கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மமிதா பைஜு. ஓரளவுக்கு உயர் நடுத்தர வர்க்கப் பின்னணியைக் கொண்டவர்.
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, உளவியலில் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் தருவாயிலேயே திரையுலகில் நுழைந்திருக்கிறார்.
சர்வோபரி பாலகரன், தாகினி, வரதன், விக்ருதி என்று தொடர்ந்து பல படங்களில் சிறு பாத்திரங்களைப் பெற்றார் மமிதா பைஜு. அவற்றில் பல இளம் இயக்குநர்கள் தந்தவை.
அந்த வகையில் இயக்குநர் கிரிஷ் ஏ.டி.யின் ‘சூப்பர் சரண்யா’வில் நாயகி அனஸ்வரா ராஜனின் தோழியாகத் தலைகாட்டியிருந்தார் மமிதா.
அதில் அனஸ்வராவை விட அதிக ‘அப்ளாஸை’ ரசிகர்களிடத்தில் பெற்றார். காரணம், அப்பாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய ‘க்யூட்னெஸ்’.
கொஞ்சம் ஆண்பிள்ளைத்தனமாக, ஓரளவுக்கு விவரம் தெரிந்தவராக, சில நேரங்களில் அறியாமையால் விளைகிற அவமானங்களை ‘ஜஸ்ட் லைக் தட்’ எடுத்துக்கொள்பவராக, திரையில் அதகளப்படுத்தியிருந்தார்.
அதற்குக் கிடைத்த வரவேற்பு தான் கிரிஷின் அடுத்த படமான ‘பிரேமலு’வில் அவரை நாயகி ஆக்கியது.
2023இல் பிரணய விலாசம், ராமச்சந்த்ரா பாஸ் & கோ படங்களில் நடித்தார் மமிதா. பிறகு ‘ரீனா ராய்’ ஆக அவர் தோன்றிய பிரேமலு, அவரது திரை வாழ்வை மாற்றி எழுதியது.
மலையாளத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் ரசிகர்களும் கொண்டாடும் படிச்செய்தது.
2024-ல் ‘ரெபல்’ எனும் தமிழ்ப் படத்திலும் நாயகியாக நடித்தார் மமிதா. சிறிது காலம் தாமதப்பட்டு, காத்திருப்புக்குப் பிறகு வெளியான அப்படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
ஆனாலும் அடுத்தடுத்து வந்த படங்களான விஜய்யுடன் ‘ஜனநாயகன்’, பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக ‘டியூடு’, தனுஷுடன் ‘கர’, வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் அண்டு சன்ஸ்’ என்று தொடர்கிறது அவரது தமிழ்த் திரையுலகப் பயணம்.
சிறு பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி ரசிகர்களின் அபிமானத்தை அள்ளியிருக்கும் மமிதாவின் முதல் சாய்ஸ் ‘தமிழ்ப் படங்களாகவே’ இருக்கிறது.
அண்மையில் தமிழிலும் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்திலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மமிதா பைஜூ.
அவரது இயல்பான நடிப்பாலும் அசாத்திய திறமையாலும் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுக்க வாழ்த்துகள்.