“கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே”!

திரைத் தெறிப்புகள் – 79 :

*

மிகவும் மென்மையான குரலுக்குச் சொந்தக்காரரான பி.பி. ஸ்ரீனிவாஸூக்கு அப்போது மிகவும் புகழைத் தேடிக் கொடுத்த பாடல் இது.

1960-ம் ஆண்டு வெளிவந்த ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தைத் தயாரித்ததோடு இதில் கதாநாயகியாகவும் நடித்தவர் அஞ்சலி தேவி.

“கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே.
காதாலே கேட்டுக் கேட்டுச் செல்லாதே.
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே – நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே…”

என்று துவங்கும் பாடல் காட்சியைப் பார்ப்பதே அமர்க்களமாக இருக்கும்.

அதாவது, இந்தப் பாடலை டி.ஆர். ராமச்சந்திரன் பாடுவதைப் போல நடிக்க, அவருக்குப் பின்னணியிலிருந்து அந்தப் பாட்டுக்குக் குரல் கொடுப்பவராக தங்கவேலு நடித்திருப்பார்.

தங்கவேலுக்கு ‘ஒரிஜினலாக’க் குரல் கொடுத்திருப்பவர் பி.பி. ஸ்ரீனிவாஸ்.

இப்படத்தில் அஞ்சலி தேவியைக் கவர்வதற்காக டி.ஆர். ராமச்சந்திரனும், தங்கவேலும், அவரது குழுவினரும் அடிக்கும் ரகளையான லூட்டிகள் பார்ப்பதற்குத் தமாஷாக இருக்கும்.

“பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே – உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே.
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே – என்
அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே…”

அந்தக் காலத்திய காதல் ததும்பும் பாடலாகப் பிரபலமான இந்தப் பாட்டை எழுதியிருப்பவர் தஞ்சை ராமையா தாஸ்.

இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர் அஞ்சலி தேவியின் கணவரான ஆதி நாராயண ராவ்.

மனைவி கதாநாயகியாக நடிக்க, அவரைப் பற்றிய காதல் பாடலுக்கு, அவருடைய கணவரே இசையமைத்திருப்பது அந்தக் காலத்தில் பேசப்பட்ட “சினிமா டாபிக்”.

“பதுமைப்  போல காணும் உந்தன் அழகிலே.
நான் படகுப் போல தத்தளிக்கும் நிலையிலே.
மதுவை ஏந்திக் கொந்தளிக்கும் மலரிலே,
என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே.”

இந்தப் பாடலுக்கு நகைச்சுவை நடிகரான கே.ஏ. தங்கவேலு பாடும்போது முகத்தில் காட்டியிருக்கும் ஈர்ப்பான முகபாவங்களைப் பார்க்க அவ்வளவு ரசனையாக இருக்கும்!

  • மணா.
Comments (0)
Add Comment