இட்லி கடை, பராசக்தி, மண்டாடி, சூர்யா – வெங்கி அட்லூரி படம், தனுஷ் – விக்னேஷ் ராஜா படம், விஷால் – ரவி அரசு படம், துல்கர் சல்மானின் தெலுங்கு படம் என்று அடுத்த 12 மாதங்களில் வெளியாகிற முக்கியமான படங்கள் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் வரவிருக்கின்றன.
இதற்கு நடுவே, அவர் ஹீரோவாக நடிக்கிற படங்களும் வெளியாகவிருக்கின்றன.
அந்த வகையில், ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ தந்த இயக்குநர் மு.மாறன் உடன் ஜி.வி.பிரகாஷ்குமார் கைகோர்த்திருக்கிற ‘பிளாக்மெயில்’ இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.
ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, தேஜு அஸ்வினி, ரமேஷ் திலக், ஹரிப்ரியா இசை, லிங்கா, முத்துகுமார், ரெடின் கிங்ஸ்லி உட்படப் பலர் நடித்துள்ளனர்.
‘பிளாக்மெயில்’ தரும் திரையனுபவம் எத்தகையது?
‘பிளாக்மெயில்’ கதை!
அசோக் (ஸ்ரீகாந்த்) ஒரு வெற்றிகரமான தொழிலதிபர். மனைவி அர்ச்சனா (பிந்து மாதவி), குழந்தை அனு உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
ஒருநாள் ஊட்டி பண்ணை வீட்டிற்கு மனைவியையும் மகளையும் அழைத்துச் செல்கிறார் அசோக். ஒரு வளைவில் எதிரே வரும் கார் அவரது கார் மீது மோதுகிறது.
அந்த காரை ஓட்டி வந்தவர், தனது காரில் சேதாரம் இருப்பதாகக் கூறிச் சண்டையிடத் தொடங்குகிறார். பதிலுக்கு அவருடன் மல்லுக்கட்டுகிறார் அசோக்.
ஒருவழியாக, அவருக்குப் பணம் கொடுத்துவிட்டு காருக்கு திரும்பி வருகின்றனர் அசோக் மற்றும் அர்ச்சனா.
இன்னொரு புறம், மருந்து சாதனங்கள் விநியோக நிறுவனமொன்றில் வாகன ஓட்டுநராக இருந்து வருகிறார் மணி (ஜி.வி.பிரகாஷ்குமார்). ஒரு மருந்தகத்தில் வேலை பார்க்கும் ரேகா (தேஜு அஸ்வினி) அவரது காதலி.
திடீரென்று ஒருநாள், தான் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்கிறார் ரேகா. அதனைக் கேட்டு அதிர்ச்சியாகும் மணி, அவரை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார்.
மருத்துவரிடம் காண்பித்துவிட்டு வெளியே வந்ததும், தான் ஓட்டி வந்த வாகனம் காணாமல் போனதை அறிகிறார் மணி.
உடனடியாக, அங்கிருக்கும் சிசிடிவி ஒன்றைப் பார்க்கிறார். அதில், ஒரு நபர் அந்த வாகனத்தைத் திருடிச் சென்றது தெரிகிறது.
அத்தகவலைத் தனது நிறுவன உரிமையாளரிடம் (வேட்டையன்) சொல்கிறார். அவரோ, ‘சரி, அதிலிருந்த பார்சல் என்னாச்சு’ என்கிறார்.
‘என்ன பார்சல்’ என்று மணி கேட்க, அதிலிருந்தது போதைப்பொருள் என்று அறிந்ததும் மேலும் அதிர்ச்சி ஏற்படுகிறது.
‘என்னையவே ஏமாத்துறியா’ என்று ரேகாவைக் கடத்த ஆட்களை அனுப்புகிறார் உரிமையாளர்.
ரேகாவை மீட்க வேண்டுமானால், காணாமல் போன வாகனத்தையும் அதிலிருந்த போதைப்பொருளையும் கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அதற்கான பணத்தைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
இந்தச் சூழலில், அந்த வாகனத்தைத் திருடியவரைப் பற்றி அறிவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார் மணி மற்றும் அவரது நண்பர் (ரமேஷ் திலக்).
அப்போது, ‘நான் சொல்ற ஒரு குழந்தைய கடத்துனா, நீங்க கேட்ட பணத்தை தாரேன்’ என்கிறார் ஒரு நபர் (லிங்கா). அவர், அசோக்கின் மனைவி அர்ச்சனாவின் முன்னாள் காதலர்.
