…அப்படி ஒரு ரிஸ்க் அந்தக் காலத்திலேயே எடுத்தவங்கள்ள!…
தமிழ் சினிமாவில் பாடகர்களின் பங்கும் படங்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்ததுவும் உண்டு. படத்தின் கதை, கதாநாயகன், நாயகி, நகைச்சுவை இவைகளால் திருப்தி அடைந்திராத ரசிகர்கள், பாடல்களால் அதிகம் ஈர்க்கப்பட்டு திரையரங்குகளை முற்றுகையிட்ட காலத்தினையும் சினிமா உலகம் கடந்தே தான் வந்திருக்கிறது.
பாடல்கள் வெற்றி பெற இசையும், பாடல் வரிகளும் எவ்வளவு முக்கியமோ அதே போலத் தான், அந்தப் பாடல்களை பாடிய சிங்கர்களின் குரல் ஜாலம். இயக்குநர் ஸ்ரீதர் தமிழ் சினிமாவை முதன் முதலாக வெளிநாட்டு படப்பிடிப்பு அழைத்துச் சென்றவர்.
‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை ஒரே அறைக்குள் முடித்து விட்ட இவர் தனது கேரியரின் முக்கியமான படமாக மாறிய ‘சிவந்த மண்’ படத்தை வெளிநாடுகளுக்குச் சென்று படமாக்கி காட்டியவர்.
இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஃபிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு படக்குழுவினரை அழைத்துச் சென்றார். சொல்லப் போனால் ‘ஆல்ப்ஸ்’ மலையை தமிழ் ரசிகர்களுக்கு திரையில் காட்டிய முதலாம் நபர் இவரே.
அதிலும் குறிப்பாக ‘சிவந்த மண்’ படத்தில் வரும் “பட்டத்து ராணி” பாடலைப் பாட பாடகிகள் தயக்கம் காட்டியிருக்கின்றனர் அந்த நாட்களில்.
அந்த அளவுக்கு உச்சரிப்புகளைக் கொண்டிருந்தது “பட்டத்து ராணி” பாடல். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் முன்னணி பாடகியாக இருந்த ஆஷா போன்ஸ்லே இந்தப் பாடலைப் பாட தயக்கம் காட்டி தவிர்த்து வந்ததாக பேசப்பட்டது அந்த நாட்களில்.
ஆனால் வார்த்தைகள் மற்றும் இசையமைப்பாளரின் இசையில் இருந்த சவாலை ஏற்றுக் கொண்டு எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாகப் பாடி முடித்தார் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி.
அதற்கு ஏற்றார் போல நடனமாடி நடித்திருந்தார் நடிகை காஞ்சணா. மொத்ததில் தமிழ் திரை உலகையே வாயடைக்கச் செய்திருந்தது எல்.ஆர். ஈஸ்வரி “பட்டத்து ராணி” பாடலை பாடியிருந்த விதம்.