எப்போதும் சொந்த மண்ணை விட்டுப் பிரிகிறபோது மனசில் ஈரம் நிறைந்து விடும். அதிலும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிற சூழ்நிலை உருவானால் நெஞ்சில் பாரம் சேர்ந்துவிடும்.
அப்படியொரு அனுபவம் ராமாமிர்தத்திற்கு. திருவாரூர் அருகிலுள்ள ராஜமன்னார்குடியில் ‘காந்தி கிளாக் உடையார்’ என்றால் மிகவும் பிரபலம். பிரிட்டிஷ் காலத்திலேயே ரோடு காண்ட்ராக்டர்.
அதோடு கைவசம் சில கள்ளுக் கடைகள். நல்ல வசதி. பணத்தைப் பாத்திரத்தில் போட்டு வைக்கிற அளவுக்குச் சொத்து.
ராமாமிர்தம் இவரது மனைவி. நன்றாக இருந்த குடும்பத்தில் சட்டென்று ஒரு அதிர்வு. ராமாமிர்தத்தின் தங்கையையும் திருமணம் செய்து கொண்டார் உடையார். அதில் ஆரம்பித்தது சிக்கல், அதிலிருந்து மூத்த தாரம் பிடிக்காமல் போயிற்று. ராமாமிர்தம் அப்போது கர்ப்பமாக இருந்திருக்கிறார்.
கருவைக் கலைக்கச் சொல்லியிருக்கிறார்கள். கருவைக் கலைக்கிற மருந்தைக் கட்டாயப்படுத்திச் சாப்பிட வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் கரு கெட்டி, நல்லபடியாகப் பிறந்துவிட்டது.
பிறந்த பிறகும் கொடுமைகள். வீட்டை விட்டுத் துரத்த முயற்சி நடந்திருக்கிறது. ‘இந்த ஜில்லாவிலேயே நீ இருக்கக் கூடாது’ என்று கணவரே மிரட்டியிருக்கிறார்.
வேறு வழியில்லை. கையில் பத்து மாதக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அந்தக் கிராமத்தை விட்டுக் கிளம்பியபோது ராமாமிர்தத்திற்குத் தாங்க முடியவில்லை.
இப்படிப் பிறப்பதற்கு முன்பே ஒரு ‘கண்டத்தை’த் தாண்டி ஊரைவிட்டு வெளியேற்றப்பட்ட அந்தக் குழந்தை – கோபி சாந்தா. பின்னாளில் மனோரமா.
பத்மஸ்ரீ பட்டத்தை வாங்கியிருக்கிற மனோரமாவின் பால்ய காலம் அதிர்ச்சியூட்டுகிறபடிதான் துவங்கியிருக்கிறது.
அந்த உயரத்தை அடைவதற்குள் அவருக்கு எவ்வளவு சவால்கள்?
பேசும்போதே கண் நிரம்புகிறது மனோரமாவுக்கு.
“நேரே செட்டிநாட்டில் இருக்கிற பள்ளத்தூருக்கு எங்கம்மா என்னைத் தோளில் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.
செட்டிநாட்டுக்குப் போனால் ஏதாவது ஒரு வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று ஒரு நம்பிக்கை.
அங்கு தங்கியிருந்த வீட்டிற்கு அப்போது வாடகை ஒரு ரூபாய். சில செட்டியார் வீடுகளில் வீட்டு வேலை செய்வார் அம்மா. அதோடு வீட்டிலேயே பலகாரங்கள் சுட்டு விற்பார்.
சிறு பிள்ளையாக இருக்கும்போது அவற்றை எடுத்துக்கொண்டு போய் வெளியே விற்றுவிட்டு வருவேன். சினிமா தியேட்டர்களுக்கெல்லாம் கொண்டு போய் விற்றிருக்கிறேன்.
பலகாரங்கள் சுடுவதற்காக அடுப்புக்கு அருகிலேயே இருந்ததால் என்னவோ அம்மாவுக்கு உடம்புக்குச் சரியில்லாமல் போய்விட்டது. ஒரே ரத்தப் போக்கு.
ராமநாதபுரம் ஆஸ்பத்திரியில் போய் அவர்களைச் சேர்த்தபோது எனக்கு வயது எட்டு. ரத்தம் தோய்ந்த அவர்களது துணிகளை நான்தான் சுத்தப்படுத்திவிட்டு வருவேன். அப்போது பட்ட சிரமங்கள் அநேகம்.
