. அதைப் போலதான் என் பாடல்களும் எளிமையாக இருக்கின்றன” என்று கவியரசர் கண்ணதாசன் ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லியிருப்பார்.

அது மிகை இல்லை. அவருடைய பாடல்களைப் பற்றி, அவரே சொன்ன உண்மை. அந்த அளவுக்கு கவித்துவமும், எளிமையும் கலந்த பல திரையிசைப் பாடல்களைப் படைத்திருக்கிறார் கவிஞர்.

1974-ம் ஆண்டில் வெளிவந்த ‘என் மகன்’ திரைப்படத்தில் புகழ்பெற்ற இந்தப் பாடலும் கவிஞர் சொன்ன விதியின் கீழ் அடங்கும்.

“நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்?
உங்கள் ஆசை நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்…”

இத்திரைப்படத்தில் இந்தப் பாடலை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடும்போது, அந்தப் பாடல் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களின் மனசாட்சியைப் பார்த்துப் பாடுவதைப் போலிருக்கும்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் உணர்வுபூர்வமாக இந்தப் பாடலைப் பாடியிருப்பார் டி.எம். சௌந்தரராஜன்.

“உள்ளவரெல்லாம் நல்லவராவார்;
இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே…
பின்னே நன்மை தீமை என்பது என்ன?
பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே…”

கவிஞர், இத்திரைப்படப் பாடலில் சொல்லியிருப்பது அவர் எழுதிய காலத்திற்கு மட்டுமல்ல, தற்போதைய நிகழ்காலம்வரை எக்காலத்திற்கும் பொருந்துவதைப்போல அமைந்திருப்பது கவிஞருக்குக் காலம் தரும் அங்கீகாரம்.

இதற்கு அடுத்து வரும் எளிமையான வரிகளைப் பாருங்கள்.

“அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்.
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்.
சதிகாரக் கூட்டம் ஒன்று சபையேறக் கண்டேன்.
தவறென்று என்னைச் சொல்லும் பரிதாபம் கண்டேன்.

கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே,
கோவிலை இடிப்போன்
சாமியைப் போலே வாழ்கின்றான்.

ஊழல் செய்பவன் யோக்கியன் போலே,
ஊரை ஏய்ப்பவன்
உத்தமன் போலே காண்கின்றான்.”

இப்பாடலைக் கேட்கும்போது நம் மனதிற்கு முன்னே நம் சமூகத்தின் பல மோசமான நிகழ்வுகள் நினைவுக்கு வந்து போகலாம்.

தமிழ்ச் சமூகத்தை ஏமாற்றிய பல முகங்கள் நெருக்கமாக வந்து நிழலாடலாம்.

இப்பாடலில் உள்ள சில வரிகள் நிகழ்காலத்தின் நெருஞ்சி முள்லைப்போல உறுத்தலாம்.

எப்படிப்பட்ட சாத்தியங்களையெல்லாம் உள்ளடக்கியதாக இருக்கிறது கவியரசரின் இந்தப் பாடல் என்பது தனிச் சிறப்பு.

*

– மணா

*

Comments (0)
Add Comment