நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, குஷ்பூ, சினேகா, யோகிபாபு, அபிநயா, ராமச்சந்திர ராஜு, சுனில், இனியா, மைனா நந்தினி நடிப்பில் வெங்கட்ராகவனோடு சேர்ந்து எழுதி, சுந்தர்.சி இயக்கியிருக்கும் படம்.
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ், அவ்னி பிக்சர்ஸ் சார்பில் குஷ்பூ சுந்தர், ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் ஆகியோர் தயாரிப்பு.
போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு (நயன்தாரா) தூங்கும்போது கெட்ட கனவுகளாக வருகிறது. குதிரையில் ஒரு அமானுஷ்ய உருவம் வருவது, ஒரு குதிரைப் படையே வருவது போன்ற ஒலிகள் நிஜத்திலும் கேட்கிறது.
அம்மாவிடம் (ஊர்வசி) சொல்லி அவள் நம்பாத நிலையில், ஒரு நிலையில் அம்மாவுக்கும் அதே சப்தங்கள் கேட்கிறது. அமானுஷ்ய உருவங்கள் தெரிய ஆரம்பிக்கிறது.
தவிர மைலாஞ்சி என்ற ஊருக்குப் போ என்று குரல்கள் கேட்கிறது. அந்த ஊர் எங்கே இருக்கிறது என்றே அவர்களுக்கு தெரியவில்லை.
தீய சக்திகளை ஏவி ஆட்களைக் கொன்று, கொலை செய்ய சொன்னவர்களிடம் இருந்து கோடிகோடியாக சம்பாதிக்கும் மந்திரவாதி ஒருவரின் (ராமச்சந்திர ராஜு) மகன் (நிதின் சத்யா),
அப்படி ஒரு நபருக்காக ஒரு குழந்தையை நரபலி கொடுக்க முயல, மேற்படி பயந்தாங்குளி கான்ஸ்டபிளின் உடலுக்குள் ஒரு சக்தி வந்து அவனைக் கொன்று குழந்தையை காப்பாற்றுகிறார்.
அவளுக்கு புரமோஷன் கிடைக்கும் சமயத்தில் மைலாஞ்சி ஊர் பற்றி அவளுக்கு தெரிய வருகிறது.
பணி மாறுதல் பெற்று அம்மாவோடு அங்கே போய் பணியில் சேர்கிறார் கான்ஸ்டபிள்.
அங்குள்ள கோவிலில் தெய்வாம்சமாக அமர்ந்து இருக்கும் இரு பெண்கள் (குஷ்பூ, சினேகா) கான்ஸ்டபிளை வரவேற்கின்றனர்.
‘நீ எப்போது அழைத்தாலும் உதவிக்கு வருவோம்’ என்று சொல்கின்றனர்.
அந்த ஊரில் பேய்மலை என்ற பெயரில் இருக்கும் ஒரு குன்றில் தீய சக்திகள் இருப்பதாக மக்கள் சொல்கின்றனர்.
மகனை இழந்த மந்திரவாதி, கான்ஸ்டபிளைக் கொல்ல அங்கு வருகிறான்.
கான்ஸ்டபிளால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர் (சுனில்), மைலாஞ்சியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக புதைக்குழியில் இருக்கும் சூனியக்காரியை (ரெஜினா கசாண்ட்ரா) புதைக் குழியில் இருந்து எழுப்புகிறான்.
ஜெயிலில் இருக்கும் அரசியல்வாதி ஒருவரின் (பழ. கருப்பையா) மகனை (துனியா விஜய்) தனது இரண்டாயிரம் ஆண்டு கணவன் என்கிறாள் சூனியக்காரி.
சூனியக்காரி பழி வாங்க வந்திருப்பது பெண் கான்ஸ்டபிளை என்பது புரிகிறது. ஏனென்றால் அந்த கான்ஸ்டபிள்தான் மூக்குத்தி அம்மன்.
காரணம்?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வளநாட்டை ஆண்ட அரசனின் மகன்தான் இப்போது அரசியல்வாதி மகனாக இருப்பவன்.
அந்தப் பிறவியில் அவன் சூனியக்காரியின் அழகில் மயங்கி அவளோடு வாழ, அது பிடிக்காத மன்னன் தனது மகளின் (அபிநயா) குழந்தையை அரசனாக்க முடிவு செய்கிறான்.
