கீர்த்தி சுரேஷும் மகாவீரரும்!

கவிஞர் கரிகாலன்

கடந்த இரண்டு நாட்களாக மழைக்கு நான் ஒதுங்கிய இடங்கள் பிவிஆர் சினிமாஸ். (அங்கு வேலை செய்கிற பெண்களுக்கு முகம் பரிச்சியமாகிற அளவுக்கு). அப்படிப் பார்த்தவற்றுள் மாஸ்க் மற்றும் ரிவால்வர் ரீட்டாவிடையே சில ஒற்றுமைகள்.

இரண்டுமே டார்க் ஹியூமர் ஜானர்.

இரண்டுமே நாயகியரை மையப்படுத்துபவை. இரண்டுமே பேராசையின் அழிவைப் பேசுபவை.

“வாழ்க்கையில் இரண்டு துயரங்கள் உள்ளன. ஒன்று உங்கள் இதயத்தின் விருப்பத்தை இழப்பது. மற்றொன்று அதைப் பெறுவது” என்பார் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.

ஆசை அதன் எல்லைக் கோட்டைத் தாண்டி பேராசையாக வளரும்போது அது சென்றடைகிற இடம் துயரம்.

ஆசை என்பது ஒன்றை விரும்புவது. பேராசை என்பது எந்த விலை கொடுத்தாவது விரும்புவதைப் பெற முயல்வது.

ஆண்ட்ரூ கார்னகி ஓர் அமெரிக்க பணக்காரர். நம்மூர் அம்பானி போல சாதாரண நிலையிலிருந்து பெரும் பணக்காரரானவர்.

“இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?” என சாவதற்கு சில நாட்கள் முன் அவரிடம் கேட்டார்கள்.

“நான் ஏழையாக இருந்தபோது, ​​குறைந்தபட்சம் ஒரு நாள் நான் பணக்காரனாவேன். பின்னர் எல்லாம் நன்றாக இருக்கும். என்ற நம்பிக்கை இருந்தது.

இப்போது நான் அந்த நம்பிக்கையை இழந்துவிட்டேன். ஏனென்றால் நான் பணக்காரன். இன்னும் என் வறுமை அப்படியே உள்ளது” என்றார்.

பேராசையை, உள் வெறுமையிலிருந்து பிறக்கும் ஒரு இருத்தலியல் நோய் என்கிறார் ஓஷோ.

ஆசை என்பது தூங்கும்போது காண்கிற கனவு போன்றது. கனவு பிரச்சனை இல்லை. விழித்துக் கொள்வது முக்கியம். விழித்தால் கனவு தானாக கலைந்துவிடும். ஆகவேதான் ‘விழித்திரு’ என்றார் வள்ளலார்.

நம்மிடம் ஓர் வெற்றிடம் இருப்பதாக நினைக்கிறோம். உண்மையில் அப்படி ஓர் வெற்றிடம் இல்லை. இல்லாத வெற்றிடத்தை நிரப்ப விரும்புகிற முட்டாள்தனமே பேராசை.

புத்தர் ஆசைகளைத் துறந்தவர். அவரிடம் சொற்ப ஆடைகளே இருந்தன. மகாவீரர் ஒரு படி மேலே சென்றார். நிர்வாணத்தை அணிந்தார்.

புத்தரிடம் பிச்சைப் பாத்திரம் இருந்தது. மகாவீரர் அதைக்கூட உடைமையாகக் கருதினார். இரண்டு உள்ளங்கைகளையும் குவித்து உணவைப் பெற்று புசித்தார்.

உணவு உள்ளங்கையில் இருக்கும்போது கையால் புசிக்க முடியாது. விலங்குகளைப்போல் வாயால் நேரடியாகச் சாப்பிட்டார். அதுவும் நின்றபடி. குறைந்த உணவை உட்கொண்டார்.

மகாவீரரைப் பின்பற்றும் ஜைனர்களை உணவு விடுதிகளில் பார்க்கிறேன். பூண்டு வெங்காயம் தவிர்ப்பார்கள். மற்றபடி பசிக்காக அல்ல. ருசிக்காக சாப்பிடுகிறார்கள். உடல் பருமன் என்கிற துயரில் வாடுகிறார்கள்.

மாஸ்க், ரிவால்வர் ரீட்டா, புத்தர், மகாவீரர் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லைதான். சம்மந்தப்படுத்திக் கொண்டாலும் தப்பில்லை.

Comments (0)
Add Comment