“மாலைப் பொழுதின் மயக்கத்திலே”!

திரைத் தெறிப்புகள் – 80 :

*

மறைந்த பின்னணிப் பாடகரான ஜெயச்சந்திரன், இந்தியாவிலேயே தனக்கு மிகவும் பிடித்த பெண் குரலாகப் பி.சுசீலாவின் குரலைக் குறிப்பிட்டிருப்பார்.

அவருடைய தேர்வுக்கு உகந்தபடி தமிழிலும், பிற மொழிகளிலும் பி. சுசீலாவின் எத்தனையோ பாடல்கள், காதுக்கு இனிய உதாரணங்களைப் போலிருக்கின்றன.

அத்தகைய ஒரு பாடல் தான், 1961-ல் வெளிவந்த ‘பாக்கியலட்சுமி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி” என்று மிக இனிமையாகத் துவங்கும்  பாடல். 

இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசனுக்கு முன்னால், ஈ.வி. சரோஜா வீணை வாசிக்க, சௌகார் ஜானகி பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பாடலில், வீணையின் நாதத்திற்கு மேலாக உயர்ந்து ஒலித்திருக்கும் சுசீலாவின் குரல்.

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?”

சங்கப் பாடல்களில் ஒரு தலைவனைப் பிரிந்த துயரத்தைத் தோழியிடம் தலைவி பகிர்ந்துகொள்வதாகச் சில பாடல்கள் உண்டு. அதைப்போல தான் இந்தப் பாடலும்.

தனது காதல் உணர்வை மிக மென்மையாக தோழிக்குச் சொல்கிற விதத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

“இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?”

திரையில் பாடல் காட்சியில் சௌகார் ஜானகி பாடுவதை, லயித்துக் கேட்கிற மாதிரி இருப்பார் ஜெமினி கணேசன்.

அருமையான இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும்.

“மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி.
மங்கையின் கையில் குங்குமம் தந்தார், மாலையிட்டார் தோழி.
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி – அவர்
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி…”

பிரிவின் துயரத்தை இதைவிட எளிமையாகவும், அதே சமயம் வலிமையாகவும் சொல்லிவிட முடியாது என்கிற அளவுக்கு அமைந்திருக்கும் இந்தப் பாடல்.

இடையிடையே வீணையின் ஒலியும், சுசீலாவின் வசீகரக் குரலும் இழையோடும் இப்பாடலைக் கேட்கிற கணம், அந்தப் பாடல் நிறைவுபெற்ற பிறகும் மனதிற்குள் தொடர்கிற மாதிரி இருக்கும்.

ஒரு குரலுக்குள் தான் எத்தனை மாய ஜாலங்கள்!

*

-மணா.

Comments (0)
Add Comment