சினிமா ஒரு பெரிய மலை, அதில் ஏறுவது எளிதல்ல!

இயக்குநர் மிஷ்கின் விளக்கம்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் நாளை (ஏப்ரல்-10) உலகமெங்கும் வெளியாகிறது.

இந்தப் படம் சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது.

ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்றப் போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது.

இப்படத்தில் கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார். ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நயன்தாரா தயாரித்திருக்கிறார்.

படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராம்;

தமிழ் சினிமாவில் யாராவது ஒருவரால் 3 Idiots அல்லது Munna Bhai M.B.B.S. மாதிரி மனதைத் தொடும் படங்களை உருவாக்க முடியும் என்றால், அது விக்னேஷ் சிவன் தான் என்று நான் நம்புகிறேன்.

‘நானும் ரௌடி தான்’ கதையை படமாக எடுக்கும்முன் பலமுறை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதைக் கேட்டபோது சிரித்திருக்கிறேன்.

அந்தக் கதையை பல ஹீரோக்களுக்கு சொல்லியிருக்கலாம். ஆனால், அந்த நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.

அந்த சமயத்தில் விஜய் சேதுபதியிடம் சொல்லச் சொன்னேன். அவர் விக்கிக்காக மட்டும் அல்ல, பல இளம் இயக்குநர்களுக்கு ஒரு இடத்தை உருவாக்கித் தந்தவர்.

விக்கியின் வாழ்க்கையில் ‘நானும் ரௌடி தான்’ ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்பிறகு அனிருத் சேர்ந்தார், “தங்கமே” பாடல் வந்தது, நயன்தாரா வந்தார் – எல்லாமே ஒரு புதிய பாதையை உருவாக்கியது.

இந்தப் படத்தில் பேசப்படும் காதல் எனக்கு மிகவும் நெருக்கமானது. காதல் என்பது மிகவும் விசித்திரமானது, அழகானது, யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.

அது ஒரு மின்னல் போல திடீரென வந்து விடும். அந்த ஒரு தருணத்தில் கையை பிடித்தால் வாழ்க்கையே மாறிவிடும். அப்படித்தான் விக்கியும் நயன்தாராவும் சேர்ந்தார்கள்.

எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும், எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் காதல் மட்டும் மாறாது. அது எப்போதும் அதே உணர்வோடு இருக்கும்.

காதல் என்பது உண்மையும், சில சமயம் சிறிய பொய்களும் கலந்த ஒரு அழகான உணர்வு. அந்த சிறிய பொய்களையே நாம் உண்மையாக நம்புவது தான் காதல்.

தமிழ் சினிமாவின் பெரிய பலம் என்னவென்றால், எங்கிருந்தும் யாரும் வந்து தங்கள் கனவுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை அது தருகிறது.  அதற்கு உதாரணம் பிரதீப். அது இனியும் தொடரும் என்று நான் நம்புகிறேன்.

இயக்குநர் மிஷ்கின்: 

தமிழ் சினிமாவில் மிகவும் நேர்மையான இயக்குநர்களில் ஒருவராக நான் நினைப்பவர் ராம். விக்கிக்கும் ராமுக்கும் நல்ல நட்பு இருக்கிறது. ராம் எங்கே போனாலும் விக்கியைப் பற்றி பெருமையாக பேசுவார்.

விக்கி ஒரு விசித்திரமான மனிதர். வெளியில பார்த்தால் சிம்பிளாக இருப்பார். ஆனா உள்ளுக்குள் ஒரு குழந்தை மாதிரி. ரொம்ப நுட்பமான மனசு. வாழ்க்கையை ஒரு கலைப் படைப்பாக பார்க்கிறார்.  

விக்கி ஆரம்பத்தில் ஒரு இசைக்கலைஞர். தாள வாத்தியக்காரர். அதற்கப்புறம் பாடல் எழுத ஆரம்பித்தார். உண்மையில் ஒரு கவிஞன். இந்த உலகத்தை நேசிக்கும், அதில் அழகைக் காணும் ஒரு மனிதர்.

இந்த படத்தில் எல்லா பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார். ஒரு இயக்குநர் தனது படத்துக்கு பாடல் எழுதுகிறார் என்றால், அந்த படத்தை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கே அது சாட்சி.

