காலம் கடந்தும் புகழ் பாடும் ஜெயராமன் பாடல்கள்!

தமிழ்த் திரையிசை பலவகைக் குரல்களைக் கண்டிருக்கிறது. சில குரல்கள் அழகானவை… சில குரல்கள் ஆழமானவை… சில குரல்கள் ஆராதிக்கக் கூடியவை…

இது என்ன வகை குரல் என்று ஆராயும்போதே, அந்தக் குரலை ரசித்து, அந்தக் குரலில் லயித்து, அந்தக் குரல் ரசிகர்கள் மனதில் ரகசியமாக நுழைந்து நிரந்தரமாய் தங்கிவிட்டது.

இது ஒரு வித்தியாசமான குரல்… சாஸ்திரீய சங்கீதத்தை அறிந்தவர்களும், சராசரி சங்கீதத்தைப் புரிந்தவர்களும், சங்கீதம் என்ன விலை? என கேட்கும் ஞான சூனியங்களும், இந்தக் குரலில் கரைந்து போவார்கள்.

அப்படிப்பட்ட வித்தியாசமான குரல் ஒன்று, தமிழ்த் திரையுலகை 30 ஆண்டுகள் ஆட்சி செய்து கொண்டிருந்தது. இன்றும் ரசிகர்கள் மனதில் மானசீகமாக ஆட்சி செய்து வருகிறது.

அந்தக் குரலுக்கு, பெற்றோர் இட்ட பெயர் ஜெயராமன். கோவில் நகரமான சிதம்பரத்தில் பிறந்ததால் சிதம்பரம் ஜெயராமன். ரசிகர்கள் அறிந்த பெயரோ சி.எஸ். ஜெயராமன்.

இவரது தந்தையார் சுந்தரம்பிள்ளை, பிரபலமான கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர். அதனால், சிறு வயதிலிருந்தே இசை ஞானம் இவரிடம் தஞ்சமடைந்தது… ஆரம்பத்தில் நடிகனாக அரிதாரம் பூசியவர் ஜெயராமன்.

கிருஷ்ண லீலா, பக்த துருவன், நல்லதங்காள், லீலாவதி சுலோச்சனா, இழந்த காதல், பூம்பாவை, கிருஷ்ண பக்தி ஆகிய படங்களில் ஜெயராமன் நடித்துள்ளார்.

உதயனன் வாசவ தத்தா, ரத்தக் கண்ணீர் ஆகிய இரண்டு படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

விஜயகுமாரி, கிருஷ்ண விஜயம் ஆகிய படங்களில் இணை இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

நடிகர், இசையமைப்பாளரைவிட, மக்கள் மனதில் சி.எஸ். ஜெயராமன் பாடகராகவே அதிகம் அறியப்பட்டார். அதற்குக் காரணம் அந்த வித்தியாசமான குரல் வளம்… அந்தக் குரலில் எத்தனையோ வெற்றிப் பாடல்கள்.

கா கா கா, நெஞ்சு பொறுக்குதில்லையே, அன்பினாலே உண்டாகும் இன்பநிலை, உள்ளம் ரெண்டும் ஒன்று, விண்ணோடும் முகிலோடும், குற்றம் புரிந்தவன், ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்,

இன்று போய் நாளை வாராய், தன்னைத் தானே, அன்பாலே தேடிய என் அருமைச் செல்வம், சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான், யார் சொல்லுவார் நிலவே, வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி, காவியமா நெஞ்சின் ஓவியமா உள்ளிட்ட பாடல்கள் காலம் கடந்தும் ஜெயராமனின் புகழ் பாடும்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணன் தான் சி.எஸ். ஜெயராமன்.

கலைஞர் – பத்மாவதி தம்பதியருக்குப் பிறந்த மு.க.முத்து, ஜெயராமனின் மகளை மணந்தார்.

கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்கள் திரையில் ஒலிப்பதற்கு திறவுகோலாக இருந்தவர் சி.எஸ். ஜெயராமன்.

கலைஞர் திரைப்படத் துறையில் நுழைய வாசலாக இருந்தவரும் சி.எஸ்.ஜெயராமன் தான்.

இசையின் அரிச்சுவடிகளை ஆழமாகக் கற்றதால், சி.எஸ்.ஜெயராமன் திரையிசை சித்தர் என்றும் அழைக்கப்பட்டார்.

இது என்ன வகையான குரல் என்று அறியாமலேயே அனைவரையும் தன்பால் ஈர்த்தவர், இந்த இசைச் சித்தர்.

ஆழமான தமிழ் உச்சரிப்பால் தன் பாடல்களுக்கு மேலும் அழகு சேர்த்தவர் சி.எஸ். ஜெயராமன்.

அதற்கான காரணத்தை மருதகாசி வழியாக, தாம் பாடிய பாடல் வாயிலாகவே பதில் சொல்லியிருக்கிறார்.

வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி
என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடிக்கோடி
கற்பனைகள் தந்தாள்…

இந்த பதிலும் அவர் பாடிய தமிழைப் போலவே ரசிக்கத்தான் வைக்கிறது.

 – பழம்பெரும் திரைப்படப் பாடகர் சி.எஸ்.ஜெயராமன் நினைவு நாள் இன்று (ஜனவரி 29, 1995)

✍️  – லாரன்ஸ் விஜயன்

Comments (0)
Add Comment