“காலமதைத் தவறவிட்டால் தூக்கம் இல்லை மகளே”!

திரைத் தெறிப்புகள் – 57 :

*

தமிழ்த் திரை இசையில் பெண்களுக்கு ஆதரவான குரல்கள் மிகவும் அபூர்வமாகவே ஒலித்திருக்கின்றன. அப்படி வெளிப்பட்ட ஒரு குரல் தான் பி. சுசீலாவின் இனிமையான குரல்.

1966-ம் ஆண்டு வெளிவந்த ‘சித்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுக்கு அருமையான இசையைத் தந்திருப்பவர் மெல்லிசை மன்னரான எம்.எஸ். விஸ்வநாதன்.

பாடல், முன்னோட்டமாக இப்படி ஆரம்பிக்கும்,

“பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில். ஒரு தூக்கம்.
இறப்பில் மறு தூக்கம்.
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கம் இல்லை.
என்னரிய கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு…”

திரையில் இந்தப் பாடலைக் குழந்தையை கையில் ஏந்திக் கொஞ்சியபடி, மிகவும் லாவகமான முகபாவங்களுடன் நடித்திருப்பார் பத்மினி.

பாட்டியாக வரும் சுந்தரிபாயின் முக எதிர்வினைகளும் அவ்வளவு பாந்தமாக இருக்கும்.

மெல்லிய தாலாட்டைப் போலத் துவங்கும் இந்தப் பாடல்,

“காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே!
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே…”

பெண்ணாகப் பிறக்கின்ற பலரும் காலத்தின் வெவ்வேறு பருவங்களில் எப்படியெல்லாம் நடத்தப்படுகிறார்கள் என்பதை எளிமையான கவித்துவத்துடன் எழுதியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்.

“நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்.
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளுதமிழ்ப் பாடல்.
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி.
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி.
தீராத தொல்லையடி…”

ஒரு பெண்ணின் பெருமூச்சு, பாடல் வடிவத்திற்கு மாறினால் எப்படியிருக்குமோ, அப்படி நகர்ந்திருக்கும் இந்தப் பாடல்.

“மாறும்..
கன்னி மனம் மாறும்.
கண்ணன் முகம் தேடும்.
ஏக்கம் வரும்போது
தூக்கம் என்பதேது.
தான் நினைசத்த காதலனை
சேர வரும்போது
தந்தை அதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது?

மாலையிட்ட தலைவன் வந்து
சேலை தொடும்போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது…”

இத்திரைப்படத்தில் இந்தப் பாடல் காட்சியில் பத்மினி அழகான முக பாவ மொழியோடு பாடும்போது அவரின் அரவணைப்பில் இருக்கும் பிஞ்சுக் குழந்தை, இமைமூடி தூங்க ஆரம்பித்திருக்கும்.

பிறப்பு துவங்கி ஒரு பெண்ணின் இறுதிக்காலம் வரையிலான பயணம் பாட்டில் வெளிப்பட்டிருக்கும்.

“ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும்போதும்,
அன்னை என்று வந்தபின்னும்,
கண்ணுறக்கம் போகும்.
கை நடுங்கிக் கண் மறைந்து
காலம் வந்து சேரும்.
காணாத தூக்கமெல்லாம்
தானாகச் சேரும்…”

நிறைவாக,

“ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரோச…”

– என்று பி. சுசீலா அவர்களின் தேன்குரல் நிறைவடையும் போது ஒரு தாலாட்டுப் பாடல், இறகைப் போன்ற மென்மையுடன் நம் காதுகளை வருடிக் கடந்து செல்வதைப் போலிருக்கும்.

*
– மணா.

Comments (0)
Add Comment