மோகன்லால்- மீனா ஜோடியாக நடித்த, மலையாளப்படமான ‘திரிஷ்யம்’ 2013-ம் ஆண்டு வெளியானது. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படம் பெரிய வரவேற்பை பெற்றதோடு வசூலும் குவித்தது.
இதை அடுத்து, தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் உருவாகி வெற்றி பெற்றது.
இதன் இரண்டாம் பாகமான ‘த்ரிஷ்யம் 2’ படம் 2021-ம் ஆண்டு வெளியானது. இதுவும் அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் ‘திரிஷ்யம்’ மூன்றாம் பாகம் உருவாகும் என டைரக்டர் ஜீத்து ஜோசப் சில ஆண்டுகளாகவே கூறி வந்தார்.
நேற்று இது நனவானது. ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் பூஜையுடன் நேற்று தொடங்கியது.
மோகன்லால், ஜீத்து ஜோசப், தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் உள்ளிட்ட படக்குழுவினர் பூஜையில் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை மோகன்லால், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
55 நாட்களில் படப்பிடிப்பை முடித்து விட்டு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
“சரியான கதை கிடைக்கும் பட்சத்தில் திரிஷ்யம் நான்காம் பாகத்தையும் உருவாக்குவோம்” என டைரக்டர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.
– பாப்பாங்குளம் பாரதி