ரசவாதி இயக்குநருடன் கைகோர்க்கும் விக்ரம்!

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விக்ரம். இதன் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் நடித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து நடிகர் விக்ரமின் 62-வது படமாக வெளிவர உள்ளது வீர தீர சூரன். இதனை சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை முதலிலும், முதல் பாகத்தை அடுத்ததாகவும் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார்கள். ஜி.வி. இசையமைக்கிறார்.

இந்நிலையில் விக்ரம் 63 படத்தின் கதையை இயக்குநர் சாந்த குமார் கூறியுள்ளதாகவும் விகரமுக்கு கதை பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மௌனகுரு, மகாமுனி படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் சாந்தகுமார். இவரது சமீபத்திய ரசவாதி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதற்கு முன்பு தில், தூள் படத்தின்போது சாந்தகுமார் தரணியின் உதவி இயக்குநராக வேலை செய்துள்ளார். அதனால் விக்ரமிடம் ஏற்கனவே நல்ல பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

வித்தியாசமான கதைகளை எடுக்கும் சாந்தகுமார், பல தோற்றங்களில் கலக்கும் விக்ரம் இணைந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என விக்ரம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Comments (0)
Add Comment