ஆனால், சூனியக்காரியின் வயிற்றில் வளரும் தனது வாரிசுதான் மன்னனாக வேண்டும் என்று சூனியக்காரி ஆசைப்பட, அவளது கணவன், தனது தந்தையாகிய அரசனையும் தங்கையையும் தங்கையின் கணவரையும் கொன்று விடுகிறான்.
காப்பாற்றப்பட்டு ஒரு குயவர் வீட்டில் வளரும் மழலைச் சிறுவனை, சூனியக்காரியும் அவளது கணவனும் கொல்ல முயல, அந்தக் குழந்தையைக் காப்பாற்றும் மூக்குத்தி அம்மன் இருவரையும் கொல்ல,
சூனியக்காரி மட்டும் மண்ணுக்குள் புதைந்து போகிறாள். அப்போது சூனியக்காரியின் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துபோக, மூக்குத்தி அம்மன் குற்ற உணர்ச்சியில் கோவிலை விட்டுப் போய்விடுகிறது.
இப்போது மண்ணில் புதைந்த சூனியக்காரி வெளியே வர, மந்திரி மகன் முற்பிறவி விஷயங்களை அறிய, கான்ஸ்டபிளாக இருக்கும் மூக்குத்தி அம்மன் மைலாஞ்சிக்கு வந்திருக்க,
சூனியக்காரி, அவளது கணவனாகிய மந்திரி மகன், மந்திரவாதி… இவர்கள் மூவரும் சேர்ந்து மூக்குத்தி அம்மனை வென்று, மேலும், நரபலிகள் கொடுத்து மரணம் இல்லா ஆயுளும் மாபெரும் சக்திகளும் பெற முயல, நடந்தது என்ன என்பதே மூக்குத்தி அம்மன் 2.
இதே தயாரிப்பளார் ஐசரி கணேஷ் தயாரிக்க இதே நயன்தாரா மற்றும் ஊர்வசி நடிக்க ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் முதல் படம் 2020 ஆம் ஆண்டு வந்தது.
மற்றபடி இரண்டு படத்துக்கும் சம்மந்தம் இல்லை.
கான்ஸ்டபிளாக இயல்பாக அறிமுகம் ஆகும் நயன்தாரா, சப்தங்கள் கேட்டு பயப்படுவது, ஊர்வசியும் அதில் சேர்வது என்று இயல்பாக படம் துவங்குகிறது.
நரபலிக்கு முயலும் காட்சிகள், நடக்கும் சம்பவங்கள் என்று பரபரப்பாக படம் போகிறது. மைலாஞ்சிக்கு அழைக்கும் குரல் ஆர்வம் தூண்டுகிறது. யோகிபாபுவின் அறிமுகக் காட்சி காமெடியும் சிறப்பு.
சூனியக்காரி மீண்டும் எழும் காட்சி திரில். அந்தக் காட்சிகள், கலைப் பொருட்கள், சி.ஜி மற்றும் ஏ.ஐ. என்று எல்லா வகையிலும் சிறப்பாக இருந்தது.
ஒரு பக்கம் மந்திரவாதியின் பூஜைகள், இன்னொரு பக்கம் சூனியக்காரி, அவள் கணவனின் ஆக்ரோஷ காத்திருப்பு, கான்ஸ்டபிள் அவர்களிடம் மாட்டுவது எல்லாம் பரபரப்பு.
ஒரு மண் மேட்டில் கான்ஸ்டபிளாக உட்காரும் நயன்தாரா, மழை பெய்து மண் கரைந்து சிங்க வாகனத்தில் உட்கார்ந்து இருக்கும் மூக்குத்தி அம்மனாக வெளிப்படும் காட்சியும் சிறப்பு.
வளநாட்டு அரசன் கதை, சூனியக்காரி பூஜை செய்யும் சாத்தான் சிலை, மாய மந்திர ஆயுத்தங்களோடு மோதும் காட்சிகள் எல்லாமே ரகளை.
எல்லாமே இடைவேளை வரை மட்டுமே. அதிலும் கூட ஸ்டேஷன் வாசலில் நயன்தாரா ஆடும் குரூப் சாங். முடியல நயன். அப்பவே சில அறிகுறிகள் தெரிந்தது.
