புதுமுகம் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ் நடிப்பில், ஏ. மகாதேவ் என்பவருடன் சேர்ந்து எழுதி, (ஏ.எல்) விஜய் இயக்கி இருக்கும் படம்.
டி.ஸ்டுடியோஸ் மற்றும் டென்வி ஸ்டுடியோஸ் சார்பில் சன்னி டென்வி ஆகியோரின் தயாரிப்பு.
கோத்தகிரி வாழ் இசை ஆசிரியையின் மகன் சிறுவன் சித்தார்த். தனக்குள் வாழ்பவன். அங்கே இசை கற்றுக் கொள்ள வரும் சிறுமி அதிதி மேல் அவனுக்கு ஒரு பாசம்.
காரணம் சிறு வயதிலேயே அம்மாவை இழந்த அவள் இசையில் இயற்கையில் வானத்தில் எல்லாம் தன் அம்மாவைத் தேடுபவள். இளைஞன் (மதும்கேஷ்) ஆன பிறகும், அவள் மேல் தனக்கு வரும் காதலைச் சொல்லாமல் மறைக்கிறான் சித்தார்த்.
இசையில் ஆர்வம் பெருகிய இளம்பெண்ணாக வளர்ந்த அதிதி (ஜியா சங்கர்), ஹரிச்சந்திரன் (அர்ஜுன் அசோகன்) என்ற பாடகனைக் காதலிக்கிறாள்.
ஹரிச்சந்திரனோடு அவள் சேர்ந்து பழகி அப்பாவின் (ஜெயபிரகாஷ்) விருப்பம் இல்லாமல் காதலனோடு இசை நிகழ்ச்சிக்காக ஸ்காட்லாண்டு கிளம்ப, அப்பாவுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போக, அதையும் மீறி அவள் காதலனோடு போக,
அப்பாவின் இரண்டாம் மனைவி இதையே சாக்காக வைத்து அப்பாவுக்கும் மகளுக்குமான உறவைத் துண்டிக்க, ஸ்காட்லாந்து வந்த இடத்தில் ஹரிச்சந்திரன் இன்னொரு பெண்ணோடு இருப்பதோடு தன்னையும் புறக்கணிப்பதை அறிந்த நிலையில்,
தற்கொலை செய்துகொள்ள ‘புன்னகை மன்னன்’ கமல் பாணியில் அதிதி மலை உச்சியில் இருந்து அதல பாதாளத்தில் குதிக்க, அவளைக் காப்பாற்றுகிறான் உண்மைக் காதலன் சித்தார்த்.
ஆனால், அதிதிக்கு இருபத்து நான்கு மணி நேரத்துக்கு மேல், முக்கியமாக தூங்கி எழுந்தால் – அதுவரை நடந்த எதுவும் நினைவில் இருக்காது என்ற மனநலப் பிரச்சினை.
“நான் யாரு” என்றுதான் கேட்பாள்.
ஒவ்வொரு நாளும் அவளுக்கு அவள் யார் என்று சொல்லி நம்ப வைக்க, அவள் நம்புவதற்குள் இரவு வரும் தூங்கி எழுந்தால் மறுபடியும் நான் யாரு என்ற கேள்வியில் துவங்கும். அவனுக்கு உதவுகிறார் ஒரு நபர் (எம்.எஸ்.பாஸ்கர்).
அவள் மேல் உள்ள நிஜக் காதலுக்காக சித்தார்த் அவளை பராமரிக்க, இசை நிகழ்ச்சியில் வெல்ல ஹரிச்சசந்திரனுக்கு அதிதி தேவைப்படுகிறாள்.
அவன் அவளை இழுத்துப்போக முயல்கிறான். அவளுக்கு ஹரிச்சந்திரனையும் யார் என்று தெரியாது.
அதிதியின் அப்பா ஹரிச்சந்திரனை நல்லவன் என்று நம்பி அவனுக்கு மகளை திருமணம் செய்து வைக்க முயல, ஸ்காட்லாந்தில் எல்லோரும் சித்தார்த்தை அதிதியை கடத்திய குற்றவாளியாகப் பார்க்க, அதிதி என்ன ஆனாள்? சித்தார்த்தின் காதல் என்ன ஆனது என்பதே படம்.
கோத்தகிரியில் கொஞ்சம். மற்ற மொத்த படமும் ஸ்காட்லாந்தில்! மேக்கிங்கில் அசத்துகிறார் இயக்குநர் விஜய்.
அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் அதை விஜய் பயன்படுத்தி இருக்கும் விதமும் அருமை. ஹாரிஸ் ஜெயராஜின் இசை பலமும் இல்லாத பலவீனமும் இல்ல மைய நிலை.
கூச்ச சுபாவம், ஆனால் வலிமையான காதல் என்ற கதாபாத்திரத்துக்கு மதும்கேஷ் பொருத்தம். ஜியா சங்கர் ஞாபக மறதி பெண்ணாக ஸ்கோர் செய்கிறார். அர்ஜுன் அசோகன் உற்சாகமாக நடிக்கிறார்.
ஸ்காட்லாந்து நீக்ரோக்களை வைத்து காமெடி ஆக்ஷன் செய்து இருக்கிறார் இயக்குநர் விஜய். ஆனால், பெரிதாக பலன் தரவில்லை.
நிதானமான காதல் படம் என்பதும், கிளைமாக்ஸ் என்ன வரும் என்று தெரிந்தாலும் அது வரும்போது ஏற்படும் சின்ன மனபாரமும் மட்டுமே ஆறுதல்.
ஆனால், வெற்றிப் படத்துக்கு அது பத்தாது. மொத்தத்தில் காதல் ரீசெட் தான். ஆனால், ரிப்பீட் இல்லை.
– சு. செந்தில்குமரன்