இந்த படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. பல வெற்றிப் படங்கள் இருந்தாலும், இந்த படத்திற்காக அவர் மிகுந்த பாடுபட்டிருக்கிறார்.

சினிமா என்பது ஒரு பெரிய மலை. அதில் ஏறுவது எளிதல்ல. எவ்வளவு பெரியவர்களுக்கும் சினிமா எப்போதும் சவாலாகத்தான் இருக்கும். அதனால்தான் அது இன்னும் உயரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

இந்த படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். விக்கி என்னை மிகவும் நேசிப்பதால் தான் என்னை அழைத்தார் என்று நினைக்கிறேன். அவர் அழைத்தால் நான் வராமல் இருக்க முடியாது.

விக்கி எப்போதும் எதிர்காலத்தை நினைப்பவர். நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவர் இல்லை. நாளை எப்படி இருக்கும் என்று யோசிப்பவர். இந்த படமும் அப்படித்தான். மிகவும் சிந்தித்து, தேர்ந்தெடுத்து உருவாக்கிய ஒன்று. 

நடிகர் பிரதீப் ரங்கநாதன்:

 

நான் இயக்குநராக இருக்கும்போது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படம் பண்ண வேண்டும் என்று ஆசை வைத்திருந்தேன். அதற்காக கதைகளையும் யோசித்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் “இது ஒரு ஃப்யூச்சர் படம்” என்று சொன்ன உடனே எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட்.

இந்தியாவில் அப்படி ஃப்யூச்சரை அடிப்படையாக கொண்டு படங்கள் ரொம்ப குறைவு. அதனாலே அந்த ஐடியா கேட்டவுடனே சூப்பர்ன்னு உணர்வு வந்தது.

அவர் கதை முழுசாக சொல்லி முடித்தவுடன், இந்த படம் பண்ணுவது நிச்சயம் என்று பிக்ஸ் ஆகிட்டேன். அதுக்கப்புறம் “அனிருத் மியூசிக்”ன்னு சொன்னதும் இன்னொரு லெவல் சந்தோஷம்.

 

எஸ்.ஜே. சூர்யா சார் பற்றி ஒரு விஷயம் சொல்லணும். நான் காலேஜ் முடிச்ச பிறகு அவரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேரணும் என்று ஆசைப்பட்டேன்.

அவரோட அலுவலகத்துக்கு போனேன். என்னைப் பார்த்ததும் என்னை உள்ளே அழைத்தார். நான் “உங்களிடம் உதவி இயக்குநராக சேரணும்”ன்னு சொன்னேன். அந்த தருணம் எனக்கு மறக்க முடியாதது.

நான் செய்த குறும்படம் பற்றி சொன்னேன். என்னிடம் நிறைய கேள்வி கேட்டார். நிறைய உலகப்படம் பார்க்கச் சொன்னார். அவர் அன்று கேட்ட கேள்விகள் தான் என் வாழ்க்கையை மாற்றியது.

அந்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் நான் அவரை மிகவும் மதிக்கிறேன். என் முதல் கதையில் அவரைத் தான் நடிக்க வைக்க முயற்சித்தேன்.

“நீங்களே நன்றாக நடித்து, கதை சொல்கிறீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது” என்றார்.

அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்தது. என் வாழ்கையை மாற்றியதில் அவருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது.

இன்று அவருடன் இந்தப் படத்தில் சேர்ந்து வேலை செய்வது ஒரு பெரிய சந்தோஷம்.

இயக்குநர் விக்னேஷ் சிவன்:

என் வாழ்க்கையில் இப்போது நான் இருக்கும் இடமும் இந்த நிலையும் எளிதாகக் கிடைக்கவில்லை. நான் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கேன். கடவுள் எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை கொடுப்பார்.

நான் கோயிலுக்குப் போவது, “இன்னும் கொடுங்கள்” என்று கேட்க அல்ல. ஏற்கனவே கொடுத்திருக்கும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் நன்றி சொல்லத்தான் நான் போவேன்.

நான் ஒருவன் மட்டும் இந்த மேடையில் நிற்கிறேன் என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் நான் ஒருவன் மட்டும் இல்லை. என்னோடு நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஒரு பெரிய படம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அது நடக்காமல் போன போது, அது ஒரு கல்யாணம் நின்றது போல இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம்.

