சுருள்சுருளாகத் தோள்களில் புரளும் மயிர்கற்றை. தமன்னாவே தோற்றுவிடும்படியான பால் வெண்மை வண்ணம். முப்பதுகளில் இருப்பதைத் திண்ணென்று எடுத்துக் காட்டும் வாளிப்பான தேகம்.
அதையும் மீறிப் பதின்ம வயதுப் பெண்ணுக்குரிய குறும்புகள் வெளிப்படுகிற உடல்மொழி. பளிச்சென்ற புன்னகை.
அனைத்துக்கும் மேலே நடிக்கிற கதாபாத்திரத்தைப் பார்வையாளர்களிடத்தில் கொண்டு சேர்க்கிற அளவான நடிப்பு. இப்படிப் பல சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் சான்யா மல்ஹோத்ரா.
இப்போது ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடல் வரி காணொலியில் சிம்புவுடன் போட்டி போட்டு நடனமாடி ‘யார் இவர்’ என்று கேட்க வைத்திருக்கிறார்.
யூடியூப் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 ஆக இருக்கும் இந்த ‘ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு சா’ பாடல் இதுவரை சுமார் 2 கோடியே 35 லட்சம் பார்வையாளர்களை வசீகரித்திருக்கிறது.
அவற்றில் கணிசமான பார்வைகள் சான்யாவைத் திரும்பத் திரும்பப் பார்க்க வந்தவர்களாக இருக்கும் என்று அறுதியிட்டுச் சொல்கிற அளவுக்கு இருக்கிற அவர் தோன்றுகிற ஷாட்கள்.
’அலைபாயுதே’வில் வரும் ‘யாரோ யாரோடி’, ‘ராவணன்’னில் வரும் ‘கெடா கெடாக் கறி’, ’காற்று வெளியிடை’யில் வந்த ‘சாரட்டு வண்டியில’ பாடல்களில் வந்த விழாக்கோலத்தை நினைவூட்டும் வகையில் இப்பாடல் இருப்பதாகச் சமூகவலைதளங்களில் சிலர் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இது போக ‘செக்கச் சிவந்த வானம்’மில் வரும் ‘கள்ள களவாணி’, ‘பொன்னியின் செல்வன் 1’இல் வரும் ‘ராட்சச மாமனே’,
’உயிரே’வில் வரும் ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’, ’பம்பாய்’யில் வரும் ‘கண்ணாளனே’, ’தளபதி’யில் வரும் ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ளே’
என்று பல பாடல்களில் இதே போன்று விழாக்கோலம், சம்பந்தப்பட்டவர்களின் மகிழ்ச்சி, அதனூடே முகம் காட்டும் காதல் குறும்புகள் வெளிப்பட்டிருக்கும்.
யதார்த்த வாழ்வில் ‘மினிமலிசம்’ விரும்பும் இயக்குநர் மணிரத்னம், தனது திரைக்கதைகளில் வரும் இது போன்ற நிகழ்வுகளில் பிரமாண்டத்தைப் புகுத்துவது ரசிக்கத்தக்க முரண்.
இப்போது விஷயத்திற்கு வருவோம். மணிரத்னத்தின் படங்களில் தொடர்ச்சியாக நாம் பார்த்த ஷாலினி, மனீஷா கொய்ராலா, சோபிதா துலிபாலா, அதிதி ராவ் ஹைதரிக்களின் இன்னொரு வடிவமாகவே இதில் தெரிகிறார் சான்யா மல்ஹோத்ரா.
யார் இவர்?
’டங்கல்’ படத்தில் அமீர்கானின் இரண்டு மகள்களில் ஒருவராக நடித்து இந்தித் திரையுலகில் நுழைந்தவர் சான்யா. விஷால் பரத்வாஜ் இயக்கிய ‘படாஹா’வில் நடித்து ‘யார் இவர்’ என்று ரசிகர்களைக் கவனிக்க வைத்தார்.
ஐம்பதுகளின் இறுதியிலும் குழந்தைப்பேறு வாய்க்கலாம் என்பதைச் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய நகைச்சுவைப் படமாக உருவாக்கப்பட்ட ‘பதாய் ஹோ’வில் அந்த மூத்த மகனின் ஜோடியாக நடித்தவர் இவரே.
