கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’.
நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது.
‘ஐந்து கொலைகள் ஒரே விதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை’ என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை, பரபரப்பூட்டும் திருப்பங்களுடன் படமாகியுள்ளது .
அறிமுக நாயகன் சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே, படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன்.
சித்து பிரதான நாயகனாக நடித்துள்ள இப்படம் ‘எ சித்து இன்வெஸ்டிகேஷன்’ என்கிற டேக் லைனுடன் ஜூலை 17 இல் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது.
விழாவில் ட்ரெய்லர், பாடல்கள் திரையிடப்பட்டன.
விழாவில் நடிகர், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி பேசும்போது,
“இந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி ஒரு நாள் திருநெல்வேலியில் இருந்து பேசுகிறேன் என்று பேசினார்.
வழக்கமாக கதை சொல்லும் இயக்குநர்கள் சொல்வது போல்தான் இருந்தது. நான் இந்தப் படம் எடுக்க முடியாமல் தோற்று விட்டால் அமெரிக்கா சென்று விடுவேன் என்றார். அவரது நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்து நடிக்கச் சம்மதித்தேன்.
பாலாஜியின் உழைப்புக்காகவே இந்தப் படம் ஓட வேண்டும். பெரிய பெரிய படங்களுக்குக் கூட இவ்வளவு லொகேஷன்களில் எடுத்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்குத் தேடித் தேடி எடுத்தார்கள்.
ட்ரெய்லர் பார்க்கிற வரை இந்தப் படத்தின் மீது நம்பிக்கை இல்லை. இப்போது சொல்கிறேன். இந்தப் படம் தோற்காது. அவர் அமெரிக்கா செல்ல வேண்டியதில்லை” என்றார்.
நடிகர் ரித்விகா பேசும்போது,
“70% படத்தை எடுத்துவிட்டு, வேண்டாம் என்று தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் அதே படத்தை அதே லொகேஷன்களில் எடுத்து ரிலீஸ் வரை கொண்டு வந்து இருக்கிறதே ஒரு சாதனைதான். ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு இவர்களது விடாமுயற்சி தான் காரணம்.
படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் தினசரி ஏதாவது பிரச்சினை வரும்.புரிந்து கொள்வதில் சிக்கல் வரும். மழை பெய்ய வேண்டும் என்று பார்த்தால் அன்று மழை வராது. மழை வேண்டாம் என்றால் மழை வரும்.
எப்படி இருந்தாலும் இயக்குநர் பாலாஜி ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருந்தார். கதைகளை மட்டுமே நம்பி இன்று ஹபீபி, நூறு சாமி போன்ற படங்கள் ஓடுகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் ஓடும் ஆதரவு கொடுங்கள்” என்றார்.
நடிகர் மைம் கோபி பேசும்போது,
“சினிமாவில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் நாட்டில் 140 கோடி பேர் இருக்கிறார்கள். எத்தனை பேரை கேமரா பதிவு செய்கிறது?
சினிமாவில் நடிக்கும் இந்த குறைந்த அளவு மக்களைத்தான் பதிவு செய்கிறது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவர்கள் சினிமாவில் இருப்பவர்கள்.
சினிமா எல்லாரையும் மாற்றி விடும். ஏற்கும் பாத்திரத்தில் நல்லவனாக மட்டுமல்ல கெட்டவனாகவும் மாறி மாறி நடிக்கிறோம்.
எல்லா திறமைசாலிகளுக்கும் இடம் தருவது சினிமா தான். நீங்கள் எப்போதும் சந்தோஷத்தை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். துக்கத்தைத் தள்ளி வையுங்கள். மகிழ்ச்சியாக வாழலாம்” என்றார்.
படத்தின் கதாநாயகன் சித்து பேசும்போது,
“எனக்குக் குருநாதர் போல இருப்பவர் மைம் கோபி அண்ணன். அவர் ஒரு நடிப்பு பயிற்சிப்பள்ளி வைத்திருக்கிறார். அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எனக்குப் பலரின் அறிமுகங்கள் கிடைத்தது அவரால்தான்.
இன்றைய காலகட்டத்தில் நாமே நம்மைப் பற்றி சொல்ல வேண்டும். மற்றவர்களிடம் நம்மை நாமே முன் வைக்க வேண்டும். அப்படிப்பட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம்.
‘திருமணம்’ தொடரில் நடித்ததற்குப் பிறகு வந்துள்ள ஒரு பெரிய வாய்ப்பாக இந்தப் படத்தைப் பார்க்கிறேன். இந்த படத்தின் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.
‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.