எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தை அவரது ரசிகர்கள் மந்திரமாக உச்சரித்த காலமொன்று உண்டு. அதற்கு நேர்மாறாக, தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் எம்ஜிஆர் வாழ்ந்த காலமும் உண்டு.
இவ்விரண்டையும் கடந்துதான் அவர் காலத்தை வென்ற காவிய நாயகனாக உயர்ந்து விளங்குகிறார். இதற்கு நடுவேதான், தான் ஹீரோவாக நடிப்பது தொடருமா தொடராதா என்று அவர் குழம்பிய தருணங்களும் நிரம்பியிருந்தன.
அறுபதுகளின் இறுதியில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறுவதற்கு முன்னர், எம்ஜிஆரை முன்னணி நட்சத்திரமாக்கும் வகையில் சில படங்களின் வெற்றிகள் அமைந்தன.
அவற்றில் முதன்மையாக இருப்பது ‘மருதநாட்டு இளவரசி’ திரைப்படம் காட்டிய வெற்றிப் பாதை. மலைக்கள்ளன், நாடோடி மன்னன், திருடாதே என்று பல சூப்பர்ஹிட்களை அவர் தருவதற்கு அடித்தளமிட்ட படம் இதுதான்.
அரிதாகக் கிடைத்த வாய்ப்புகள்!
1937இல் சதிலீலாவதியில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்து தன் திரைவாழ்வைத் துவக்கினார் எம்ஜிஆர். அதன்பின்னர் தக்ஷயக்ஞம், மாயா மச்சீந்திரா உட்பட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
இடைப்பட்ட காலத்தில் ‘சாயா’ என்ற படத்தில் அவர் நாயகனாக நடித்து அது பாதியிலேயே கைவிடப்பட்டது. ஒருவர் ஹீரோவாக நடிக்கும் படம் பாதியில் நின்றுவிட்டால், அதன்பின் மற்றொரு வாய்ப்பு கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்த காலமது.
சாயாவின் இயக்குனராகப் பணியாற்றிய நந்தலால், ‘தொழிலை நேசித்துச் செய், எந்த நேரத்திலும் அது உன்னைக் கைவிடாது’ என்று எம்ஜிஆருக்கு அறிவுரை வழங்கிவிட்டு சென்னைக்குக் கிளம்பினாராம்.
அந்தப் படத்துக்காகத் தன் இருப்பிடத்தையே கோவைக்கு மாற்றியிருந்தாராம் எம்ஜிஆர். கிட்டத்தட்ட மீண்டும் பூஜ்யத்தில் இருந்து கணக்கைத் தொடங்கும் அளவுக்கு தினசரி வாழ்க்கையின் நெருக்கடி.
தினமலர் வாரமலர் இதழில் எம்ஜிஆர் எழுதிய ‘நான் ஏன் பிறந்தேன்’ கட்டுரையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் ஹீரோ வாய்ப்பு!
நாயகனாக நடித்தபிறகு குணசித்திர வேடம், வில்லன் பாத்திரம் போன்றவற்றில் நடிப்பது அக்காலத்தில் சகஜமான விஷயமல்ல (இப்போதும் கூட..). தனக்கு உடன்பாடில்லாதபோதும், குடும்ப வறுமையைக் கருத்தில் கொண்டு பல படங்களில் சிறுவேடங்களில் தலைகாட்டினார் எம்ஜிஆர்.
1941க்குப் பிறகு வெளியான அசோக்குமார், வேதவதி அல்லது சீதா ஜனனம், தமிழ் அறியும் பெருமாள், அரிச்சந்திரா, சாலிவாகனன், ஸ்ரீமுருகன் போன்ற படங்களில் அப்படித்தான் எம்ஜிஆரின் பங்களிப்பு கலந்தது.
1947இல் ஒருவழியாக எம்ஜிஆரின் ஹீரோ கனவு நனவானது. ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் ‘ராஜகுமாரி’ திரைப்படம் மூலமாக அவர் நாயகன் ஆனார்.
