தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத் தலைப்பு தேவையா?

‘கடிவாளத்தைக் கழற்றிய பின்னும் குதிரை முன்பிருந்ததைப் போலவே திரியும்’ என்பார்கள் சிலர் ‘ஏர்ல பூட்டுன மாடுகளை அவிழ்த்து விட்டுட்டா அது இஷ்டம் போல மேயும்’ என்பார்கள் சிலர் இரண்டில் எது சரி என்ற வாதிப்பது நிச்சயம் சரியானதல்ல.

கிட்டத்தட்ட அப்படியொரு நிலைக்குத் தமிழ் திரையுலகத்தைத் தள்ளியிருக்கிறது ஒரு பிரச்சனை

அது என்ன? வேறொன்றுமில்லை, தமிழ் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதுதான் அந்தப் பிரச்சனை.

கவனம் ஈர்ப்பது எளிது!

ஒரு வீட்டுக்குள் நுழையும்போது, அதன் வாயில் எளிதாக இருக்க வேண்டும். சட்டென்று கவர்கிற வகையில் அமைய வேண்டும் போர்டிகோ முதல் பல அம்சங்கள் சட்டென்று கண்ணில் பட, அந்த முகப்புதான் முக்கியம்.

அது போன்று ஒரு திரைப்படத்தைக் காண வேண்டும் என்ற ஈர்ப்பை நம்மிடத்தில் உருவாக்கவல்லது அதன் ‘டைட்டில்’

ஒரு திரைப்படத்தின் அடிநாதத்தை அதிலிருக்கும் பாத்திரங்களின் வல்லமையை, அக்கதை முன்வைக்கிற தீர்வைச் சுமந்திருப்பதே அந்த டைட்டிலின் வேலை. அது சட்டென்று ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தால் நல்லது. இதற்கு முன் அவர்கள் கேள்விப்படாததாக, எளிமையானதாக இருந்தால் இன்னும் நல்லது.

நாம் ரசித்த, ரசிக்கிற நட்சத்திரங்களின் படங்களே அதற்கான உதாரணங்கள்.

 

‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற டைட்டிலே, அப்படத்தின் நாயகன் தான் கொண்டுள்ள குறிக்கோளை நிறைவேற்ற பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதைச் சொல்லிவிடும்.

‘குடியிருந்த கோயில்’ படமானது இரட்டை நாயகர்களுக்கு அவர்களது தாயே முதல் தெய்வம் என்று சொல்லும்.

‘கல்யாணப் பரிசு’ எனும் டைட்டில் நாயகன் தனது மனதைப் புரிந்துகொண்ட காதலிக்கு என்ன பரிசைத் திருமணத்தின்போது தருகிறார் என்ற முடிவைக் குறிப்பிடும். ‘அந்த நாள்’ எனும் பெயரானது, திரைக்கதையின் மையமாகத் திகழ்கிற குறிப்பிட்ட சம்பவத்தையும் அது நிகழ்ந்த நாளையும் நமக்கு சூசகமாக உணர்த்தும்.

அந்த நோக்கத்தில் இருந்து விலகி, ஒரு கட்டத்தில் ரசிகர்களின் கவன ஈர்ப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்டு டைட்டில் அமைப்பது நிகழத் தொடங்கியது.

அப்போது பேச்சு வழக்கில் இருப்பவை, ஆங்கிலக் கலப்பு கொண்டவை என்று டைட்டில் வைக்க ஆரம்பித்து முழுக்க ஆங்கில வார்த்தைகள் மட்டுமே சுவரொட்டிகளில் இடம்பெறுகிற நிலையும் வந்தது.

ஆங்கில ‘டைட்டில்’ ஏன்?

தமிழ் திரையுலகில் ‘ஸ்டைலிஷாக’ படம் எடுத்த இயக்குனர்கள் பலருண்டு. அவர்களில் பலர் பைந்தமிழில் ‘டைட்டில்’ வைத்தவர்கள் தான்.

மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரை இதற்கு உதாரணங்களாகச் சொன்னால், 80ஸ் கிட்ஸ் முதல் இன்றைய ஜென்ஸீ தலைமுறை வரை அனைவரும் புரிந்து கொள்வார்கள்.

மிக அரிதாக, அவ்வப்போது ஆங்கிலத்தில் டைட்டில் வைத்தது போய் ‘அதுவே இன்றைய ட்ரெண்ட்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் ஷங்கர். ஜெண்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ் என்று அதனை ஒரு செண்டிமெண்ட் ஆக கருதும் அளவுக்கு இருந்தது அவரது டைட்டில் வைக்கும் போக்கு.

அதனைப் பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பின்பற்றினர். ஷாக், ரெட், சாக்லேட் என்று பல படங்களின் டைட்டில்கள் அமைந்தன.

ஆனால், திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டபிறகு அந்த போக்கில் மாற்றம் நிகழ்ந்தது.

