2022 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி திரைப்படம் ஜாதுகர் – Jaadugar (மந்திரவாதி). நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ளது.
விஸ்வபதி சர்க்கார் எழுதி சமீர் சக்சேனா இயக்கியுள்ளார். ஜிதேந்திர குமார், அருஷி ஷர்மா, ஜாவத் ஜாபிரி, மனோஜ் ஜோஷி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மத்திய பிரதேஷ் மாநிலத்தில் நீமச் எனும் நகரில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரராக இருந்தவர் தபோல்கர். அவருக்கு அந்த ஊர் சதுக்கத்தில் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அவர் நினைவாக கால்பந்து போட்டி ஒன்றும் நடத்தப்படுகிறது. அந்தக் கோப்பையை தன குழு வெல்ல வேண்டும் என்று கனவு காண்கிறார் நரங் என்பவர். அவர் திடீரென இறந்துவிட அவரது தம்பி பிரதீப் நரங் அந்தக் குழுவை வழி நடத்துகிறார்.
நரங்கின் மகன் மீனு கால்பந்து விளையாட்டில் ஆர்வம் இல்லாதவன். மந்திர வித்தை செய்வதில் விருப்பம் கொண்டவன். அதோடு, அந்தக் குழுவில் இருப்பவர்கள் எல்லோரும் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் இல்லை.
ஒருவர் சங்கீத ஆர்வலர்; இன்னொருவர் ஒப்பனை, ஸ்டைலில் கவனம் செலுத்துபவர்; கோல் கீப்பருக்கு ஒரு கை மட்டுமே இயங்கும். இப்படி ஒவ்வொருவரும் விநோதமானவர்கள்.
மீனு எல்லா இளைஞர்களை போல தான் காதலிக்கும் பெண்ணின் மீது மேம்போக்கான ஒரு கவர்ச்சியை மட்டுமே கொண்டிருப்பவன்.
காதலியின் உண்மையான ஆர்வம் என்ன என்று தெரிந்து கொள்ளாமல், அவள் தொடர்பான விஷயங்களில் அசட்டையாக இருப்பவன். இதனால் அவள் அவனை ஒதுக்கி விடுகிறாள்.
இதற்கிடையில் மீனு, சப்ரா எனும் ஒரு மந்திரவித்தைவாதியை தன் குருவாக ஏற்றுக்கொண்டு சிறுசிறு வித்தைகள் செய்கிறான்.
ஒரு திருமண விழாவில் சந்திக்கும் கண் மருத்துவர் திஷா மீது அவனுக்கு இரண்டாவது முறையாக காதல் உண்டாகிறது.
அவள் திருமணமாகி விவாகரத்து பெற்றவள். அவளுடைய தந்தைதான் மீனு குருவாக ஏற்றுக்கொண்டிருக்கும் சப்ரா. அவள் அவனை ஒரு நண்பனாக மட்டும் பார்க்கிறாள்.
தூய்மைப் பணியாளராக பணி புரியும் ரிஜு என்பவர் கால்பந்தாட்டதில் திறமை உள்ள இளைஞன்.
அவனைக் குழுவில் சேர்த்துக் கொண்டபின் குழு இறுதிப் போட்டிக்கு முன்னேறுகிறது. ஆனால் அவன் அந்தக் குடியிருப்புப் பகுதியை சேர்ந்தவர் இல்லை என்பதால் இறுதிப் போட்டியிலிருந்து விலக்கப் படுகிறான்.
விளையாட்டு என்பது வெற்றிக்காக மட்டும் அல்ல என்று பொருள்படும்படியாக குழுவின் பெயர் சிக்கந்தர் என்பதிலிருந்து ஜாதுகர் அதாவது ஜால வித்தைக்காரர் என்று மாற்றப்படுவதுடன் கதை முடிகிறது.
லாஜிக் எல்லாம் பார்க்காமல் நகைச்சுவையாக ரசிக்கலாம். இளம் வயது ஆண்கள் பெண்களை எப்படி பார்க்கிறார்கள், பெண்கள் அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் போன்ற விசயங்களை பாராட்டலாம்.
மந்திர வித்தை காட்சிக்கு பின்னால் எவ்வளவு தயாரிப்புகள் இருக்கின்றன என்பதையும் லேசாக காட்டியிருக்கிறார்கள்.
விளையாட்டு தொடர்பான திரைப்படங்களில் பயிற்சியாளர் என்பவர் கடுமையாக இருப்பார்; அவர் குழுவை கடுமையான பயிற்சி கொடுத்து வெற்றிக்கு அழைத்து செல்வார் அல்லது அவர் சில வீரர்களிடம் ஒரு தலைப்பட்சமாக சார்பு நிலை எடுப்பார்.
பெண்களிடம் தவறாக நடந்து கொள்வார் என்று ஒரு சட்டக மாதிரியே காட்டுவார்கள். இதில் குழுவே அமெச்சூர் குழு.
பயிற்சியாளரும் வெற்றி பெற வேண்டும் என்கிற வேகத்தை தவிர நடைமுறையில் எதுவும் கற்றுக் கொடுக்க முடியாதவர்.
ஒரே ஒரு பெண் வீரர் அந்தக் குழுவில் இருப்பதும் அவர் சிறப்பாக விளையாடுவதும் அவரை எதிர் அணியினர் கேலி செய்தவுடன் குழுவின் தலைவர் அவர்களைத் தாக்குவதும் பாராட்டிற்குரியன.
நாம் அன்றாடம் பார்க்கின்ற மனிதர்களையே அவர்களின் குணச்சித்திரங்களுடன் காட்டியிருப்பது, கால்பந்து, மந்திர வித்தை, காதல் என மூன்று களங்களை இணைத்திருப்பது என ஒரு வித்தியாசமான படம்.
✍🏻 இரா.இரமணன்
நன்றி: புக்டே இணையதளம்