இந்த படத்தில்தான் முதன்முதலாக மு.கருணாநிதி வசனம் எழுதினார். ஆனால், ராஜகுமாரி பாடல் புத்தகத்தில் கதை வசனம் இயக்கம் ஏ.எஸ்.ஏ.சாமி என்றும் உதவி வசனம் கருணாநிதி என்றும் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு எம்ஜிஆர் நாயகனாக நடிக்கப் பேருதவி செய்தார். பின்னாட்களில் அவரது இசையமைப்பில் மலைக்கள்ளன், நாடோடி மன்னன், திருடாதே உட்படப் பல படங்களில் எம்ஜிஆர் பணியாற்றினார்.
மீண்டும் சிறுவேடங்கள்!
ராஜகுமாரி வெற்றியை ஈட்டியபோதும், எம்ஜிஆரின் நாயக அந்தஸ்து தொடர்கதையாக மாறவில்லை. அப்படத்தில் எம்ஜிஆர் என்ன செய்தார் என்றே தயாரிப்பாளர்கள் யோசித்தனர்.
ஏனென்றால், பி.யு.சின்னப்பாவும் தியாகராஜ பாகவதரும் இல்லாத காரணத்தினால் டி.ஆர்.மகாலிங்கம், எம்.கே.ராதா, கே.ஆர்.ராமசாமி உட்படப் பல நாயகர்களின் படங்கள் தொடர் வெற்றிகளைப் பெற்று வந்தன. அவர்களில் சிலர் பின்னணி பாடுபவர்களாகவும் இருந்தனர்.
பாடும் திறமை பெற்ற ஹீரோ என்பது அப்போதைய ட்ரெண்டாக இருந்ததால், எம்ஜிஆரின் மீது ரசிகர்கள், திரைத்துறையினரின் கவனம் முழுதாகப் பதியவில்லை.
நாடகங்களில் முரட்டுத்தனமான வேடங்களில் ஸ்டண்ட் செய்பவராக விளங்கியவருக்குத் திரைத் துறையில் அப்படியான வாய்ப்புகள் அமையவில்லை.
அபிமன்யூ, மோகினி, ராஜமுக்தி, ரத்னகுமார் ஆகிய படங்களில் இரண்டாவது நாயகனாக, குணசித்திர பாத்திரமாக உருமாறினார் எம்ஜிஆர்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் நாயகன் ஆவதற்குத் துணைபுரிந்தன மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘மந்திரிகுமாரி’ மற்றும் ஜி.கோவிந்தன் கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘மருதநாட்டு இளவரசி’.
கிடைத்தது நாயக அந்தஸ்து!
எம்ஜிஆரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்து படம் தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையை பட அதிபர்களுக்கு அளித்த திரைப்படம் ‘மருதநாட்டு இளவரசி’. தான் எழுதிய ‘நான் ஏன் பிறந்தேன்’ நூலில் தன் திரையுலக வாழ்வில் நிகழ்ந்த திருப்பங்களில் இரண்டாவதாக இதனைக் குறிப்பிட்டிருக்கிறார் எம்ஜிஆர்.
அவர் இப்படிச் சொன்னதற்குக் காரணமிருக்கிறது. இப்படத்தில் எம்ஜிஆரின் சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி வில்லனாக நடித்திருந்தார். பின்னாளில் அவரது துணைவியாக விளங்கிய வி.என்.ஜானகி இப்படத்தின் நாயகியாக இடம்பிடித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கையை ஏற்றிருந்த எம்ஜிஆருக்கு அண்ணாவின் மீதும் திமுக மீதும் பற்று ஏற்படக் காரணமாக இருந்த கலைஞர் மு.கருணாநிதியுடனான நட்பு பலப்படுவதற்கும் இப்படமே வித்திட்டது.
வாள் சண்டையிடுவது, கேமிரா நோக்கி வசனம் பேசுவது, திரையில் காதலைப் பொழிவது என்று அக்காலத்து நாயகர்களுக்கான இலக்கணங்களைப் பூர்த்தி செய்தார் எம்ஜிஆர். இப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் அவர் வெற்றுடம்புடன் நடித்திருப்பார்.