அந்த நேரத்தில் எல்லாரும் “சின்னதாக பண்ணுங்கள், சிம்பிளாக பண்ணுங்கள்” என்று சொல்வார்கள். அது ஒரு வகையில் நம்மை குறைவாக மதிப்பது போல தோன்றும்.

ஆனால், நான் ஒரே ஒரு விஷயத்தையே நம்பி இருக்கிறேன். திரையரங்குக்குள் வரக்கூடிய அந்த பார்வையாளர்களுடன் எனக்கு இருக்கும் அந்த ஒரு கனெக்ஷன். அதுதான் என் நம்பிக்கை.

ஒரு இயக்குநருக்கு கிடைக்கும் பெரிய வரம் என்ன தெரியுமா? அவர் நினைத்ததை திரையில் காட்ட முடியும்.

மழை வேண்டும்னா மழை வரும். நிறுத்தணும்னா நிறுத்தலாம். கனவுகளை நிஜமாக்க முடியும். அப்படித்தான் இந்த படமும்.

நான் பார்க்க விரும்பிய சென்னை, நான் கற்பனை செய்த எதிர்காலம். எல்லாத்தையும் இந்த படத்தில் வைத்திருக்கிறேன்.

இந்த பயணத்தில் எல்லாமே ஒரே இரவில் மாறி போன தருணங்களும் இருந்தது. அந்த நேரத்திலிருந்து இன்று வரை என்னோடு நம்பிக்கையுடன் இருந்த சில பேர் இருக்காங்க.

இந்த எல்லாரும் எனக்கு வெறும் டீம் இல்லை. என் கனவை நம்பியவர்கள். நாளைக்கு இவர்கள் எல்லாரும் பெரிய இடத்துக்கு போவார்கள் என்று நான் நம்புகிறேன்.

டெல்லியில் ஒரு முக்கியமான இன்டர்வல் சீன் எடுத்துக்கொண்டிருந்தோம். ரொம்ப எமோஷனல் சீன்.

அந்த நேரத்தில் வெளியில பெரிய குழப்பம், சண்டை, சத்தம். எங்க டீம் அங்கே செட்டில பிரச்சனையோட இருந்தாங்க.

அந்தச் சூழ்நிலையில் எந்த நடிகரா இருந்தாலும் “எனக்கு கான்சென்ட்ரேட் பண்ணணும்”ன்னு சொல்வாங்க.

ஆனா பிரதீப் அந்த சூழ்நிலையே புரிஞ்சுக்கிட்டு, திரும்ப திரும்ப டேக் கொடுத்து, “பண்ணலாம் ப்ரோ”ன்னு சொல்லிட்டு அந்த சீனை முடிச்சார்.

அந்த நேரத்தில் அவர் ஒரு ஹீரோவா இல்ல, ஒரு டைரக்டரா என்னோட வலியை புரிஞ்சுக்கிட்டு வேலை செய்தார்.

இப்போது அந்த இன்டர்வல் சீனைப் பார்க்கும்போது, “இப்படி ஒரு சூழ்நிலையில் இப்படி ஒரு நடிப்பு கொடுக்க முடிஞ்சா, எதுவும் முடியும்”ன்னு தோணும்.

ஒரு நாள் நான் பணமில்லாமல் இருந்த போது, பாண்டிச்சேரி போய் கதை எழுதணும் என்று முடிவு பண்ணேன். என்னிடமிருந்தது பஸ் டிக்கெட்டுக்கு 200 ரூபாய்தான். நான் போயிட்டேன்.

அப்போ அவர் ஒரு மெசேஜ் அனுப்பினார். “உன் பைக்குள்ள 50,000 ரூபாய் வச்சிருக்கேன்”ன்னு. எனக்கு தெரியாம, என் பேக்கில் பணம் வச்சிருந்தார்.

அந்த பஸ் பயணத்தில் நான் அழுதது இன்னைக்கும் மறக்க முடியாது. அவரோட இசை மட்டும் இல்ல, அவர் ஒரு மனிதராகவே எனக்கு ஒரு பெரிய கிஃப்ட். 

Comments (0)
Add Comment