எல்லோருக்குமான வழியில் நானும் போக வேண்டுமா?

நடிகை நித்யா மேனன்

தமிழில், ‘வெப்பம்’, ‘காஞ்சனா 2’, ‘ஓ காதல் கண்மணி’, ‘இருமுகன்’, ‘சைக்கோ’, ‘24’, ‘மெர்சல்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நித்யா மேனன், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் ஜோடியாக வந்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் நித்யா மேனன், ஒரு வார இதழுக்கு நேர்காணல் அளித்துள்ளார்.

அதில், “நான் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களுக்கு எல்லோருடைய பாராட்டுகளும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன். எனது கதாபாத்திரம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தால் போதும் என்றுதான் நினைப்பேன்.

அதை மனதில் வைத்துதான் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்கிறேன். அதிக செலவில் பிரமாண்டமாக தயாராகும் மசாலா படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் நடிக்காமல் நிராகரித்து விடுவேன்.

அதுமாதிரியான படங்களில் நடிக்கப் பிடிக்காது. நல்ல கதாபாத்திரமாக இருந்தால் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொள்வேன்.

அந்தப் படங்களின் படப்பிடிப்பு எப்போது தொடங்குமோ என்றும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருப்பேன். எல்லோரும் கடைபிடிக்கும் வழியிலேயே நானும் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்கிறார் தெளிவாக.

Comments (0)
Add Comment