இதயத்தில் பூட்டி வைத்தேன்; அதில் என்னையே காவல் வைத்தேன்!

திரைத் தெறிப்புகள் – 41:

*
ஒரு உயிர்ப் பிரிவதை உணர்வது என்பது அவரவர் மனம் சம்பந்தப்பட்ட விஷயம்.

ஒருவரை இழக்கும்போது, சட்டென்று அவர் நம்மைவிட்டுப் போனாலும், அவரைப் பற்றிய அடர்த்தியான நினைவுகள் நம் மனதில் தேங்கி நிற்கின்றன.

பலர் அந்தப் பிரிவைக் கடந்து செல்வது போல, சிலரால் அந்த நினைவுகளைக் கடந்து செல்ல முடிவதில்லை. அந்த நினைவு பெரும் கல்லாகக் கனத்த நிலையில், வலி நிரம்பியதாகவே இருக்கிறது.

இந்தப் பிரிவின் வலியை உணர்த்தியபடிப் பல திரைப்படப் பாடல்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன.

பீம்சிங்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘பாலும் பழமும்’ படத்தில் இடம்பெற்ற ”போனால் போகட்டும் போடா…” என்ற பாடலும் பிரிவின் துயரை வெளிப்படுத்திய பாடல் தான்.

அதைப்போல தான் 1963-ம் ஆண்டில் வெளிவந்த ‘பார் மகளே பார்’ என்கின்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “அவள் பறந்து போனாளே” என்று துவங்கும் பாடலும்.

கவியரசர் கண்ணதாசனின் மிக எளிய வரிகளில் தான் எவ்வளவு கவித்துவ மேன்மை?

பின்னணிப் பாடகர்கள் பி.பி. ஸ்ரீனிவாஸூம் டி.எம்.சௌந்தரராஜனும் இணைந்து, இந்தப் பாடலைப் பாடியிருப்பார்கள்.

இந்தப் படத்திற்கு இசையமைத்தவர்கள் இசை இரட்டையர்களான எம்.எஸ்.விஸ்வநாதனும் டி.கே. ராமமூர்த்தியும்.

இந்தப் படத்தில், நடிகர் முத்துராமன் பாடுவதாக இந்தப் பாடல் துவங்கும்.

“அவள் பறந்து போனாளே..
என்னை மறந்து போனாளே..
நான் பார்க்கும்போது
கண்கள் இரண்டைக் கவர்ந்து போனாளே…

என் காதுக்கு மொழியில்லை.
என் நாவுக்குச் சுவையில்லை.
என் நெஞ்சுக்கு நினைவில்லை.
இனி நிழலுக்கும் உறக்கமில்லை…”

– என்கிற பாடல் வரிகளைக் கேட்கும்போது, பி.பி.எஸ்.ஸின் மென்மையான குரலும், கண்ணதாசனின் கவி மொழியும் மனதைக் கிறங்கடிக்கும்.

அடுத்துத் துவங்கும் டி.எம்.எஸ்.ஸின் கம்பீரக் குரல்,

“இந்த வீட்டுக்கு விளக்கில்லை.
சொந்தக் கூட்டுக்குக் குயிலில்லை.
என் அன்புக்கு மகளில்லை.
ஒரு ஆறுதல் மொழியில்லை…”

என்று, இந்தப் பாடலை குறுந்தாடியுடன் சிவாஜி பாடுவதாக நடித்திருக்கும் விதம் பார்க்கிற எவரையுமே தனித்து ஈர்க்கும்.

விஜயகுமாரி இறந்ததாகக் கருதி, காதலனான முத்துராமனும், தன் மகளை இழந்ததாக சிவாஜியும் மாறி மாறிப் பாடும் விதமாக அமைந்த இந்தப் பாடலின் அடுத்த வரிகள் இவை.

“என் இதயத்தில் பூட்டி வைத்தேன்.
அதில் என்னையே காவல் வைத்தேன்.
அவள் கதவை உடைத்தாளே..
தன் சிறகை விரித்தாளே…”

இறுதியில் கேமிரா கோணத்தில் பார்க்கும்போது டைட் – க்ளோசப்பில் சிவாஜியின் முகம் வெளிப்பட, இப்படி பாடியிருப்பார் டி.எம்.சௌந்தரராஜன்;

“அவள் எனக்கா மகளானாள்!
நான் அவளுக்கு மகனானேன்…
என் உரிமைத் தாயல்லவா..
என் உயிரை எடுத்துக் கொண்டாள்…”

என்று நிறைவடையும் இந்தப் பாடல், சொந்த உறவையோ, நெருங்கிய நட்பையோ, அல்லது நாம் விரும்பிய ஒருவரையோ இழக்கும்போது, அந்த இழப்பின் வலியைக் கடக்க முடியாதபடி உணரும் எவருக்குமே பொருந்தும்.

– மணா.

Comments (0)
Add Comment