கடந்த 5-ம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தி கோட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். விஜய்யின் கடைசி படத்தை எச். வினோத் இயக்குவது உறுதியாகி உள்ளது.
இது விஜய்க்கு 69-வது படம், இந்தப் படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் தொடர்ந்து கசிந்து வருகின்றன.
இதில் சிம்ரன், மலையாள இளம் நடிகை மமிதா பைஜு ஆகியோர் நாயகிகளாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் மோகன்லாலையும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக மலையாள இணைய தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே 2014-ம் ஆண்டு ரா.தி. நேசன் இயக்கத்தில் வெளிவந்த ஜில்லா படத்தில் விஜய்க்கு தந்தையாக மோகன்லால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளதாக படக்குழு திட்டமிட்டு உள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் திருப்போரூர் பகுதிகளில் படப்பிடிப்புக்காக அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பின் அறிவிப்பை இன்று மாலை 5 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.