“குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவதேது”!

திரைத் தெறிப்புகள் – 65 :

*

நாடகமாக நிகழ்த்தப்பட்டபோதே பெரும் வெற்றியை ஈட்டிய ‘ரத்தக் கண்ணீர்’, திரைப்படமாக்கப்பட்டது 1954-ம் ஆண்டு.

படம் முழுக்க தன்னுடைய சுளீர் வசனங்களால் படத்தைக் கவனிக்க வைத்திருப்பார் நடிகவேள் எம்.ஆர். ராதா.

இத்திரைப்படத்தில் மனம்போனபடியெல்லாம் அலட்சியமாக வாழ்ந்த எம்.ஆர். ராதாவின் கதாபாத்திரம், இப்படத்தின் நிறைவுக்கு முன் குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டு கண்பார்வையையும் இழந்திருக்கும்.

அப்படித் தடுமாறி நடந்துப் போகிறபோது பின்னணியில் இப்படித் துவங்கும் சி.எஸ். ஜெயராமனின் அழுத்தமான குரல்,

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது…”

ஜெயராமன் பாடி முடித்ததும், அதை எதிரொலிக்கும் விதமாகக் கேட்கும் எம்.ஆர். ராதாவின் குரல்.

“வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த
எனக்கு நிம்மதி ஏது…”

பாடலாசிரியர்  கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய பாடலுக்கு இசையமைத்தவரும் சி.எஸ். ஜெயராமன் தான்.

“அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும் 
அரும்பிட முடியாது…”

படத்தில் கந்தல் உடையுடன் சாலைகளில் திரியும் எம்.ஆர். ராதா, இப்படிக் குரல் கொடுப்பார்.

“முடியாது. உண்மை, உண்மை,
என் ஆனந்தம் என் மகிழ்ச்சி
என் இன்பம்
அத்தனையும் அற்றுப் போய்விட்டது…”

அடுத்து சி.எஸ். ஜெயராமனின் குரல் கேட்கும்.

“அமைதி அழிந்தது.
புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது…”

அதைத் தொடர்ந்து…. எம்.ஆர். ராதாவின் குரல்.

“ஒழிந்தது, என் ஆணவம்
என் கர்வம் என் அகம்பாவம்
அத்தனையும் அற்றுப் போய்விட்டது.”

பாடலும், உரையாடலும் ஒருங்கே ஒன்றிணைந்த பல திரைப்படப் பாடல்கள் அடுத்தடுத்து வந்தாலும், அவற்றுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்திருக்கிறது இந்தப் பாடல்.

இந்தப் பாடல் நிறைவடைவதும் ஒரு விதத்தில் நீதிபோதனை போல் இருக்கும்.

“குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது?
நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது…”

என்று இந்தப் பாடல் நிறைவு பெறும்போது எம்.ஆர். ராதாவின் குரல், தன் கதாபாத்திர வாழ்வைத் தானே சுருக்கமாய்ச் சொல்வதைப் போல இப்படி நிறைவடைந்திருக்கும்.

“வாஸ்த்தவம், குணத்தை இழந்தேன், கொண்டவளைத் துறந்தேன்
கண்டவள் பின் சென்றேன், கட்டுடலையும் இழந்தேன்,
இன்று கண்ணையும் இழந்தேன்,
வாழ்க்கையில் இனி நிம்மதி யேது… ஏது?

தமிழ் சினிமாவின் நீண்ட வரலாற்றில் நடிகவேளுக்கும் இசைச் சித்தரான சி.எஸ். ஜெயராமனுக்கும் ஓர் இடம் எப்போதும் உண்டு என்பதை இந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் நாம் உணர முடியும்.
*

-மணா.

Comments (0)
Add Comment