மலையாளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
கட்டுப்பெட்டியான ஒரு இந்துக் குடும்பத்தில் ஒரு பெண் படும் கஷ்டங்களைச் சொல்லும் படமாக ‘தி கிரேட் இந்திய கிச்ச்சன்’ இருந்தது.
அதே பாணியில் இஸ்லாமிய குடும்பத்தில் ஒரு பெண் படும் சின்னச் சின்ன அவஸ்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘பெமினிச்சி பாத்திமா’.
கணவன், மாமியார் மற்றும் 3 குழந்தைகளைக் கொண்ட ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் பாத்திமா.
உள்ளூர் மசூதியில் போதகராக இருக்கும் கணவர் அஷ்ரப், வீட்டில் ஒரு வேலையையும் செய்வதில்லை.
வெளியில் போகும்போது அவருக்கான செருப்பைக்கூட பாத்திமாதான் எடுத்துக் கொடுக்க வேண்டும்.
கைக்கெட்டும் தூரத்தில் மின்விசிறியின் சுவிட்ச் இருந்தாலும், சமையலறையில் வேலையாக இருக்கும் மனைவி பாத்திமாவை அழைத்துதான் சுவிட்சைப் போடச் சொல்வார்.
அந்த அளவுக்கு ஆணாதிக்கம் உள்ள குடும்பம் அவருடையது.
ஒருமுறை தன் மகன் படுக்கையில் சிறுநீர் கழித்துவிட, அதை வெளியில் காயவைக்கிறார் பாத்திமா.
அப்போது ஒரு நாய் அதில் சிறுநீர் கழித்துவிடுகிறது.
நாய் ஹராம் என்பதால், அந்த படுக்கையை வீட்டுக்குள் கொண்டுவர கூடாது என்கிறார் கணவர் அஷ்ரப்.
அதனால் பழைய பாத்திரங்களை வாங்க வரும் பெண்ணுக்கு அதை இலவசமாக கொடுக்கிறார். அதிலும் கணவன் மனைவிக்குள் மோதல் வருகிறது. தன்னை கேட்காமல் படுக்கையை மற்றொருவருக்கு கொடுப்பதா என்று பாத்திமாவை திட்டுகிறார் அஷ்ரப்.
ஏற்கெனவே முதுகு வலியால் அவஸ்தைப்படும் பாத்திமாவுக்கு படுக்கை இல்லாமல் வெறும் கட்டிலில் படுக்க முடியவில்லை.
புதிய படுக்கையை வாங்கித் தருமாறு கணவரிடம் கேட்டும் அவர் மறுக்கிறார்.
பாத்திமாவே சுலபத் தவணையில் படுக்கை வாங்க முயலும்போது, அதற்கு வட்டி கட்ட வேண்டியிருக்கும். அதனால் மதத்துக்கு எதிரானது என்று மறுக்கிறார்.
மற்றொருவர் பாத்திமாவுக்கு கொடுத்த படுக்கையையும் வீட்டில் வைக்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் பாத்திமாவே சின்னச் சின்ன வேலைகளை செய்து படுக்கையை வாங்க நினைக்கிறார்.
கணவரின் கட்டுப்பாடுகளையும், வீட்டு வேலைகளையும் கடந்து அவரால் அந்த படுக்கையை வாங்க முடிந்ததா என்பதை பெண்ணியக் கருத்துகளுடன் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் பசில் முகம்மது.
இப்படத்தின் நாயகி பாத்திமாவாக ஷம்லா ஹம்சா நடித்திருக்கிறார். கொஞ்சம்கூட மிகைப்படுத்தாமல் மிக இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ஷம்லா.
வெளியில் வேலை செய்துகொண்டிருக்கும் தன்னை அறையில் ஃபேன் போடுவதற்காக கணவர் அழைக்கும்போது கோபத்துடன் சுவிட்சைப் போடும்போதும்,
அதே கணவன் மற்றொரு கட்டத்தில் ஃபேன் சுவிட்சைப் போடச் சொல்லும்போது,
‘ஏ.. உங்க கையை தூக்க முடியாதா?’ என்று ஆவேசமாக கேள்வி எழுப்பும்போதும், ஒரு சாதாரண குடும்பத் தலைவியை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.
இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த ஆண்டுக்கான கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.
மற்றொரு புறம், அஷ்ரஃபாக நடித்திருக்கும் குமார் சுனில், ஷம்லாவுக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் வில்லத்தனமாக இருக்கும் அவரது கதாபாத்திரம், மனைவி சொந்தமாக உழைக்கத் தொடங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாக காமெடி கதாபாத்திரமாகவும் பின்னர் பரிதாபத்துக்குரிய கதாபாத்திரமாகவும் மாறிவிடுகிறது.
ஒரு கட்டத்தில் தான் சொன்னதை செய்ய மறுக்கும் மனைவியைப் பார்த்து அதிர்ச்சியுடனும், பயத்துடனும், ‘நீ பெமினிச்சியா? (நீ பெமினிஸ்டா) என்று கேட்கும் காட்சியில் ரசிகர்களின் மனதில் நிற்கிறார்.
2025-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருதுடன், சிறந்த அறிமுக இயக்குநர், இரண்டாவது மிகச்சிறந்த மலையாளப் படம் ஆகிய விருதுகளையும் இப்படம் வாங்கியுள்ளது.
2024-ம் ஆண்டில் தயாராகி பல திரைப்பட விழாக்களிலும் விருது வாங்கினாலும் இந்த ஆண்டுதான் இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
கடந்த வாரம் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் இப்படம் வெளியாகி இருக்கிறது.
– பி.எம்.சுதிர்