அர்ச்சனாவின் அந்தரங்க வீடியோக்களை இண்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, அவரிடம் இருந்து பணம் கறக்கும் முயற்சியில் இருக்கிறார்.
‘அது நடக்காது’ எனும் நிலையில், குழந்தை அனுவைக் கடத்திப் பணம் பறிக்கத் திட்டமிடுகிறார்.
முதலில் சொன்னவாறு, அசோக்கின் காரை மடக்கி அதில் இருக்கும் குழந்தையைக் கடத்தத் திட்டமிட்டது அவர் தான்.
அதனை மணியும் அவரது நண்பரும் செய்கின்றனர். ஆனால், அந்த காரில் அனு இல்லை. அதனால் இருவரும் வெறும் கையோடு திரும்பி வருகின்றனர்.
அப்படியானால், குழந்தை அனு எங்கிருக்கிறது? அதனைக் கடத்தியது யார்? இந்த கேள்விக்குப் பதில் சொல்கிறது இப்படத்தின் மீதி.
‘யாரிடம் அந்த குழந்தை இருக்கிறது’ என்கிற விஷயம், இக்கதையில் ’ஆடு புலி ஆட்டம்’ போலக் கையாளப்பட்டிருக்கிறது.
சில பாத்திரங்கள். அவற்றுக்கான பிரச்சனைகள். அதற்காக முன்வைக்கப்படும் தீர்வுகள். அவை ஏற்படுத்தும் அதிகப்படியான சிக்கல்கள் என்று நகர்கிறது ‘பிளாக்மெயில்’.
இந்த கதையில் இருக்கிற சம்பவங்களை, அதன் பின்னிருக்கிற காரணங்களை, விளைவுகளை ‘நான் லீனியர்’ உத்தியில் திரைக்கதை ஆக்கியிருக்கிறார் இயக்குனர் மு.மாறன்.
அது ரசிகர்களுக்கு ‘ஹை’ தருகிறதா, ‘லோ’ கொடுக்கிறதா என்பதே இப்படத்தின் பலமாகவும் பலவீனமாகவும் உள்ளது.
அசத்தும் முன்பாதி!
ஒரேநேரத்தில் ஒரு இளம்பெண், ஒரு குழந்தை அடுத்தடுத்து கடத்தப்படுகின்றனர். அதுவும் அடுத்தடுத்து வெவ்வேறு நபர்கள் அந்த கடத்தலில் ஈடுபடுகின்றனர்.
அந்த இடங்களில் ‘பாலியல் அத்துமீறல்’ சார்ந்த விஷயங்களைச் சேர்த்தால், குடும்பத்தோடு படம் பார்க்க முடியாது.
அப்பாத்திரங்களைத் துன்புறுத்துகிற மாதிரியான காட்சியமைப்பு, சாதாரண பார்வையாளரை தியேட்டருக்குள்ளேயே வரவிடாமல் தடுத்துவிடும்.
அதனால், ரொம்பவே அடக்கி வாசித்திருக்கிறார் இயக்குநர் மு.மாறன். அதற்கேற்ப, பின்பாதியில் சில விஷயங்களை ‘சாஃப்ட்’டாக கையாண்டிருக்கிறார்.
ஒருகட்டத்தில், ‘எப்படியும் வேற யாராவது இவங்களைக் கடத்தியிருப்பாங்க’ என்று நினைக்கிற அளவுக்கு ஒரு மோசமான நிலைமைக்கு ஆளாகிறது திரைக்கதை. அதுவே ‘பிளாக்மெயில்’ படத்தின் மிகப்பெரிய பலவீனம்.
அதனைக் கடக்கத் தயார் என்றால், இந்த படம் ‘ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் இருந்தா போதும்’ என்பவர்களை நிச்சயம் திருப்திப்படுத்தும்.
அதற்கு நேர்மாறாக, இதன் முன்பாதி பரபரவென்று நகர்ந்து நம்மை அசத்துகிறது.
‘பிளாக்மெயில்’ படத்தின் பாத்திரங்கள் சாதாரணமானவர்களாகக் காட்டப்பட்ட போதும், அக்கதையோடு பார்வையாளர்களால் ஒன்ற முடியாது.
அதேநேரத்தில், இயக்குநரின் கதை சொல்லலை ரசிக்க முடியும். அதுவே இப்படத்தின் பலம்.