தேடித் தேடி தமிழில் பெயர் வைக்கிற நிலை உருவானது. ‘எம்டன் மகன்’ படத்தை ‘எம் மகன்’ என்றும், ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் பெயர் ‘சில்லுன்னு ஒரு காதல்’ என்று மாறவும் காரணமாக அமைந்தது.

வரி விலக்கு பெற வேண்டும் என்ற நோக்கில், படத்தின் உள்ளடக்கத்துடன் தொடர்பிருக்கிற ஆங்கிலப் பெயர்களையும் கூட தவிர்க்கிற நிலை உருவானது.

ஆனால், அந்த வரி விலக்கு விலக்கிக் கொள்ளப்பட்டபிறகு மீண்டும் பழைய ‘கதவு’ திறந்தது. செம்மறியாடுகள் போல, மேலும் பலர் அதன் வழியே தங்களது திரைப்பயணத்தை அமைத்துக் கொள்வதும் நிகழ்ந்தது.

எனிமி, பீஸ்ட், கோப்ரா, டான், குட் பேட் அக்லி, ப்ளூஸ்டார், தக் லைஃப், ஜெயிலர், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், லவ், பிகினிங், மெமரீஸ், டிடி ரிட்டர்ன்ஸ், லெட்ஸ் கெட் மேரீட், பார்க்கிங், குட் நைட், பில்டப் என்று பல படங்களின் பெயர்கள் மீண்டும் ‘ஆங்கில டைட்டில்’ மோகம் ஆரம்பித்துவிட்டதோ என்றெண்ண வைக்கிறது.

மேற்சொன்னவற்றில் சில படங்கள் மட்டுமே உள்ளடக்கத்தோடு தொடர்புடைய ஆங்கிலப் பெயர்களைக் கொண்டவை. மற்றவை எல்லாம் ‘உல்லுல்லாயி’ கதை தான்..

சமீபத்தில் ‘ப்ரீடம்’ படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், ‘ஏன் ஆங்கிலத் தலைப்பு’ என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த நாயகன் சசிகுமார், இப்படத்திற்கு ‘விடுதலை’ என்றோ, ‘சுதந்திரம்’ என்றோ தங்களால் பெயர் வைக்க முடியவில்லை என்று கூறினார்.

அது மட்டுமல்லாமல், வேறு பெயர்களைக் காட்டிலும் ஒற்றை வார்த்தையில் இருக்கும் டைட்டிலை, குறிப்பாக ஆங்கிலத்தலைப்பை ஓடிடி நிறுவனங்கள் அதிகம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். இது உற்றுநோக்கப்பட வேண்டிய விஷயம்.

ஓடிடி நிறுவனங்கள் சில தமிழ் திரைப்படங்களின் பெயர்களை முடிவு செய்வதில் தலையிட்டதாக அரசல்புரசலாகச் செய்திகள் இதற்கு முன் வந்திருக்கின்றன. வதந்திகளாகக் கருதப்பட்டவற்றைத் தகவலாக நம் முன் காட்டியது அவரது பேச்சு. அவரைப் போன்று மேலும் சில பிரபலங்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இந்த போக்கு மாற வேண்டும்.

ஆங்கிலத் தலைப்பு பல மொழி ரசிகர்களையும் எளிதாக ஈர்க்கும். ஓடிடி தளங்களில் அப்படங்கள் எளிதாக வரவேற்பைப் பெற அது உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.

அதற்காக, எல்லா படங்களும் ஆங்கிலத்திலேயே தலைப்பு இடப்பட்டால் தமிழ் மொழியில் டைட்டில் வைக்கப்பட்ட படங்கள் அதற்கான தகுதியை இழந்தவை அல்லது குறிப்பிட்ட வரையறைகளை எட்ட முடியாதவை என்று ரசிகர்கள் தங்களது கற்பனைச் சிறகுகளை விரிக்கக் காரணமாகிவிடும்.

அது மட்டுமல்லாமல், தமிழ் மொழியில் தலைப்பிடுகிற வழக்கத்தை இல்லாததாக்கி விடும். அதனை எக்காலத்திலும் ஏற்க முடியாது.

அந்த நிலை ஏற்படாமல் தடுக்க, இப்போது திரையுலகினர் முன்முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

சுயக்கட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் மூலமாகத் தமிழில் தான் தலைப்பிட வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அது, அப்பெயர்கள் மீது உலகக் கவனம் பெற வைக்கும் ‘மகாராஜா’ எனும் திரைப்படப் பெயர் போல..!

‘கட்டுமரம்’ என்பதை ஆங்கிலத்தில் எடுத்தாண்டது போல, நம்மூர் தமிழ் படப் பெயர்களில் இருந்தும் சில வார்த்தைகளை அவர்கள் எடுத்துச் செல்வதில் என்ன கெட்டுவிடப் போகிறது..

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment