திரைத் தெறிப்புகள் – 82 :
*
மகாகவி பாரதியின் பாடல்களில் மிகவும் சிக்கனமான, அதேசமயம் மிகவும் பிரபலமான பாடல்களில் இதுவும் ஒன்று.
அதாவது, எண்ணம், செயல்பாடு, பார்க்கும் காட்சி என்று அனைத்திலுமே நந்தலாலாவைக் காண்பதாகப் பாடியிருக்கும் பாரதியின் இந்தப் பாடலைத் தமிழ்த் திரைக்குக் கொண்டு சென்றவர், தனித்துவமான இசையமைப்பாளரான எல். வைத்தியநாதன்.
1982-இல், பாளை சண்முகம் தயாரிப்பில் டி. ஹரிஹரன் இயக்கிய ‘ஏழாவது மனிதன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் பாரதியின் பாடல்கள்தான்.
இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் இன்று வரை பலரும் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு இசையமைத்திருப்பார் எல். வைத்தியநாதன்.
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;”
– என்று கே.ஜே. ஜேசுதாஸின் இனிமையான குரலுடன் துவங்கும் இந்தப் பாடலின் பின்னணியில் மிகச்சில வாத்தியக் கருவிகள் மட்டும் ஒலித்தாலும், இப்பாடலைக் கேட்கும் போது அவ்வளவு ரம்மியமாக உணரத் தோன்றும்.
“பார்க்கும் மரங்கலெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறந் தோன்றுதையே நந்தலாலா…”
என்று பாடும்போதே நமக்கு முன்னால் பசுமை பாய் விரித்திருப்பதைப் போலத் தோன்றும்.
“கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா – நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா…”
இந்தப் படத்தில் தான் நடிகர் ரகுவரன் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்று ஜேசுதாஸின் குரல், நந்தலாலாவைக் கொஞ்சும் போது நாமும் சேர்ந்து கொஞ்சத் தோன்றும்.
“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா.”
– என்று, தீயின் கணகணப்புக்குள் விரலை நுழைத்தால், தொட்ட விரலில் சூடு பரவுவதையும்; இன்பமான அனுபவமாகக் காணும் பாரதியின் மனநிலை, ஓர் உச்சகட்ட மனநிலையும் கூட.
இதனாலேயே இந்த சின்னஞ்சிறிய பாடல் பாரதியின் கவி வளத்தாலும், ஜேசுதாஸின் குரல் வளத்தாலும், எல். வைத்தியநாதனின் இசை வளத்தாலும் என்றும் நம் காதுகளை மெல்லிய இறகைப் போல் வருடிக்கொண்டே இருக்கிறது.
எல்லாம் “நந்தலாலா” மயம்!
*
-மணா.