அதற்கேற்ப, காட்சியாக்கத்தில் துணை நின்றிருக்கின்றனர் ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், கலை இயக்குனர் எஸ்.ஜே.ராம், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் உள்ளிட்டோர்.
டி.இமான் ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். சாம் சி.எஸ். இசையில் மீதமுள்ள பாடல்கள் ‘ஓகே’ ரகம்.
பின்னணி இசையைப் பொறுத்தவரை, காட்சிகளின் உள்ளடக்கத்தைப் பெரிதாக்கிக் காட்ட வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார் சாம் சி.எஸ்.
‘படம் ஆரம்பிச்சதுல இருந்து முடியற வரைக்கும் இவரு தட்டிக்கிட்டே இருப்பாருப்பா’ என்று பார்வையாளர்கள் சொல்கிற வகையில் இல்லாமல், ஆங்காங்கே மௌனத்திற்கும் இடம் கொடுத்தால் அந்த இசையை இன்னும் நன்றாகக் கிரகித்து அனுபவிக்க முடியும்.
நடிப்பைப் பொறுத்தவரை ஜி.வி.பிரகாஷ்குமார், தேஜு அஸ்வினி, ரமேஷ் திலக், ஹரிப்ரியா நால்வருமே நம்மை ஈர்க்கின்றனர்.
அனுவாக நடித்த குழந்தையும் கூட நம்மை ஈர்க்கிறது.
‘வேட்டை’ முத்துக்குமார் சம்பந்தப்பட்ட ‘சீரியஸ்’ காட்சிகளில் ரெடின் கிங்ஸ்லி பண்ணுகிற ‘காமெடி’ சிரிக்க வைக்கிறது. ‘அது லிமிட்டுக்குள்ள இருக்கணும்’ என இயக்குநர் நினைத்தது பாராட்டுக்குரியது.
அதே நேரத்தில், இடையிடையே டி.எஸ்.ஆர் வந்து போவது ‘ரெடின் கிங்ஸ்லிக்கு பதிலாக இவர் வருகிறாரா’ என்ற கேள்வியை எழுப்புகிறது.
இந்த படத்தில் பிரதான பாத்திரங்களை ஏற்றிருக்கும் ஸ்ரீகாந்த், அர்ச்சனா இருவரும் பெரும்பாலான காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கின்றனர்.
ஆனால், குளோஸ் அப் இல்லாத ஷாட்களில் அவர்களது உடல்மொழி, பாவனைகள் நமக்கு திருப்தி தருவதில்லை. அதனைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
இவர்களோடு சுமார் ஒரு டஜன் பேராவது சின்னச் சின்ன பாத்திரங்களில் வந்து போகின்றனர்.
முக்கியமான பாத்திரங்கள், அவற்றின் மனநிலை, கதை நிகழ்கிற நிலப்பகுதி, அங்கிருக்கிற இடங்கள், அப்பகுதி மக்களுக்கு இடையே பாத்திரங்களின் நடமாட்டம் ஆகியவற்றை ஓரளவுக்குத் திருப்தி தரும் வகையில் காட்டியிருக்கிறது ‘பிளாக்மெயில்’.
அதேநேரத்தில், ‘எப்படியாவது அந்த குழந்தைய பேரண்ட்ஸ்கிட்ட ஒப்படைச்சிடுங்கப்பா’ என்ற நினைப்புடன் ‘ரிலாக்ஸ்’ ஆகிற அளவுக்கு இரண்டாம் பாதி அமைந்திருக்கிறது.
‘நாம நல்லாயிருக்கணும்னா இங்க எது வேணும்னாலும் செய்யலாம்’ என்கிற தொனியில் ஜி.வி.பிரகாஷ்குமார் பாத்திர ‘மைண்ட் வாய்ஸ்’ உடன் திரைக்கதை தொடங்குகிறது. படத்தின் கிளைமேக்ஸுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
அது போன்ற இடங்களைச் செப்பனிட்டிருந்தால், பார்வையாளர்களை இருக்கை நுனியிலேயே இறுதிவரை அமர வைக்கும் வகையில் இந்த ‘நான் லீனியர்’ கதை சொல்லல் அமைந்திருக்கும். அதனை மு.மாறன் ‘மிஸ்’ செய்ததில் வருத்தம் தான்.
அதையும் தாண்டி, ‘ஓகே’ ரகமாக ‘பிளாக்மெயில்’ அமைந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்