பிறகு, நவாஸுதின் சித்திக் உடன் இவர் நடித்த ‘போட்டோகிராஃப்’ திரைப்பட விழாக்களில் மட்டுமல்லாமல் சாமான்ய ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட எளிமையான காதல் கதையாக அமைந்தது.
சாகுந்தலா தேவி, பஹ்லெய்ட், மீனாட்சி சுந்தரேஸ்வர், லவ் ஹாஸ்டல், ஹிட்: தி பர்ஸ்ட் கேஸ், கதல் படங்களில் தனித்துவமான நடிப்பால் இந்தி திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் சான்யா.
‘லூடோ’வில் தனக்கு விரைவில் திருமணம் என்கிற சூழலில், பாய்ப்ரெண்ட் உடன் சேர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆன பிரச்சனையை எப்படிச் சமாளிப்பதென்று தெரியாமல் முழிக்கிற பாத்திரத்தில் நடித்தார்.
இது போன்ற பாத்திரங்களில் நடிப்பது மிகப்பெரிய மதிற்சுவரின் ஏறி நடப்பதற்கு ஒப்பானது. அதையே ‘சவாலாக’ எடுத்துக்கொண்டவர், திடுதிப்பென்று ‘ஜவான்’னில் ஷாரூக்கானின் டீமில் இருக்கும் ஆறு பெண்களில் ஒருவராகத் தோன்றினார்.
வழக்கமான பாத்திரம் என்றபோதும், நீண்டகாலம் கழித்து பெருவாரியான ரசிகர்கள் அவரை நினைவுகூரக் காரணமானது அப்படம்.
பிறகு சாம் பகதூர், மிஸஸ், பேபி ஜான் படங்களில் தலைகாட்டியவர், இதோ இப்போது ‘தக் லைஃப்’ மூலமாகத் தென்னக ரசிகர்களைக் கவர வருகிறார்.
ஆமாம். மணிரத்னம் படம் என்றாலே தமிழ் தவிர்த்து தெலுங்கு ரசிகர்களையும், கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள அவருக்கான பிரத்யேக ரசிகர்களையும் குறிவைத்துச் சில காட்சிகள் இருக்கும்.
‘பான் இந்தியா’ படங்களுக்கு முன்பே ஒட்டுமொத்த இந்தியாவுக்கான படங்களைத் தந்து வருபவர் மணிரத்னம்.
அதனால், இப்படமும் அந்த வகையில் படமாக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது.
வித்தியாசமான அனுபவமா?
சான்யாவின் தோற்றம், அவர் ஒரு உயர் நடுத்தர வர்க்கப் பின்னணியைக் கொண்டவர் என்ற எண்ணத்தை உருவாக்கக்கூடியது.
அதற்கேற்றாற்போல, இப்படத்தில் அவரது பாத்திரம் இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது ‘ஜிங்குச்சா’ பாடல்.
அதிகபட்சம் அவருக்கு ஐந்தாறு காட்சிகள் இருந்தாலே போதும் என்கிற அளவுக்கு இப்படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருக்கிறது.
அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், தணிகல பரணி என்று பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
அவர்களைத் தாண்டி சான்யா மல்ஹோத்ராவுக்குப் பெரியளவில் முக்கியத்துவம் கிடைப்பது குதிரைக் கொம்புதான்.
ஆனால், அவரது குறும்புத் தோற்றம்தான் இப்படத்தின் யுஎஸ்பியாக இருக்கக்கூடும் என்றளவுக்கு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கிடக்கின்றனர்.
‘விக்ரம்’, ‘ஜெயிலர்’ படங்களுக்குக் கிடைத்த இமாலய வெற்றிகளைப் பார்த்தபிறகு, தான் ஒருகாலத்தில் உருவாக்கிய ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’ கலந்து கட்டியவாறு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தைத் தருகிறது ‘தக் லைஃப்’.
அதனால், கமர்ஷியல் படங்களிலேயே வித்தியாசமான அனுபவத்தை இது தரும் என்று நம்பலாம்.
அதேநேரத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ போன்ற ‘ஆஃபாயில்’ அனுபவங்களைத் தராமலும் ‘தக் லைஃப்’ இருக்க வேண்டும்.
ஒரு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வதில் தான் ரசிகர்களுக்கு எத்தனை கட்டுப்பாடுகள்?
– மாபா