“காலம் ஒரு நாள் கை கொடுக்கும்!”

திரைத் தெறிப்புகள் : 107

***

தமிழில் பல மாறுபட்ட திரைப்படங்களை இயக்கியவர் ஸ்ரீதர். அவருடைய இயக்கத்தில் யாருக்குமே மேக்கப் போடாமல் எடுக்கப்பட்ட ‘நெஞ்சிருக்கும் வரை’ திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருப்பது கூடுதல் சிறப்பு.

1967ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவானது இந்தப் பாடல். இதைக் கேட்கும் எவரிடமும் நெஞ்சில் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுவதாக அமைந்திருக்கும்.

“நெஞ்சிருக்கு எங்களுக்கு.
நாளை என்ற நாளிருக்கு.
வாழ்ந்தே தீருவோம்.

எங்கே கால் போகும் போக விடு.
முடிவைப் பார்த்து விடு.
காலம் ஒரு நாள் கைகொடுக்கும்.
அதுவரை பொறுத்துவிடு”

இந்தப் பாடல் காட்சியை, சென்னை மெரினா கடற்கரையில் எடுத்திருப்பார்கள். சிவாஜி கணேசன், முத்துராமன், வி.கோபாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் உற்சாகம் பொங்க கேஷூவலாக, இந்தப் பாடலைப் பாடி வருவது போல் நடித்திருப்பார்கள்.

கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடல் வரிகளைக் கேட்டாலே எவ்வளவு உற்சாகம் பொங்குகிறது பாருங்கள். அதிலும் வேலை இல்லாத பட்டதாரிகள் வாழ்வை எதிர்கொள்கிற விதத்திலும் அமைந்திருக்கும் இந்தப் பாடல்.

வழக்கமாக இயக்குநர் ஸ்ரீதரின் படங்களில் பெரும்பாலான பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தாலும் ஸ்ரீதரின் இயக்கத்தில் கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல் இது என்பதும் கூடுதலான தகவல்.

இந்தப் பாடலை, சக பாடகர்களின் துணையோடு குதூகலமாகப் பாடியிருப்பார் டி.எம்.சௌந்தரராஜன்.

“இருந்தால் தானே… செலவு செய்ய.
எடுத்தால் தானே… மறைத்து வைக்க.
கொடுத்தால் தானே வாங்கிச் செல்ல.
படுத்தால் தானே விழித்துக் கொள்ள…”

எதையும் துணிவுடன் தயக்கமின்றிச் செய்யுங்கள் என்பதை எந்த அளவுக்கு எளிமையாக இந்த வரிகள் உணர்த்துகின்றன.

“துணிந்தால் தானே… எதுவும் முடிய.
தொறந்தால் தானே… பாதை தெரிய.
சிரித்தால் தானே கவலை மறைய.
சில நாள் தானே சுமைகள் குறைய…”

காலத்தின் கையில் நம்மையும், நமக்கான செயல்பாட்டையும் முன்வைத்தால் நமக்கான வெற்றி நிச்சயம் நம்மைத் தேடி வரும் என்கின்ற நம்பிக்கையை இதைப் போன்ற பாடல்கள் வெளிப்படுத்துவதே தனிச் சிறப்பு தானே!

– மணா

Comments (0)
Add Comment