ஐந்தாவது வரைக்கும் பள்ளத்தூரில் இருந்த பள்ளியில் படிக்க வைத்தார்கள். அம்மா என்னை ‘பாப்பா’ என்றுதான் கூப்பிடுவார்கள்.
அப்போது எனக்கு மூன்று வயதிருக்கும். தியாகராஜ பாகவதர் நடித்த ‘திருநீலகண்டர்’ படம் வெளிவந்த நேரம். அந்தப் படத்தில் “உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே” என்று பிரபலமான ஒரு பாட்டு.
படம் முடிந்து வீட்டு வாசலில் உட்கார்ந்து ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு அந்தப் பாடல் வரிகளைப் பாடியிருக்கிறேன்.
எங்க அம்மாவுக்கு ஒரே ஆச்சர்யம். பக்கத்து வீட்டில் இருப்பவர்களையெல்லாம் கூப்பிட்டு “எங்க பாப்பா எப்படிப் பாடுது, பாருங்க” என்று சந்தோஷப்பட்டிருக்கிறார். தன் மகளிடம் ஏதோ ஒருதிறமை இருக்கிறது என்று எங்க அம்மா உணர்ந்தது அப்போதுதான்.
அப்போது நான் படித்த பள்ளியில் ஒரு விழா என்றால் என்னைப் பாடச் சொல்வார்கள். நானும் தயங்காமல் பாடுவேன். செட்டியார் வீடுகளில் நடக்கும் திருவிழாக்களிலும் பாடக் கூப்பிடுவார்கள். பாடுவேன்.
அப்போது ஊரில் கூத்து நடக்கும். அப்போது எங்க ஊரு பாப்பாவை மேடையில் பாட வைங்க, என்று ஊர்க்காரர்கள் சத்தம் போட்டு என்னைப் பாட வைத்திருக்கிறார்கள்.
எம்.எஸ். சுப்புலட்சுமி ‘மீரா’ படத்தில் வரும் “காற்றினிலே வரும் கீதம்” பாட்டை அப்படியே சுருதி பிசகாமல் பாடுவேன்.
அப்போது சினிமாவுக்குப் போகவேண்டுமென்றால் இரண்டணா அல்லது மூன்றணாவாவது வேண்டும். எங்க அம்மாகிட்டே அது கூட இருக்காது.
அதனால் ஊரில் இருக்கிறவர்கள் சினிமாவுக்குப் போகும்போது என்னையும் கூட்டிக் கொண்டு போவார்கள்.
அப்படிப் பல படங்களைப் பார்த்து, பாடல்களைப் பாடித்தான் என்னை வளர்த்துக் கொண்டேன். பாட்டை முறையாக நான் கற்றுக் கொள்ளவில்லை. எங்கம்மாவும் சுமாராகப் பாடுவார். வீட்டில் அவர்களோடு சேர்ந்து பாடுவேன்.
என்னதான் வறுமையில் இருந்தாலும் எந்த நெறிமுறைகளிலிருந்தும் நாம் வழி தவறிவிடக்கூடாது என்பதில் ரொம்பவும் கவனமாக இருப்பார் அம்மா.
பிறகு நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். படிக்கிற வசனங்களை மனதில் நிறுத்திக் கொண்டு தெளிவாகப் பேசுவேன். பாடுவேன். அப்போதுதான் கோபி சாந்தா என்கிற என்னுடைய சொந்தப் பெயரை ‘மனோராமா’ என்று மாற்றினார்கள். அதிலிருந்து மனோரமாதான்.
புதுக்கோட்டையில் அப்போது ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். எஸ்.எஸ்.ஆரும், தேவிகாவும் தான் ஜோடி. அதில் ‘காமெடி ட்ராக்கிற்காக என்னையும், இவ்னொரு நடிகரையும் கூப்பிட்டிருந்தார்கள்.
புதுக்கோட்டையில் ‘ரிகர்சல்’ எல்லாம் பார்த்தார்கள். அந்தச் சமயம் பார்த்து படத் தயாரிப்பாளர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுப் படமும் பாதியில் நின்று போய்விட்டது.
அப்போது எஸ்.எஸ்.ஆருடன் பழக்கம், அவர் சினிமாவில் பிரபலமான பிறகு ‘மணிமகுடம்’ என்கிற நாடகத்தை அரங்கேற்றியபோது அதில் நடித்தவர் எம்.என்.ராஜம். கலைஞர் கருணாநிதி கதை வசனம்.
