உள்ளதைச் சொல்பவனே உலகத்தில் பித்தனடி!

திரைத் தெறிப்புகள்-39:
*
கேட்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், தமிழ் சினிமாவில் – குறிப்பாக  திரை இசையில் இப்படியும் கூடப் பகுத்தறிவுக் கருத்துகள் விதைக்கப்பட்டிருக்கிறதா என்று கூட கேள்வி எழலாம்.

கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தப் பாடலும் அந்த ரகம்தான்.

“இறைவன் இருக்கின்றானா?
மனிதன் கேட்கிறான்.
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்…?”

– என்று துவங்கும் இந்தப் பாடல், 1966-ம் ஆண்டு வெளிவந்த ‘அவன் பித்தனா’ என்கிற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

தத்துவக் கருத்துக்கள் நிறைந்த இந்தப் பாடலுக்கு குரல் கொடுத்தவர்கள் டி.எம்.சௌந்தரராஜனும் மற்றும் பி.சுசீலாவும்.

“நான் ஆத்திகனானேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன்
அவன் பயப்படவில்லை

நான் அன்பு காட்டினேன்
அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும்
அவன் துணை வரவில்லை…”

– என நீளும் இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் அவ்வளவு அழுத்தத்துடன் அமைந்திருக்கிறது.

“பார்ப்பவன் குருடனடி
படிப்பவன் மூடனடி
உள்ளதைச் சொல்பவனே
உலகத்தில் பித்தனடி

நீரோ கொதிக்குதடி
நெருப்போ குளிருதடி
வெண்மையைக் கருமை என்று
கண்ணாடி காட்டுதடி…”

இத்திரைப்படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் விஜயகுமாரியும் திரையில் தோன்றிப் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பாடலில் பெண்ணியத்திற்கு ஆதரவான கனிந்தக் குரல் பி. சுசீலா அவர்களின் வழியாக வெளிப்பட்டிருக்கும்.

“ஒன்றையே நினைத்திருந்தும்
ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாகப் பிறந்தவரை
கண்ணாக யார் நினைத்தார்

இருந்தால் இருந்த இடம்
இல்லையேல் மறந்து விடும்.
இவர்தான் மனிதரென்றால்
இயற்கையும் நின்று விடும்…”

என்கிற பாடலில் வரிகளில்? வெளிப்படும் யதார்த்தம் நிகழ்கால வெப்பதைச் சொல்லாமல் சொல்கிறது.

“மனிதத் தோற்றம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். மிகமிக வசதியாக வாழ்பவர்கள் இருக்கிறார்கள். அழகு என்று பிறர் கருதும் பிம்பத்திற்கு உரியவர்களாக இருக்கிறார்கள். ஆனால், மனிதத் தன்மையுடன் மனிதர்களாக வாழ்கிறார்களா?” என்கிற அடிப்படைக் கேள்வியை ஒரு திரைப்படப் பாடலால் எழுப்ப முடிந்திருக்கிறது? 

சத்தியத்தைக் காப்பவரும்
சாட்சி சொல்ல வருவதில்லை.
வழக்கும் முடியவில்லை
மனிதரின் தீர்ப்பும் இல்லை.
மனிதனை மறந்து விட்டு
வாழ்பவன் இறைவன் இல்லை”.

இப்படிப்பட்ட வாழ்வியல் சார்ந்த கேள்விகள் தமிழ்த் திரைப்படத்தில் ஆர். பார்த்தசாரதி என்கிற இசையமைப்பாளரால் உருவாக்கப்பட்டு, வெளிவந்திருக்கிறது.

தற்போது கேட்கும்போதும், இப்பாடலில் எவ்வளவு உயிர்ப்பு இருக்கிறது?

– மணா

Comments (0)
Add Comment