ஜஸ்ட் லைக் தட் நடித்து விட்டுப் போகிறார் நயன்தாரா.
மிக அட்டகாசமாக பிரம்மாதமாக நடித்திருக்கிறார் ரெஜினா கசாண்ட்ரா. தோற்றம், உடல் மொழிகள் யாவும் அபாரம். சில காட்சிகளில் நயன்தாராவை விட பெஸ்ட்.
ஊர்வசிக்கு வழக்கமான கேரக்டர்தான். வழக்கமான தத்து பித்து நடிப்புதான்.
மூக்குத்தி அம்மனுக்கு உதவ வரும் இரண்டு தேவியர்களாக குஷ்பூவும் சினேகாவும் அசத்துகிறார்கள். இருவரும் ஆடும் நடனப் பாட்டும் கிளைமாக்சில் உண்டு. அதில் சினேகா பட்டையைக் கிளப்புகிறார்.
பின்னணி இசை, பாடல் இசை இரண்டிலும் உருவேற்றுகிறார் ஹிப் ஹாப் ஆதி.
கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. அரங்க அமைப்பு, கலை இயக்கம், சில பல இடங்களில் கணினி வரைகலை வண்ணங்கள் கவர்கினறன.
நயன்தாரா தான் மூக்குத்தி அம்மன் என்பது படம் துவங்குவதற்கு முன்பே எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், அது படத்தில் வருவதற்கு இடைவேளை வரை காத்திருக்க வேண்டி இருப்பதே படத்தின் முதல் பலவீனம். எனில் இரண்டாம் பாதி எப்படி இருக்க வேண்டும்?
இரண்டாம் பகுதியில் ஓவர் டோஸ். முதல் பாதியில் சிறப்பாக இருந்த எல்லா விஷயங்களும் இப்போது டல்லடிக்கின்றன. ஒரு நிலையில் வீடியோ கேம் பார்க்கும் உணர்வு வந்து விடுகிறது.
பிளாஷ்பேக் கதை ரொம்ப இழுக்கிறது. இதனால் பென்னி ஆலிவரின் எடிட்டிங்கும் பலன்தரவில்லை.
ஒரு நிலையில் காமெடி என்ற பெயரில் வரும் காட்சிகள் அமெச்சூராக, செயற்கையாக, வறட்சியாக இருக்கின்றன.
சினேகா எல்லாம் நன்றாகவே ஆடி இருந்தாலும் கிளைமாக்ஸ் எல்லாம் ரொம்பப் பழசு.
இந்தப் படத்தை தமிழைவிட தெலுங்கு, கன்னடத்தை குறி வைத்து எடுத்திருக்கிறார்கள். இடைவேளைக்கு பிறகு வரும் காமெடி காட்சிகள் அப்படித்தான் இருக்கின்றன.
படத்தின் முதன்மையான ஆண் கதாபாத்திரத்தில் துனியா விஜய் என்ற கன்னட நடிகர் இருப்பது அதையே உணர்த்துகிறது.
சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் தொண்ணூறுகளில் ராம நாராயணன் எடுத்த ‘ஆடிவெள்ளி’, தெலுங்கில் கோடி ராமகிருஷ்ணா எடுத்து தமிழிலும் பட்டையைக் கிளப்பிய ‘அம்மன்’ போன்ற ஒரு படத்தை (கடைசிக் காட்சியைப் பார்க்கும் போது ரம்யா கிருஷ்ணன் எல்லாம் ஞாபகம் வருகிறார்.) இப்போது கொடுத்து இருக்கிறார் சுந்தர் சி.
ராம நாராயணனுக்கு சுந்தர்.சி ஒரு படம் இயக்குவதாக இருந்தது கதை எல்லாம் சொல்லி அப்புறம் நின்று போனது என்று ஒரு செய்தி உண்டு. அந்தக் கதை இதுதானோ என்ற எண்ணம் வருகிறது.
ஆடிவெள்ளியும் அம்மனும் இப்போது வந்தால் ஓடுமா? “ம்” எனில் இதுவும் வெற்றி. “ம்ஹும்” எனில் கஷ்டம்.
மூக்குத்தி அம்மன்2… ரசிகர்களுக்குக் காது குத்தும் திருவிழா!
— சு. செந்தில்குமரன்