எம்.என்.ராஜம் சினிமாவில் பிஸியாகிவிட்டதால் அந்தப் பாத்திரத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். பிறகு நான் நடித்தேன்.
அப்போது ‘வைரம் நாடக சபா’ என்று ஒரு நாடகக்குழு, நடிகர் முத்துராமன், குலதெய்வம் ராஜகோபால் என்று பலர்.
அதில், சந்தர்ப்ப சூழ்நிலையில் அவரோடு காதலில் விழுந்தேன். கல்யாணமும் நடந்தது. கர்ப்பமான நிலையில் என்னை நிராதரவாக விட்டுவிட்டுப் போய்விட்டார். தடுமாறிப் போனேன்.
அந்தச் சமயத்தில் என்னைத் தாங்கிப் பிடித்து ஆறுதல் படுத்தியவர் என் அம்மாதான். ‘பரவாயில்லேம்மா, எந்தக் காரணத்தைக் கொண்டும் நீ சோர்ந்து போயிறக் கூடாது. வாழ்ந்து காட்டணும்’ என்று என்னைத் தைரியப்படுத்தினார்.
எஸ்.எஸ்.ஆர். என்னை சென்னைக்கு வர வழைத்தார். அவரது நாடகங்களில் நடிக்க வைத்தார். சென்னை தேனாம்பேட்டையில் நானும் என் தாயாரும் தங்கியிருந்தோம்.
சுமார் ஐயாயிரம் தடவை நாடகங்களில் நடித்திருப்பேன். ஓரளவு வருமானம். சாப்பாட்டுக்கு துணிமணிக்கெல்லாம் கஷ்டமில்லாத நிலை.
கதாநாயகியாக அதில் நடித்தபோது நல்ல பாராட்டு. ‘இந்த மாதிரி ஒரு பெண் நம்ம கட்சிக்குக் கிடைத்தால் நல்லாயிருக்கும்’ என்று என்னைக் குறிப்பிட்டுப் பாராட்டினார் ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்கிய அறிஞர் அண்ணா.
அப்போது சிங்களப் படங்களை சென்னையில்தான் எடுப்பார்கள். அப்போது முதல் முறையாக அதில் நடிக்கச் சின்ன வாய்ப்பு. கதாநாயகிக்குத் தோழியாக ஒரு ‘டயலாக்’ பேச வேண்டும்.
சிங்கள வசனம் சொல்லிக் கொடுத்தார்கள். மொழி தெரியாவிட்டாலும் அந்த உச்சரிப்பைப் புரிந்து கொண்டு பேசி நடித்தேன். பாராட்டினார்கள்.
திரும்பவும் நாடகங்கள். கலைஞரோடு, அண்ணாவுடன் எல்லாம் சேர்ந்து நடித்திருக்கிறேன். கே.ஆர். ராமசாமியுடன் நடித்திருக்கிறேன்.
தி.மு.க. மாநாடுகளில் அப்போதெல்லாம் ‘உதய சூரியன்’ நாடகம் தவறாமல் நடக்கும். அதில் கலைஞர் கதாநாயகன். நான் கதாநாயகி.
இந்த நாடகத்தைப் பார்வையாளராக இருந்து பார்த்திருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
‘மாலையிட்ட மங்கை’ படத்தை அவர் எடுத்துக் கொண்டிருந்த நேரம். அதற்குக் காமெடி ரோலுக்கு ஒரு நடிகையைத் தேடியபோது கவிஞருக்கு என் நினைவு வந்து கூப்பிட்டார்.
”எனக்குக் காமெடி ரோல் வராதே சார்.” என்றேன்.
“இல்லை. உனக்கு வரும், நடி” என்று பிள்ளையார் சுழி போட்டவர் கவிஞர். அப்போது சினிமாவில் நடிப்பது அவ்வளவு சுலபமில்லை. முகம் நன்றாக இருக்க வேண்டும். நன்றாக நடிக்க வேண்டும். தமிழைப் பிழையில்லாமல் பேச வேண்டும்.
அப்போது எந்த மொழி நடிகையாக இருந்தாலும் நன்றாகக் கற்றுக்கொண்ட பிறகே நடிக்க வரமுடியும்.