கருணாநிதியுடன் கைகோர்த்த எம்ஜிஆர்
ராஜகுமாரி (1947), அபிமன்யூ (1948) படங்களுக்குப் பின் 1950இல் வெளிவந்த மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி படங்களில் கருணாநிதியின் வசனங்களைத் திரையில் ஒலித்தார் எம்ஜிஆர்.
இதே காலகட்டத்தில் அவரது கைவண்ணத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் சிவாஜி வசனம் பேசியதற்கும், இப்படங்களில் எம்ஜிஆர் வசனங்களை உச்சரித்த பாங்கிற்கும் பெரும் வித்தியாசம் உண்டு.
நாடக மேடை அனுபவம் உண்டு என்றாலும், சினிமா எனும் கலையின் நுட்பத்தைத் தனக்கேற்ற வகையில் எம்ஜிஆர் வரித்துக்கொண்டார்.
இந்த வித்தியாசம்தான் எம்ஜிஆர், சிவாஜி என்ற இருபெரும் சிகரங்கள் தமிழ் திரையின் போக்கைத் தீர்மானிக்கக் காரணமாக அமைந்தது.
நாம், மலைக்கள்ளன், புதுமைப்பித்தன், அரசிளங்குமரி, காஞ்சித்தலைவன் போன்ற படங்களில் இருவரும் இணைந்து பணிபுரிந்தனர்.
அது மட்டுமல்லாமல் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையிலும் எம்ஜிஆர் ஒன்றிணைந்து செயல்பட்டதை தமிழகம் அறியும்.
நாயகியை மையப்படுத்திய டைட்டில்!
நாயகனை மட்டுமே மையப்படுத்திப் படத்தின் பெயரைச் சூட்டுவது அப்போது வழக்கத்தில் இல்லை. 1970களில் வெளியான பெரும்பாலான எம்ஜிஆர் படங்கள் தனிப்பிறவி, உலகம் சுற்றும் வாலிபன், காவல்காரன், இதயக்கனி என்று அவரது பாத்திரத்தை முதன்மைப்படுத்தியே பெயரிடப்பட்டன.
ஆனால், ஆரம்பகாலத்தில் எம்ஜிஆர் நடித்த படங்கள் இதற்கு மாறாக அமைந்திருந்தன. சதிலீலாவதி, ராஜகுமாரி, மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி வரை நாயகி அல்லது முதன்மை பெண் பாத்திரத்தை வைத்தே அவர் நடித்த படங்களின் டைட்டில் அமைந்தன.
மர்மயோகி, சர்வாதிகாரி, அந்தமான் கைதி என்று எம்ஜிஆர் நடித்த பிற படங்களும்கூட ஹீரோவின் கீர்த்தியைச் சொல்லும் விதமாக டைட்டில் அமைக்கப்படவில்லை.
மலைக்கள்ளன் படம் முதலே மாறத்தொடங்கி நாடோடி மன்னன் படத்துக்குப் பிறகு அது கட்டாயமாகிப்போனது தனிக்கதை.
பின்பாதியில் எம்ஜிஆர் ராஜ்ஜியம்!
குறிஞ்சி, மருதம் என்று இரு நாடுகள். குறிஞ்சி நாட்டு மன்னனுக்கு சித்ரா, சிங்காரி என்று இரு மனைவிகள் என்றும், அவர்கள் கர்ப்பமாக இருக்கின்றனர் என்றும் தகவல் திரையில் தோன்றப் படத்தின் திரைக்கதை தொடங்குகிறது.
சிங்காரியின் சகோதரன் துர்ஜயன் தன் மருமகனே அரசாள வேண்டுமென்று விரும்புகிறார். அதற்காக, சித்ராவை அரியணையில் இருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறார்.
சிங்காரியைக் கொல்லும் வகையில் சித்ரா விஷம் வைக்க முயன்றதாக மன்னரிடம் குற்றம்சாட்டுகிறார். சித்ராவின் மறுமொழிகளைக் கேட்க குறிஞ்சி மன்னர் விரும்பவில்லை.
அதே நேரத்தில், சித்ராவைக் கொல்ல முயற்சி செய்கிறார் துர்ஜயன்.
தானும் குழந்தையும் உயிர் பிழைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அரண்மனையில் இருந்து வெளியேறுகிறார் சித்ரா.
