எனக்கு எல்லாமே என் குலதெய்வம் தான்!

– பரவை முனியம்மா

“வணக்கம்… நான் உங்க பரவை முனியம்மா.

என்னடா இது எடுத்ததுமே இப்படி, தானே அறிமுகம் செய்திருக்கிறேன்னு பாா்க்கறீங்களா? இந்தப் பெயரை நான் சொன்னதும் என் முகத்தைப் பார்க்காமலே நான் நினைவுக்கு வா்றேன் பாருங்க… இந்த அளவுக்கு நான் இன்னைக்கு இருக்கேன்னா, அதுக்குக் காரணமே எங்க குலதெய்வம்தான்.

குலசாமியப்பத்தி சொல்லணும்னா, பொழுதன்னைக்கும் பேசிக்கிட்டே இருக்கலாம். அந்த சாமியப்பத்தி சொல்றப்ப, கேட்கிறப்ப, சாமியைப் பார்க்கிறப்ப கிடைக்கிற மனநிறைவு வேற எப்பவும் கிடைக்கிறதில்லை.

இதோ இப்படி ஒரு வாய்ப்பு இங்கே எங்கக் குல தெய்வத்தைப்பத்தி சொல்றதுக்குக் கிடைச்சிருக்கிறதேகூட எனக்கு கிடைச்ச பாக்கியம்தான்.

திருமங்கலத்துக்குப் பக்கத்துல வடகரை கிராமத்துல இருக்கு எங்க குலதெய்வக் கோயில். கம்மாக்கரையோரமா சும்மா ஜிலுஜிலுன்னு காத்து வீச கம்பீரமா அமைஞ்சிருக்காரு எங்க குலசாமி.

அந்தக் கோயில்ல, தலையாய தெய்வம்னா அது குருநாதன் சாமிதான். அவரைச் சுத்திதான் மத்த எல்லா தெய்வங்களும் இருக்கும்.

முத்தையா, சோடன், இருளப்பசாமி, அங்காள பரமேஸ்வரி, ராக்காயி இப்படி எல்லா சாமிகளும் சூழ இருப்பாரு குருநாதன் சாமி.

இந்த சாமிகள்ல முத்தையா சாமி இருக்காரே, அவருதான் எங்க குலதெய்வம் அடுத்து, அங்காள பரமேஸ்வரி.

முன்னே எல்லாம், பரவைன்னு கிராமத்துப் பேரை சொன்னா, என்ன பறவைன்னு ஏதோ கொக்கோ, கோழியோன்னு கேட்பாங்க. இப்போல்லாம் பரவைன்னு சொன்னா, ஓ பரவை முனியம்மாவோட ஊரான கேட்கிறாங்க.

பெருமைக்காகச் சொல்லல. எந்த ஒரு விஷயமும் சினிமாவுக்கு வந்துட்டா, எவ்வளவு சுலபமா பரவிடுதுங்கறதுக்காகத்தான் சொல்றேன்.

சாதாரண கிராமத்துப் பாடகியாக இருந்த நான், சினிமாவுல பாடகியாகவும், நடிகையாகவும் அறிமுகமானது ‘தூள்’ படத்தில்.

இதுவரைக்கும் தமிழ்ல 55 படத்தில் நடிச்சுட்டேன். மலையாளத்துல மம்முட்டிகூட ரெண்டு படத்துல நடிச்சுட்டேன்.

இந்த பெருமையெல்லாம் எனக்குக் கிடைச்சதுக்குக் காரணம் எங்க குலசாமி முத்தையாவும், அங்காள பரமேஸ்வரியும்தான். அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி, அந்தத் தெய்வங்களைக் கும்பிடாம நான் சுட்டுவிரலைக்கூட அசைக்கிறதில்லை!

(ஒரு சில நிமிடம் கண்களை மூடி அந்த தெய்வங்களின் நினைவில் ஆழ்ந்து திரும்புகிறார்)

எங்க குடும்பத்துல எந்த ஒரு நல்லது நடந்தாலும் நாங்க முதல்ல கும்பிடறது முத்தையா தெய்வத்தையும், அங்காள பரமேஸ்வரியும்தான்.

முத்தையாசாமி கிட்டேயும் அங்காள பரமேஸ்வரி கிட்டேயும் அறிவிச்ச பிறகுதான் அதை மத்த உறவுக்காரங்களுக்குக்கேகூட சொல்லுவோம்.

அதேமாதிரி, அவங்களை நினைச்சு எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அந்த காரியம் நிச்சயம் நல்லபடியாக நடந்தேறிடும்.

