“தேனே உன்னைத் தேடித் தேடி நானலைந்தேனே”!

திரைத் தெறிப்புகள் – 87 :

*

தமிழ்த் திரைப்படங்களின் காதலி – காதலனோ அல்லது மனைவி – கணவனோ ‘கலாய்த்து’ ஒரு வழி பண்ணிப், பாடும் பாடல்கள் நிறையவே வெளிவந்திருக்கின்றன.

இதில், 1957-ம் ஆண்டு வெளிவந்த ‘அம்பிகாபதி’ திரைப்படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் – டி.ஏ. மதுரம் ஜோடி பங்கேற்கும் ஒரு பாடல் காட்சி அப்போது மட்டுமல்ல, இப்போதும் பிரபலம்.

கையில் சிறு வாத்தியத்தை வைத்துக்கொண்டு மதுரத்தைப் பார்த்து, கலைவாணர் பாடுவார்:

“கண்ணே கண்ணே உன்னால்,
நானடையும் கவலை கொஞ்சமா? – என்
கவலை கொஞ்சமா? – அதைக்
கண்டு சும்மா இருக்க உனக்குக் கல்லு நெஞ்சமா?…”

என்று எளிய நாட்டுப்புற இசையமைப்பில் அமைந்த இந்த அமர்க்களமான பாட்டுக்கு இசையமைத்தவர் பழம்பெரும் இசையமைப்பாளரான ஜி.ராமநாதன்.

இசையும் – உரையாடலும் இணைந்த இந்தப் பாடலை எழுதியவர் தஞ்சை ராமையா தாஸ்.

“என்னத் தானே கண்ணேன்னு பாடுற” என்று மதுரம் கேட்க, “கண்ணுல தண்ணியா கொட்டுது…” என்று கலைவாணர் சமாளித்துப் பதில் சொல்ல, “….ம்ம்…” என்று மதுரம் கை காட்ட, தொடருவார் கலைவாணர்.

“தங்கமே தங்கமே தங்கமே உன்,
தயவை நான் பெறுவேனோ?
என்று தான் பெறுவேனோ? – என்
அங்கங்குளிர வாரியணைத்து அகமகிழ்வேனோ?”

என்று பாடலைத் தொடரும்போது, கலைவாணருக்கு வில்லுப் பாட்டு நிகழ்த்துவதில் இருக்கும் சாதுரியம் புலப்படும்.

தங்கமே என்று அழைத்துவிட்டு, அதற்கு மதுரத்திடம் கலைவாணர் சொல்லும் ‘சல்ஜாப்புகள்’ ரசிக்கும்படி இருக்கும்.

அடுத்து, தேனே என்று கலைவாணர் இப்பாடலைத் தொடரும் விதமும், ருசிக்க வைக்கும்.

“தேனே தேனே தேனே உன்னைத்
தேடித் தேடி நானலைந்தேனே,
நானலைந்தேனே – நீ
தெரியும்படி என் எதிரில் இருந்தும் தொடப் பயந்தேனே.”

என்று கலைவாணர் பாடி முடித்ததும், மதுரம் “இப்ப என்னைத்தானே, தேனேன்னு சொன்னே…” என்று டபாய்க்க, “வைத்தியர் ஒரு பஷ்பம் கொடுத்திருக்கார். அதை, தேனில் குழைத்து சாப்பிடணும்.

தேன்கூடு மரத்து மேல இருக்கு, பக்கத்துல போனா… தேனீ கொட்டுமான்னு தெரியல… ” என்று அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு கலைவாணர் சொல்வார்.

அந்தக் கிண்டலை ரசித்து சிரித்தபடி, ஏய்ய்ய்.. முகரையைப். பாரு” என்று மதுரம் கலாய்ப்பார். படு சிரிப்புடன் கலைவாணர் “ஆகா முகரையைப் பாரு” என்று பாட்டை ஒரு இழு இழுப்பார்.

பதிலுக்கு கலைவாணரின் தலையில் மதுரம் கை வைத்து, “என்னா மூளை”! என்று சொன்னபடி நிறைவடையும் இந்தப் பாடல் காட்சியை, ஒரு முறை பார்ப்பவர்களின் நினைவுகளில் தங்கியிருக்கும் இந்தப் பழுதில்லாத நையாண்டிக் குரல்கள்.

*

– மணா

Comments (0)
Add Comment