தனது சூழ்ச்சிகளை அறிந்த அமைச்சர் அன்பார்ந்தரைக் கொன்று புதைக்கிறார் துர்ஜயன்.
அமைச்சர் ராணி சித்ராவுடன் ஓடிவிட்டதாக மன்னரிடம் பழி சுமத்துகிறார்.
பெற்ற குழந்தையைக் கார்மேகம் என்பவரிடத்தில் ஒப்படைத்துவிட்டு, ஆண்கள் நுழையமுடியாத காளி கோயிலுக்குள் அடைக்கலம் ஆகிறார் சித்ரா.
சிங்காரிக்குப் பிறந்த குழந்தை மரணமடைய, அந்த இடத்துக்கு வேறொரு ஆண் குழந்தையைக் கொண்டுவருகிறார் துர்ஜயன்.
25 ஆண்டுகள் கழித்து, மீண்டும் விதி விளையாடுகிறது. கார்மேகத்தின் மகனாக காண்டீபன் எனும் பெயரில் வளர்கிறார் சித்ராவின் மகன். அதேநேரத்தில், பெண் பித்து படித்த இளவரசன் ரவுத்திரனாக வளர்கிறார் துர்ஜயனால் அழைத்துவரப்பட்டவர்.
சந்தர்ப்ப சூழலினால் ரவுத்திரனிடம் சண்டையிட்டு குறிஞ்சியை விட்டு நண்பருடன் வெளியேறுகிறார் காண்டீபன். மருதநாட்டுக்கு இருவரும் செல்கின்றனர்.
மருதநாட்டு இளவரசி ராணி தன் தோழியுடன் சாதாரணப் பெண் போல ஆற்றங்கரைக்கு வர, அங்கு காண்டீபனும் அவரது தோழனும் இருப்பதைப் பார்க்கிறார். அவர்களோடு வம்பு வளர்க்கிறார். பின்னால் இந்த நட்பு வளர்ந்து காதலாகிறது.
அதேநேரத்தில் ரவுத்திரனுக்குப் பெண் தர மறுத்ததால் மருத நாட்டின்மீது திடீரென்று போர்வீரர்களை அனுப்புகிறார் துர்ஜயன்.
ராணியைக் கைது செய்து குறிஞ்சிக்கு ரவுத்திரனும் துர்ஜயனும் அழைத்துப் போக, தன் காதலியைக் கைபிடிக்க வேண்டி மீண்டும் குறிஞ்சிக்குச் செல்கிறார் காண்டீபன்.
அதன்பின் துர்ஜயனின் சதிகளை முறியடித்து, சித்ராவின் வாயால் தான் அந்நாட்டின் இளவரசன் என்று காண்டீபன் அறிவதுடன் படம் முடிவடைகிறது.
படம் தொடங்கி 27 நிமிடங்களுக்குப் பின்னரே எம்ஜிஆரின் அறிமுகம் நிகழும்விதமாகத் திரைக்கதை அமைந்திருந்தது. இது, அக்காலத்தில் முன்கதைக்குத் தந்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
ஆனாலும், எம்ஜிஆரின் நடிப்புத் திறமையை வெளிக்காட்டும் வகையில் படத்தின் நகர்வு அமைந்திருந்ததால் பின்பாதியில் அவர் ராஜ்ஜியம் அமைத்தார்.
திரையில் பேசிய கொள்கைகள்!
“மக்கள் எல்லோரும் சமமாக வேணும்; ஏற்றத்தாழ்வு மறைந்தாகணும்” என்று இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு எம்ஜிஆர் வாயசைத்திருப்பார். பிற்காலத்தில் தனது நாயக பாத்திரத்துக்கான அறிமுகப் பாடல்களில் இதுபோன்ற கருத்துகள் இடம்பெறுவதை அவர் வழக்கமாக்கிக் கொண்டார்.
அதேபோல படத்தின் இறுதியில் தான் குறிஞ்சி நாட்டு இளவரசன் அல்ல என்றும், அந்நாட்டு மக்களின் தலைவன் என்றும் அவர் பேசும் வசனம் இடம்பெற்றிருக்கும்.