வழிவழியா எங்க குடும்பத்துல பிறக்கிற தலைச்சன் குழந்தைக்கு எங்களின் குலதெய்வத்தின் பெயரைத்தான் வைப்போம்.

பெண் குழந்தை பிறந்தா ‘முத்துராக்கு’ ன்னும் ஆண் குழந்தை பிறந்தா ‘முத்தையா’ ன்னும் பெயா் வைப்போம்.

குடும்பத்துல ஒரு கல்யாணம்னா, முதல் பத்திரிகையை குல தெய்வத்திற்கு முன்னால வைச்சு பூஜை செஞ்ச பிறகுதான் மத்தவங்களுக்குச் சொல்லுவோம்.

எங்களின் குழந்தைகளுக்கு மொட்டை போடுறது, காது குத்துறது எல்லாம் எங்க குலதெய்வக் கோயில் வெச்சுத்தான் நடத்துவோம்.

என் மாமனார் தன்னோட சின்ன வயசுல கம்மாக்கரை ஓரமா நின்னு காவல் காத்திருக்கார். அவர் கூடவே என் மச்சினரும் இருந்திருக்கார்.

அப்போ, ஆத்துல ஒரு பெட்டி மிதந்து வா்றதை ரெண்டுபேரும் பார்த்திருக்காங்க.

என் மாமனார்தான் பார்த்ததை முந்திக்கிட்டு சொன்னதால, அந்தப் பெட்டியில் இருக்கிறதெல்லாம் என் மாமனாருக்கே சொந்தம்னு சொல்லிட்டாங்க.

மிதந்து மிதந்து அந்தப் பெட்டி கிட்டே வந்தது. எடுத்துப் பார்த்தா, எங்க குலதெய்வம் முத்தையாவுக்கு வைச்சு வழிபடக் கூடிய எல்லா வழிபாட்டுப் பொருட்களும் அதுக்குள்ளே இருந்திருக்கு.

தெய்வமே குடுத்த பரிசா நினைச்சு அதையெல்லாம் வீட்டுக்கு எடுத்துகிட்டு வந்து வழிபட ஆரம்பிச்சிருக்கிறாா் என் மாமனார்.

அன்னையிலிருந்து எங்க குடும்பம் பல வகையிலும் முன்னேற்றம் கண்டிருக்கு. இப்பவும் அது தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் தான் போய்க்கிட்டிருக்கு.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலயும் எங்க வெற்றிக்குக் காரணமா இருக்கறவர் எங்க குலசாமி முத்தையாதான்.

ஆற்றில் மிதந்து வந்த அந்தப் பெட்டியை எங்க வீட்டுல வச்சு வழிபாடு செய்யறதால, எங்க வீட்டுல பொங்கல் வச்சுக் கும்பிடுறதை வழக்கமாகக் கொண்டிருக்கோம்.

ஆனா, எங்க குலதெய்வக் கோயிலுக்குப் போயி வணங்கறப்ப, பொங்கல் வைச்சு வணங்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை.

கோயிலுக்குப் போகும்போது பொங்கல் வைக்கத் தேவையான எல்லா பொருட்களையும் வாங்கித் தந்துட்டு எங்கள் குலதெய்வத்தை வணங்கிவிட்டு வந்துடுவோம். அவ்வளவுதான்.

அது மட்டுமில்ல. வீட்டுல யாருக்காவது உடம்புக்கு சுகமில்லாம போயிட்டாலும், குலசாமி முத்தையா மேலதான் பாரத்தைப் போடுவோம்.

“எல்லாத்துக்கும் முத்தையா இருக்கார் அவர் பார்த்துப்பார்”ன்னு சொல்லுவோம். எங்க குடும்பத்துக்குத் தாரக மந்திரம் அதுதான்.

குலதெய்வத்தின் மேல நாங்க வைச்சிருக்கிற அந்த நம்பிக்கைதான், எந்த சமயத்திலும் சோர்ந்து போகாதத் தெம்பை எங்களுக்குத் தந்திருக்கு.

அதே நம்பிக்கைதான் இன்னைக்கு வரைக்கும் எங்களை மிகவும் சிறப்பான இடத்தில வைச்சிருக்கு!

என்னைக்கும் எங்களுக்குக் காவலாகவும், ஆதரவாகவும், வழிகாட்டியாகவும், துணையாகவும் எங்க எல்லா உயர்வுகளுக்கும் காரணமாகவும் இருந்தது, இருக்கிறது, இருக்கப்போறது எல்லாமே எங்க குலதெய்வம் தான்!”.

Comments (0)
Add Comment