தெலுங்குப் பேசும் நடிகையான கண்ணாம்பா பேசும் தமிழ் மாதிரி நாங்கள் கூடப் பேசி நடிக்க முடியாது. ‘ழ’ ‘ள’ வைக்கூட அவ்வளவு தெளிவாக உச்சரிப்பார்கள்.
1958 ‘மாலையிட்ட மங்கை’ படம் வெளிவந்து நன்றாக ஓடியது.
முதல் படத்தில் எனக்குக் கிடைத்த சம்பளம் 1500 ரூபாய். படம் முடிந்து ‘ரஷ்’ போட்டுப் பார்க்கிற நேரம். அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு நானும் போனேன்.
முதன் முதலில் என்னைத் திரையில் பார்த்தபோது பரவசமாக இருந்தது. கண்ணில் நீர் நிரம்பிவிட்டது.
அதோடு பக்கத்திலிருந்த அம்மாவைப் பார்த்தேன். அவர்களும் அழுது கொண்டிருந்தார்கள். அந்த அளவுக்கு ஒரு சந்தோஷம்.
முதல் படம் வந்ததும் அடுத்தடுத்து நகைச்சுவைப் பாத்திரங்கள். இருந்தாலும் ஏதாவது ஒரு படத்திலாவது கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று ஆசை எனக்கும், என் அம்மாவுக்கும். அந்த வாய்ப்பைக் கொடுத்தவர் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம்.
அவர்கள் தயாரித்த ‘யாருக்குச் சொந்தம்’ என்கிற படத்தில் சந்திரபாபுவுக்கு நான் ஜோடியாக நடித்திருந்தேன். அந்தப் பட ‘ரஷ்’ஷைப் பார்த்துவிட்டு என்னை நேரில் பார்க்காமலேயே ‘கொஞ்சும் குமரி’ படத்தில் என்னை கதாநாயகி ஆக்கி விட்டார்.
ஆர்.எஸ். மனோகர் அதில் கதாநாயகன். நானும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறியது. அது மாடர்ன் தியேட்டர்ஸின் 97வது படம்.
அவர்கள் அடுத்து எடுக்கவிருந்த இரண்டுப் படங்களிலும் மனோகரும், நானும் ஜோடியாக நடிக்க இருந்த நிலையில் டி.ஆர்.சுந்தரம் இறந்து போனது ஒரு துரதிர்ஷ்டம்.
மறுபடியும் நகைச்சுவைப் பாத்திரங்கள். என்னுடன் நடித்தவர்கள் ஒவ்வொருவருமே தனித்துவமுள்ள பிரமாதமான நடிகர்கள். அவர்களிடமிருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டேன்.
எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, காகா ராதாகிருஷ்ணன், சந்திரபாபு என்று ஒவ்வொருடன் நடிக்கும் போதும் அவர்களுடைய நடிப்புப் பாணியை உற்றுக் கவனிப்பேன்.
நாகேஷின் டைமிங் சென்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அபாரமான நடிகர். நான் ஓரளவுக்குக் காமெடியில் முன்னுக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னால், அதற்கு அவருடைய பாதிப்பும் முக்கியக் காரணம்.
நூறு படங்களுக்கு மேல் அவரோடு நடித்திருக்கிறேன். சிவாஜி அண்ணனுடன் நூறு படங்களுக்கு மேல் சேர்ந்து நடித்திருப்பேன். எம்.ஜி.ஆர். அண்ணனுடனும் நிறையப் படங்கள் பண்ணியிருக்கிறேன்.
ஒரே நேரத்தில் இருவருடைய படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்துப் பிரச்சினை வராமல் ஓய்வில்லாமல் நடித்திருக்கிறேன்.
சிவாஜி அண்ணனுடன் பல படங்களில் நடித்தாலும் நேரடியாக என்னைப் பாராட்டிப் பேசமாட்டார்.
“இவகிட்டே ரொம்ப ஜாக்கிரதையா நடிக்கணும். இல்லைன்னா. பீட் பண்ணிடுவா” என்று மற்றவர்களிடம் சொல்லியிருக்கிறார். கடைசியாக அவர் இறப்பதற்கு முன்பு மே மாதம் என் பிறந்தநாள் அன்று அவரைப் பார்த்துக் காலைத் தொட்டுக் கும்பிட்டேன்.