வசனகர்த்தா கருணாநிதியும் நாயகன் எம்ஜிஆரும் பின்னாட்களில் அரசியல் களத்தில் இவ்வரிகளைத் தங்களுக்கானதாக மாற்றிக்கொண்டது நிச்சயம் ஆச்சர்யம்தான்.
எம்ஜிஆரின் மயக்கும் அழகு!
வழக்கமான அரச கதை என்றாலும், அழகு தமிழில் அமைந்த வசனங்கள் தியேட்டரில் ரசிகர்களின் கைத்தட்டல்களைப் பெற்றன. அதற்கேற்றவாறு வசனங்களை தெளிவாக உச்சரித்து நடித்திருந்தனர் மருதநாட்டு இளவரசியில் நடித்த நடிகர் நடிகைகள்.
குறிப்பாக எழுச்சியூட்டும் வசனங்களையும் இயல்பாக வெளிப்படுத்தித் தனது நடிப்பு பாணி வேறு என்று உணர்த்தியிருந்தார் எம்ஜிஆர். தன் ஆதர்சமாக எம்.கே.ராதா போன்ற நாயகர்களை அவர் போற்றியதும், ஹாலிவுட் திரைப்படங்களின் மாபெரும் ரசிகனாகத் திகழ்ந்ததும் கூட இதற்குக் காரணங்களாக இருந்திருக்கலாம்.
புளிமூட்டை ராமசாமியை இளவரசனாக நடித்தவர் தாக்க, அதனைத் தடுக்கும் எம்ஜிஆர் ‘யாராவது தும்மினால் துள்ளிவிழுவது அவனது பிறவிக்குணம்’ என்பார். இதுவே இப்படத்தில் அவரது முதல் வசனம்.
பாகவதர் டைப் தலைமுடி, ஸ்லிம்மான உடல்வாகு, இயல்பான உடல்மொழி என்று வித்தியாசமான எம்ஜிஆரை இதில் பார்க்க முடியும்.
தனக்கென்று தனி பாணியை கைக்கொண்ட பிறகு, இம்மூன்றையும் அவர் துறந்தார்.
அதற்குள்ளாகவே, அவர் தாய்க்குலங்களில் பேரதரவு பெற்ற அழகு நாயகனாக மாறியிருந்தார். 1960களுக்கு பிறகே அவர் அதீத மேக்கப் மற்றும் கண்ணைக் கவரும் காஸ்ட்யூம்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
பி.வாசுவுக்கு பதில் சொன்ன எம்ஜிஆர்!
எம்ஜிஆரின் ஆஸ்தான மேக்கப்மேன் பீதாம்பரத்தின் மகனான இயக்குனர் வாசு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலமது. தந்தையின் கண்டிப்பையும் மீறி, ஒருநாள் எம்ஜிஆர் நடித்த படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றிருக்கிறார் வாசு.
மேக்கப் ரூமில் இருந்து வெளியே வந்த எம்ஜிஆர், அவரைக் கண்டதும் ‘எதுக்காக வந்தே’ என்று விசாரித்திருக்கிறார்.
சில வார்த்தைகள் பேசிவிட்டு நகர முயன்றவரிடம், ‘இனிமே இதுமாதிரி கலர்கலரா ட்ரெஸ் பண்ணாதீங்க, ப்ரெண்ட்ஸ் தியேட்டர்ல கிண்டல் பண்றாங்க’ என்று கூறியிருக்கிறார் வாசு.
அதனைக் கேட்டதும், ’இந்த மாதிரியெல்லாம் நீங்க சொல்லணும்னுதான் அப்படி ட்ரெஸ் பண்றேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாராம் எம்ஜிஆர்.
டூரிங் டாக்கீஸ் இணையத்துக்கு அளித்த பேட்டியொன்றில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குனர் வாசு.
பளிச்சென்று காஸ்ட்யூம் அணிவது யதார்த்தத்தில் அருவெருப்பாகக் கருதப்பட்ட காலம் மாறி அதுவே பேஷன் ஆகும் என்று எவரும் எதிர்பார்க்கமாட்டார்கள். இப்படியான கமெண்ட்கள் வருமென்று தெரிந்தும், திரையில் தன்னை வடிவமைத்துக் கொள்ள எம்ஜிஆர் மெனக்கெட்டதற்கு இந்த விஷயம் ஒரு சோறு பதம் மட்டுமே!
