‘வண்ணத்திரை’ வார இதழின் பொறுப்பாசிரியராக இருந்தபோது, திரு ஏவிஎம் சரவணன் அவர்களுக்கு போன் செய்தேன்.
ஏட்டிக்கு போட்டியாக காரசாரமாக எட்டு கேள்விகள் கேட்கலாமா என்று கேட்டேன். வரச் சொன்னார்.
முதல் கேள்வி…
முள்ளும் மலரும், 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற தரமான படங்கள் வந்து கொண்டிருந்தபோது ‘முரட்டுக்காளை’ என்று ஒரு படத்தை எடுத்து தமிழ் சினிமாவின் பாதையை திசை மாற்றியது ஏன்?
அவர் பொறுமையாக பதில் சொன்னார். ”இயற்கையான சூழலில் கிராமங்களில் படம் எடுக்கும்போது அப்போது பெருகிவிட்டது.
சென்னையில் இருந்து ஸ்டூடியோக்கள் பெரும்பாலும் சும்மா கிடந்தன. எங்கள் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் சுமார் 300 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் வேலை கொடுக்க வேண்டும்… என் தந்தையார் ஸ்டுடியோவில் படம் பார்க்கும் விதத்தில் அந்தப் படத்தை எடுத்தார்.
என் தந்தையார் எடுத்த அந்தப் படத்தால் தமிழ் திரையுலகமே திசை மாறிவிட்டது என்று சொல்வது தவறு.”
இரண்டாவது கேள்வி…
பாரதியாரின் பாடல்களின் உரிமைகளை வாங்கி வைத்துக் கொண்டு தர மறுத்தீர்களே ஏன்?
”சரஸ்வதி ஸ்டோர் என்று ஒரு ரெக்கார்டு நிறுவனம் வைத்திருந்தோம். பாரதியார் பாடல்களைப் பதிவு செய்து வெளியிட்டு வந்தோம்.
ராஜாஜி அவர்கள் சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது பாரதியாரின் பாடல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
அதற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது, பாரதியாரின் பாடல்களை நாட்டுடைமை ஆக்க மறுப்பதாக பேசத் தொடங்கிவிட்டார்கள்.
ஆனால் என் தந்தையார், திரு ராஜாஜி அவர்களை சந்தித்து உடனடியாக உரிமையை வழங்கி விட்டார்.
அதற்காக அரசு கொடுத்த தொகையையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பாரதியாரின் பாடல் உரிமைகள் எங்களிடம் இருந்தது என்பதற்காகவே அப்படி சொல்கிறார்கள்.”
படம்: 1996 ஆம் ஆண்டில் திரு ஏவிஎம் சரவணன் அவர்களிடமிருந்து சிறந்த சினிமா பத்திரிகையாளர் விருது பெற்றபோது.