நூறு ரூபாய் பணம் கொடுத்தார். வசனம் பேசுவது சம்பந்தமாக ஏதோ பேச்சு வந்ததும் ‘அந்தந்த வட்டாரத்துக்கான மொழியைப் பேசுவதில் மனோரமாவை அடிச்சுக்க யாருமில்லை’ என்று சொன்னதும் நெகிழ்ந்து போய்விட்டேன்.
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் என் நடிப்பை ரொம்பவும் ரசித்தார். படத்தைப் பார்த்தால் கூட அவரது ரசனைத் தெரியும்.
எவ்வளவு படங்களில் நடித்திருந்தாலும் இப்போதும் நடிப்பில் அவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்வேன். ஒருபோதும் அலட்சியம் காட்ட மாட்டேன்.
ஏகப்பட்ட கஷ்டங்களுக்குப் பிறகுதான் இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறேன். கஷ்டப்பட்டு ஒரு இடத்தைப் பிடித்தால்தான் அது நிலைக்கும் என்று நம்புகிறேன்.
அப்படிப் பிடித்தால்தான் இந்த இடத்தைச் சுலபமாக இழந்து விடக்கூடாது என்கிற உணர்வும் இருக்கும்.
நடிக்கும்போது நான் எப்போதும் பணத்திற்காக ரொம்பவும் ‘டிமாண்ட்’ பண்ணியதில்லை. என்னால் படத் தயாரிப்பாளர்களுக்கு எந்தத் தொந்திரவும் வரக் கூடாது என்று நினைப்பேன்.
இப்போது நடிக்க வருகிற பல நடிகைகள் நடிக்க வந்த நான்கைந்து வருஷங்களில் “போரடிக்குது” என்று சொல்கிறார்கள். இவ்வளவு வருஷங்களாக எப்படி தொடர்ந்து சினிமாவில் இருக்கிறீர்கள் என்று ஆச்சர்யமாகக் கேட்கிறார்கள்.
நடிப்பு எனக்குப் பிடித்த விஷயம். அப்படி நமக்குப் பிடித்தமான விஷயம் நமக்கு எப்படிப் போரடிக்க முடியும்? நம் ஈடுபாடுதான் இதற்குக் காரணம்.
எனக்கு இந்தத் தொழிலில் இருக்கிற வேகத்திற்கு இன்னொரு காரணம் என்னுடைய கணவர்.
என் மகன் பிறந்து பதினைந்து நாள் குழந்தையாக இருந்தபோது தான் நான் கடைசியாக அவரை நான் பார்த்தேன். அதற்குப் பிறகு அவரைப் பார்க்கவில்லை. அவரும் ‘கண் திறந்தது’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
“காமெடி ரோலில் நடிக்கிற, என்ன சம்பாதிச்சுற முடியும்?” என்று எனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.
நானும் வேறு கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லி விட்டேன். ஆனால் என் மனசுக்குள் மட்டும் ஏதோ ஒரு வேகம். தொடர்ந்து ஒரு உந்துதல்.
‘இவருக்கு முன்னாடி எப்படியாவது நாம் சிறப்பாக வாழ்ந்துகாட்ட வேண்டும். என் திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டும்’ என்று நினைத்தேன்.
நான் முன்னேறிக் கொண்டிருந்த சமயத்தில் அவர் சார்பில் சமரசம் பேச வந்தார்கள். நான் மறுத்து அனுப்பி விட்டேன்.
ஆறு வருஷங்களுக்கு முன்பு அவர் இறந்தபோது என் மகன் பூபதி தான் போய் அவருக்குக் கொள்ளி வைத்தான். நானும் போனேன்.
“இவர் என்னை அலட்சியமாக நினைச்சதுக்காகத் தானே இவ்வளவு ஓட்டம் ஓடினோம். இனி யாருக்காக ஓடுறது?” என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது. பிறகு என் மகன், அவன் குடும்பத்துக்காக இயங்கிக் கொண்டிருக்கிறேன்.
என் தாய் இறந்த பிறகு எனக்கு எல்லாமே என் மகன் தான்.
சினிமாவில் எத்தனையோ கஷ்டங்களை அவமானங்களை நான் சந்தித்திருக்கிறேன். ஒரு பெண்ணாக படவுலகில் நிற்பதற்குப் பயந்திருக்கிறேன்.
ஜெயலலிதாம்மாவையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் படாத கஷ்டமா? இருந்தும் எவ்வளவு தன்னம்பிக்கையுடன் போராடி, அவற்றைக் கடந்து வந்திருக்கிறார்?