பெயர் குழப்பத்தில் எம்ஜிஆர்!
மருதநாட்டு இளவரசி டைட்டில் காட்சியில் எம்.ஜி.ராம்சந்தர், வி.என்.ஜானகி என்று பெயர்கள் இடம்பெற்றன. எம்ஜிஆர் என்றும், எம்.ஜி.ராமச்சந்திரன் என்றும் அக்காலத்தில் தன் பெயர் இடம்பெற அவர் விரும்பவில்லை.
காரணம், அந்த காலத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் புகழ்வாய்ந்த நடிகராய்த் திகழ்ந்தார். மேலும், ராமச்சந்திரன் என்ற பெயரில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார் இன்னொருவர். எனவே, தனது பெயர் வித்தியாசமாக இருக்க வேண்டுமென்று ராம்சந்தர் என்று மாற்றிக்கொண்டார் எம்ஜிஆர்.
ராஜகுமாரி தொடங்கி கூண்டுக்கிளி வரை இது தொடர்ந்தது. ‘மலைக்கள்ளன்’ படத்தில் இருந்தே அவரது பெயர் எம்.ஜி.ராமசந்திரன் என்று இடம்பெறலானது.
காதலுக்கு கெடுபிடி!
ராஜமுக்தி, மோகினி, மருதநாட்டு இளவரசி, நாம் ஆகிய படங்களில் இணைந்து நடித்தபோது ஜானகி அம்மையாருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே நட்பு வலுப்பட்டது. ‘நாம்’ படத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்டார் ஜானகி அம்மையார்.
நாயகனாகத் திரையில் கோலோச்சுவதற்கு முன்பே, ஜானகி அம்மையாருடன் காதல்வயப்பட்டிருந்தார் எம்ஜிஆர். மோகினியும் ராஜமுக்தியும் தந்த நெருக்கத்தினால், ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் இருவரும் நடிக்கும்போது கடும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டன.
படத்தின் வசனங்கள் தவிர படப்பிடிப்புத்தளத்தில் இருவரும் எதுவும் பேசக்கூடாது என்று கட்டளையிட்டார் ஜானகி அம்மையாரின் உறவினர்.
இருவரும் திருமணம் செய்ய வேண்டுமானால் தான் சொல்லும் படங்களில் மட்டுமே எம்ஜிஆரும் ஜானகியும் நடிக்க வேண்டுமென்று நிபந்தனை விதித்தார். ஆனால், இதனை எம்ஜிஆர் ஏற்கவில்லை.
‘நான் ஏன் பிறந்தேன்’ நூலில் இதனைக் குறிப்பிட்டுள்ள எம்ஜிஆர், அந்த காலகட்டத்தில் ஜானகி அம்மையார் நடிப்பதற்குச் சிறிதும் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அந்த காலகட்டத்தில்தான் பலதாரமணத்துக்குத் தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது, நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்தார் எம்ஜிஆரின் இரண்டாவது மனைவி சதானந்தவதி.
இதனால், ஜானகி – எம்ஜிஆர் திருமணம் நடப்பதில் தடை ஏற்பட்டது.
சதானந்தவதி மறைந்த பின்னர், 1962இல் எம்ஜிஆரும் ஜானகியும் திருமணம் செய்துகொண்டனர். ராமாவரத்தில் அமைந்த இல்லத்துக்கு இருவரும் இடம்பெயர்ந்தனர்.
அதன்பின், கிட்டத்தட்ட எம்ஜிஆரின் எண்ணமாகவும் செயலாகவும் மாறிப்போனார் ஜானகி அம்மையார்.
வில்லனாக நடித்த எம்ஜிஆர் சகோதரர்!
அக்காலத்தில் தமிழ் திரைப்பட உலகில் இருந்தவர்கள் எம்ஜிஆரை சின்னவர் என்றும், அவரது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியை பெரியவர் என்றும் அழைப்பது வழக்கம். பாய்ஸ் கம்பெனியில் ஒன்றாகச் சேர்ந்ததில் இருந்து, திரைப்படத் துறையில் காலடி எடுத்துவைத்தது வரை இருவரும் ஒன்றாகவே பயணித்தனர்.
