‘ஆயிரத்தில் ஒருவன்’ வசனம் வந்தது இப்படித்தான்!

எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதியவரும், பி.ஆர்.பந்துலுவிடம் உதவி இயக்குநராக இருந்தவருமான ஆர்.கே.சண்முகம் 10 வயதில் சென்னைக்கு வந்து, திரைப்படங்களில் அடிமட்டத் தொழிலாளியாக இருந்து படிப்படியாக முன்னேறியவர்.
 
கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட பல சிவாஜி கணேசன் படங்களில் பணியாற்றினார்.
 

பின்னர் எம்ஜிஆர் படங்களுக்கு ஆஸ்தான வசன கர்த்தாவாகா மாறினார். ஆயிரத்தில் ஒருவன், முகராசி, நினைத்ததை முடிப்பவன், சிரித்து வாழ வேண்டும், ரகசிய போலீஸ் 115, பல்லாண்டு வாழ்க, ஊருக்கு உழைப்பவன், தலைவன், தேடி வந்த மாப்பிள்ளை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

1980-ல் கலைமாமணி விருது பெற்ற ஆர்கே சண்முகத்துக்கு, எம்.ஜி.ஆர்தான் ஒரு வீட்டை பரிசாக வழங்கினார்.

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் மூலம் வசன கர்த்தாவாக அறிமுகம் ஆனார். இப்படத்தில் எம்.ஜி.ஆர். பேசிய வசனங்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் வகையில் அமைந்திருக்கும்.

இதைத் தொடர்ந்து, ‘முகராசி’, ‘தனிப்பிறவி’, ‘ரகசிய போலீஸ் 115’, ‘ரிக்‌ஷாக்காரன்’, ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘ஊருக்கு உழைப்பவன்’ என பல்வேறு எம்.ஜி.ஆர் படங்களில் தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பை ஆர்.கே. சண்முகம் பெற்றார்.

அந்த அளவிற்கு இவரது வசனங்கள் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தன.

இவை அனைத்திற்கு தொடக்கமாக அமைந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் வசனங்கள் உருவான விதம் குறித்து பழைய நேர்காணல் ஒன்றில் ஆர்.கே. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

 

“எம்.ஜி.ஆர் மற்றும் நம்பியார் ஆகியோர் பேசும் வகையில் 7 சீன்களை முதலில் எழுதிக் கொடுக்கிறேன். அதனை எம்.ஜி.ஆரிடம் காண்பியுங்கள். அந்த சீன்கள் அனைத்தும் எம்.ஜி.ஆருக்கு பிடித்திருந்தால், தொடர்ந்து நானே இப்படத்திற்கு வசனம் எழுதுகிறேன்.

இல்லையென்றால், வேறு ஒரு பெரிய எழுத்தாளரைக் கொண்டு வசனம் எழுதுங்கள் என்று கூறி விட்டேன்.

நல்வாய்ப்பாக நான் எழுதிய வசனங்கள் அனைத்தும் எம்.ஜி.ஆருக்கு பிடித்து விட்டது. இதனால், எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்த போது, தனது பாராட்டுகளை அவர் தெரிவித்தார். குறிப்பாக, வாழ்க, வளர்க என்று என்னை வாழ்த்தினார்” 

– நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்

Comments (0)
Add Comment