சமீபத்தில் அவர்களை நான் சந்தித்தபோது இதைச் சொன்னபோது “நீங்களும் தான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கீங்க.
உங்களுடைய தைரியத்தை நான் ‘அட்மையர்’ பண்றேன். பத்மஸ்ரீ விருதெல்லாம் உங்களுக்குப் போதாது” என்று சொன்னார்கள்.
வாழ்க்கையில் தன்னம்பிக்கையில்லாமல் ஏதேதோ முடிவுகளுக்குப் போகிற பெண்கள் கொஞ்சம் எங்களைப் போன்றவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.
எத்தனையோ அவமானங்கள் வரலாம். அப்போதெல்லாம் அதை மீறி நின்றுகாட்ட வேண்டும் என்கிற வேகம் வர வேண்டும்.
சினிமா மட்டுமல்ல, இன்றைக்கு எல்லாத் துறைகளும் ஆணாதிக்கம் நிறைந்த துறைகள்தான். எல்லாவற்றிலும் முட்டுக் கட்டைகள், இடர்ப்பாடுகள் வரத்தான் செய்யும்.
அதைச் சமாளிப்பது தான் விவேகம் என்கிற உணர்வை எனக்குக் கொடுத்தது எங்க அம்மாதான்.”
தி.நகரில் பழமையின் சாயல் தெரிகிற வீட்டில் மகன் குடும்பத்தினருடன் வசிக்கும் மனோரமா சந்திக்கிற மனிதர்களிடம் ஒருவித ஒட்டுதலுடன் பேசுகிறார்.
இந்த ஒட்டுதல் குடும்பத்தினரிடமும், அவரது தொழிலிலும் பிரதிபலிக்கிறது.
ஹால் முழுக்க விருதுகள் நிறைந்து கிடக்கின்றன கலைமாமணியிலிருந்து பத்மஸ்ரீ வரை. ஆனால் எந்த விருதுகளும் இவரது இயல்பை மாற்றியமைத்து விடவில்லை.
பள்ளத்தூர் கிராமத்து மனுஷி இன்னமும் மனோரமாவின் வாழ்க்கையுடன் இருக்கிறார்.
”சாதாரணமாகக் கிடந்த என்னை ஜனாதிபதி கையால் விருது வாங்கக்கூடிய அளவுக்கு உயர்த்தியது எங்க அம்மா.
அவ்வளவு கட்டுப்படாக வளர்த்தார்கள். அவர்களோட சொல்லையும் மீறி கல்யாணம் செய்து நான் தவறிப் போனேன். அந்த வாழ்க்கையில் எனக்கு முன்னேற்றமில்லை.
ஆனால் நடிப்புலகில் எனக்கு நிறைய முன்னேற்றம். அதில் ஒரு திருப்தி. சந்தோஷம். வாழ்க்கையில் சில சமயங்களில் ஒன்றுமில்லாத மாதிரி உணர்ந்தாலும் சினிமா என்னை மகாராணி மாதிரி உணர வைத்திருக்கிறது.
எங்க அம்மா எந்த உணவைக் கொடுத்தாலும் அதை மறுக்க மாட்டேன். அதில் ருசியைப் பார்க்க மாட்டேன். கொடுத்ததை அமிர்தமாக நினைத்துக் கொள்வேன்.
எங்க அம்மா மூலமாக உருவான மனது அமைந்தது பெரிய பாக்கியம்” என்று தீவிரத்துடன் பேசுகிறவர், தன்னை முன்னுக்குக் கொண்டு வந்த காரணத்தைப் பற்றிப் பேசும்போது நிதானமாகச் சொல்கிறார்;
”நாம் செய்வது தொழிலாக இருந்தாலும் அதில் நமக்குள்ள ஈடுபாடு ரொம்ப முக்கியம். ஏதோ மேலெழுந்தவாரியாக அது இருக்கக் கூடாது.
எத்தனையோ அவமானங்கள் வந்தாலும், அத்தனையையும் மீறி நின்று காட்ட வேண்டும் என்கிற வெறி வேண்டும். அதே சமயத்தில் உடனிருக்கிறவர்களின் இயல்பையும் புரிந்துகொண்டு, அனுசரித்து நம்முடைய தனித்தன்மையை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.”
– பத்திரிகையாளர் மணா எழுதி 2003-ல் வெளிவந்த ‘கனவின் பாதை’ நூலிலிருந்து ஒரு கட்டுரை.