எம்ஜிஆரின் ஆரம்பகாலப் படங்களில் சக்ரபாணியும் ஏதாவது ஒரு வேடத்தில் நடித்து வந்தார்.
வில்லன், குணசித்திர வேடங்கள் கைகொடுக்காத நிலையில், பின்னாட்களில் அவர் எம்ஜிஆரின் நிழலாக மாறினார்.
அவரது கால்ஷீட் விவகாரம், கதைத் தேர்வு மற்றும் ரசிகர் மன்றச் செயல்பாடுகளைத் தீர்மானிப்பவராக மாறிப்போனார்.
எம்ஜிஆரை வைத்து ‘அரச கட்டளை’ எனும் படத்தை இயக்கியிருக்கிறார் சக்ரபாணி.
பவானி, நாம் உட்படச் சில படங்களைத் தயாரித்திருக்கிறார். சக்ரபாணியின் குரலையும், அது ஒலிக்கும் தொனியையும் உற்றுக்கவனித்தால் எம்ஜிஆர் முகம் நம் மனக்கண் முன் தோன்றும்.
வீரப்பாவும் பாட்லிங் மணியும்!
மருதநாட்டு இளவரசியில் பாட்லிங் சிஎஸ்டி சிங் என்பவரது பெயர் நடிகர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும். மவுனப்பட காலத்தில் சென்னையில் இருந்த இரண்டு ஸ்டண்ட் நடிகர்கள் ஸ்டண்ட் ராஜு மற்றும் பாட்லிங் சிஎஸ்டி சிங்.
பாட்லிங் மணி என்ற பெயரில் இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். 1936ஆம் ஆண்டு தமிழில் தயாரான முதல் ஆக்ஷன் படமான ‘மெட்ராஸ் மெயில்’ படத்தில் நாயகனாகத் தோன்றியுள்ளார்.
பின்னர், ‘ஹரிஜன சிங்கம் அல்லது மெட்ராஸ் சிஐடி’ எனும் படத்தை அவர் இயக்கி நடித்தார். தமிழ் ரசிகர்களின் ஆக்ஷன் ரசனைக்கு தீனிபோட்ட பாட்லிங் மணி குறித்த மேலதிக விவரங்கள் தெரியவில்லை.
பி.எஸ்.வீரப்பா இப்படத்தில் குறிஞ்சி நாட்டு மன்னராக நடித்திருந்தார். அழகுறத் தெளிவாகத் தமிழ் உச்சரிக்கும் அவரது ஸ்டைல் இப்படத்தில் நன்கு வெளிப்பட்டிருக்கும். இதுவே மகாதேவி உட்பட பல எம்ஜிஆர் படங்களில் அவர் வில்லனாக நடிக்க வித்திட்டது.
பத்மினியின் ஸ்லிம் தோற்றம்!
இப்படத்தின் தொடக்கத்தில் வரும் ‘வீரத்தாயைப் பணிவோம்’ பாடலின் நடனக்காட்சியை வடிவமைத்தவர் காமினிகுமார் சின்ஹா. இப்பாடலில் லலிதா, பத்மினி இருவரும் தோன்றி நடனமாடியிருப்பர். ஸ்லிம் அழகுடன் பத்மினி தோன்றும் படங்களில் இதுவும் ஒன்று.
மைசூரிலுள்ள நவஜோதி ஸ்டூடியோவில் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தப்பட்டது.
மருதநாட்டு இளவரசி படத்தைத் தயாரித்த கோவிந்தனின் பெயருக்கு முன்னர் மானில மன்னர் மன்னன் என்ற அடைமொழி இடம்பெற்றிருந்தது.
இப்படத்தில் எம்.எம்.மாரியப்பா, பி.லீலா, கே.வி.ஜானகி ஆகியோர் பாடல்களைப் பாடினர். ‘நதியே நீராழி’, ‘இந்த இன்பமே தந்த பைங்கிளி’ பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன.
