இயக்குநர் பாக்யராஜ், தான் எடுத்த சாதி மறுப்பு படம் குறித்தும் அதனால் நடிகருக்கு கிடைத்த பட்டம் குறித்தும் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட பாக்யராஜ், ‘புதிய வார்ப்புகள்’ என்ற தனது குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் கதை சொல்லும் பாணியிலும், இயல்பான நடிப்பிலும் தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ்.
இவரது திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருப்பதற்கு இவரது தனித்துவமான திரைக்கதை உத்தியே காரணம்.
அப்படி 100 நாட்கள் கடந்து ஓடிய திரைப்படம் தான் ‘ஒரு கை ஓசை’. 1980-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கித் தயாரித்து நடித்த படம் தான்.
சிறு வயதில் தன் தாயின் இறப்பைக் கண்முன்னே பார்த்ததால் நடிகர் பாக்யராஜ் ஊமையாகிவிடுவார்.
வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு முயலும் போதுதான் பாக்யராஜுக்கு மருத்துவர் அஸ்வினி அறிமுகமாவார்.
இவர்கள் முதலில் நட்பாகப் பழகி பின்பு அந்த நட்பு காதலாக மாறும். இதை பாக்யராஜ், அஸ்வினியிடம் கூறும் பொழுது அஸ்வினி தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதாகக் கூறுவார்.
இறுதியில் என்ன நடந்தது என்பது தான் கதை.
இந்தப் படத்தில் பாக்யராஜ், சாதி மறுப்பு குறித்து பேசியிருப்பார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “இன்றைய இயக்குநர்கள் சாதி மறுப்புக் குறித்து என்ன சொல்கிறார்களோ அதை ‘ஒரு கை ஓசை’ படத்தில் மிகவும் சீரியஸாக சொல்லியிருப்பேன்.
சங்கிலி முருகன் என்ற கதாபாத்திரத்தையும் அப்படித்தான் உருவாக்கியிருப்பேன். அந்த நடிகரின் பெயர் முருகன் தான்.
சங்கிலி முருகன் கதாபாத்திரத்தில் நடித்ததால் இன்று வரை சங்கிலி முருகன் என்று தான் அழைக்கிறார்கள்.
அந்தப் படத்தில் சங்கிலி முருகன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். எல்லோரும் டீ குடிக்கும் இடத்தில் அமர்ந்து அவர்கள் டீ குடிக்க முடியாது. வெளியில் அமர்ந்து தான் டீ குடிக்க வேண்டும்.
அவர்களுக்கு ஒரு புனலில் டீயை ஊற்றுவார்கள். சங்கிலி முருகன் தான் ஊருக்கே காவலாளியாக இருப்பார்.
ஒரு வன்மத்தில் பக்கத்து ஊர் மக்கள் பால்-டாயில் ஊற்றப் போகும் பொழுது சங்கிலி முருகன்தான் சண்டை போட்டு ஊர் மக்களைக் காப்பாற்றுவார்.
அப்போது கத்திக் குத்துப்பட்டு சங்கிலி முருகன் சாகும் நிலையில் இருக்கும்பொழுது ஊர் மக்கள் உனக்கு என்ன கைமாறு செய்யப்போறோம் என்று கேட்பார்கள்.
அதற்கு, “நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்… எங்களையும் மனிதனாக மதித்து நீங்கள் இருக்கும் இடத்தில் அமர்ந்து நீங்கள் குடிக்கும் டம்ளரில் டீ கொடுங்க. எங்களையும் மனுஷனா மதியுங்க” என்பார் சங்கிலி முருகன்” எனக் கூறியுள்ள கே.பாக்யராஜ்.
இப்படி ஒரு காட்சியை எண்பதுகளின் தொடக்கத்தில் தன்னுடைய படத்தில் வைத்திருப்பதாகக் கூறியுள்ளார் இயக்குநர் கே.பாக்யராஜ்.
– நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்