திரைத் தெறிப்புகள் – 76 :
*
ஜெயலலிதா அறிமுகமான ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தில் இடம்பெற்ற மறக்க முடியாத பாடல் இது.
1965-ம் ஆண்டில் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிற ஆடை’ படத்தில் பி. சுசீலா அவர்கள் பாடிய இந்தப் பாடலை எப்போதும் கேட்டாலும் காதுகளுக்கு இதமாக இருக்கும்.
“கண்ணன் என்னும் மன்னன் பேரைச்
சொல்லச் சொல்ல..
கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
மெல்ல மெல்ல..
எண்ணம் என்னும் ஆசைப் படகு
செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம்
துள்ளத் துள்ள…”
என்கிற பாடலைத் துள்ளலோடு பி. சுசீலா பாட, அதற்கு துள்ளலாக நடனமாடியிருப்பார் ஜெயலலிதா.
இசை இரட்டையர்களாக அப்போது திகழ்ந்த எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி இசையமைப்பில், மெல்லிய ரிதத்திற்குகேற்றபடி இப்பாடலை எழுதியிருப்பார் கவிஞர் கண்ணதாசன்.
“தென்றல் இன்று பாடும் பாடல்
என்ன என்ன..
சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள்
என்ன என்ன..
கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று
பின்னப் பின்ன..
என்னைத் துன்பம் செய்யும் எண்ணம்
என்ன என்ன…”
காதலின் இளம் அவஸ்தையை மிக மென்மையாக இப்படிச் சொல்லி இருப்பார் கவிஞர்.
இந்தப் பாடல் காட்சியை இளமைக்கான தனி அழகுடன் காட்சிப்படுத்திருப்பார் இயக்குநர் ஸ்ரீதர்.
“அக்கம் பக்கம் யாரும் பார்த்தால்
வெட்கம் வெட்கம்..
அன்பே உன்னை நேரில் கண்டால்
நாணம் நாணம்..
ஆசை நெஞ்சை சொல்லப் போனால்
அச்சம் அச்சம்..
அன்றும் இன்றும் அது தான் நெஞ்சில்
மிச்சம் மிச்சம்…!
எப்போதுமே, இயக்குநர் ஸ்ரீதர் + கண்ணதாசன் + விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோரது கூட்டணி ஒன்றுசேர்ந்தால் போதும், அந்தப் படப் பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன.
‘வெண்ணிற ஆடை’ படத்தில் இடம்பெற்ற பி. சுசீலாவின் குரலைத் தனித்து அடையாளப்படுத்தும் இந்தப் பாடலும் அந்த ரகம் தான்!
*
– மணா.
*