சிறைபிடிக்கப்பட்ட ஜானகியை மீட்டுவர, எம்ஜிஆரும் சி.கே.நாகரத்னமும் நடனமாடும் காட்சியொன்று உண்டு. அந்த இடத்தில் பாடலுக்குப் பதிலாக வெறும் இசை மட்டுமே இடம்பெற்றிருந்தது இப்போதும் நம்மைக் கவரும்.
வெற்றி தந்த அடையாளம்!
மிகக்குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட மருதநாட்டு இளவரசி திரைப்படமானது மந்திரிகுமாரி, மர்மயோகி பெற்ற வரவேற்பைப் பெறவில்லை என்கின்றனர் சினிமா விமர்சகர்கள். ஆனால், அரச கதைகளைச் சொல்லும் திரைப்படங்களில் எம்ஜிஆருக்கு வாய்ப்பளிக்கலாம் என்ற எண்ணத்தை இப்படமே வலுப்படுத்தியது.
எம்ஜிஆரை நாயகனாக வைத்துப் படமெடுக்கலாம் என்ற எண்ணத்தைப் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்திய படம் மருதநாட்டு இளவரசி. ஒருமுறை இதனை அவரே கூறியிருக்கிறார்.
ஒருகட்டத்தில் ராஜா வேடங்களுக்கு மட்டுமே எம்ஜிஆர் சரியானவர் என்ற எண்ணத்தை உடைத்து, சமூகப் படங்களில் தனது திறனைக் காட்டக் கடுமையாக போராடும் அளவுக்கு இந்நிலைமை சென்றது.
புராணம் தொடர்பான கதைகளைத் திரைப்படமாக்கும் முயற்சிகள் குறைந்த காலகட்டத்தில் நாயகன் ஆனார் எம்ஜிஆர்.
அரச கதைகளுக்குக் கிடைத்த வரவேற்பும், சமூகப்படங்கள் வெற்றியடைவதற்கு அவர் வகுத்த பார்முலாவும் தயாரிப்பாளர்களிடம் அவர் நிபந்தனைகள் விதிக்கும் நிலையை உருவாக்கின.
1977இல் முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிக்கும்வரை, எம்ஜிஆர் படங்களுக்கான வரவேற்பு பின்னோக்கி நகரவே இல்லை.
ஒருவேளை மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, மர்மயோகி போன்ற வாய்ப்புகள் எம்ஜிஆருக்குக் கிடைத்திராமல் போயிருந்தால், அவர் நாயகராக ஆகியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.
அதே நேரத்தில், வெகு சீக்கிரமாக நாயக வாய்ப்புகளைப் பெற்றிருந்தாலும் அவர் தனது தனித்திறனைக் காட்ட முடியாத சூழல் உருவாகியிருக்கக் கூடும்.
அவை எதுவும் நிகழாமல், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு எம்ஜிஆரை நாயகனாக்கி அழகு பார்த்தது காலம்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இரண்டு மாபெரும் சக்திகளை உருவாக்குவதில் தனது பங்களிப்பைத் தந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது ‘மருதநாட்டு இளவரசி’.
படத்தின் பெயர்: மருதநாட்டு இளவரசி, தயாரிப்பு: கோ.கோவிந்தன், படத்தொகுப்பு, சீனாரியோ, இயக்கம்: காசிலிங்கம், கதை, வசனம்: மு.கருணாநிதி, கலை இயக்கம்: ஓ.ஆர்.எம்பாரய்யா, பாடல்கள்: சி.ஏ.லட்சுமணதாஸ், கே.பி.காமாட்சி சுந்தரம், இசை: எம்.எஸ்.ஞானமணி, ஒளிப்பதிவு: ஜி.துரை, ஒலிப்பதிவு: வி.சி.சேகர், லாபரட்டரி: கே.சீதாராம், பிராசஸிங்: ஹரிகிருஷ்ணன்
நடிப்பு: எம்.ஜி.ராமச்சந்திரன், வி.என்.ஜானகி, எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, புளிமூட்டை ராமசாமி, சி.கே.சரஸ்வதி மற்றும் பலர்.
– உதய் பாடகலிங்கம்