நூறு படங்களைத் தாண்டி நடித்திருந்தாலும், சினிமா நட்சத்திரங்களுக்கு ஏதாவது ஒரு படம், ஏதாவது ஒரு காரணத்துக்காக, அவர்களின் மனதுக்கு மிக நெருக்கமாக இருந்திருக்கும்.
அந்தப் படம் குறித்து சிலர் மனம் திறக்கிறார்கள்.
கே.ஆர்.விஜயா:
என் இதயம் தொட்ட படம் ‘தெய்வம்’. எனக்கு புதிய பாதையைக் கொடுத்த படம் என்று சொல்லலாம்.
திருமணமாகி குழந்தை பெற்றபின், படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்தேன்.
அந்தச் சமயத்தில் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தார் ‘தெய்வம்’ படத்தில் நடிக்க என்னை அணுகினார்கள். முதலில் நான் மறுத்துவிட்டேன்.
ஆனால் என் கணவர் மீண்டும் நான் நடிக்க வேண்டும் என விரும்பினார். அந்தப் படத்தை ஒப்புக்கொள்வதற்கு மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று, தேவர் பிலிம்ஸ் எனக்கு குடும்பம் மாதிரி. இரண்டு, அந்தப் படத்தின் இயக்குநர் எம்.ஏ.திருமுகம். மூன்றாவது காரணம், கதையின்படி நான் திருச்செந்தூர் முருகனின் பக்தை.
எனது சொந்த வாழ்க்கையிலும் கணபதி, அம்மன், முருகன் ஆகியோர் எனக்கு இஷ்ட தெய்வங்கள்.
எனவே அந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன்.
‘திருச்செந்தூரின் கடலோரத்தில்’ என்ற பாடல் காட்சியில் நடிக்க திருச்செந்தூர் சென்றேன். நான், டி.எம். சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஜெமினி கணேசன் ஆகியோர் பங்கேற்ற அந்தப் பாடல் 3 மணி நேரத்தில் படமாக்கப்பட்டது.
அந்தப் பட ஷூட்டிங்கின் போது, திருச்செந்தூர் முருகனின் திவ்ய தரிசனம் கிடைத்தது. அதன் பிறகு இதுவரை நான் திருச்செந்தூர் சென்றதில்லை. ஊரடங்கு முடிந்த பின், முதல் வேலை திருச்செந்தூர் சென்று முருகனை தரிசனம் செய்வதுதான்.
சரத்குமார்:
என்னை ஸ்டார் அந்தஸ்தில் தூக்கி வைத்த, ‘சூரியன்’ படம் எனக்கு ஸ்பெஷல். பவித்ரன் (இயக்குநர்), அசோக்குமார் (கேமராமேன்) ஷங்கர், ஏ.வெங்கடேஷ் (உதவி இயக்குநர்கள்) உள்ளிட்டோர் அடங்கிய வலிமையான கதைக்குழு சூரியனில் இருந்தது.
அந்தப் படத்தில் இடம் பெற்ற மெய் சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகள்தான் என்னை உச்சத்துக்குக் கொண்டு சென்றன.
ஒரு விஷயம் தெரியுமா? நடிகை ரோஜாவுக்கு சூரியன் தான் முதல் படம். இதன்பிறகு தான் ‘செம்பருத்தி’யில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் செம்பருத்தி முதலில் ரிலீஸ் ஆகி விட்டது.
படப்பிடிப்பு நடக்கும் போதுதான், காட்சிப்படி நான் மொட்டை அடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் மொட்டை அடிக்கும் காட்சிக்கான ஷூட்டிங் நடந்தபோது, சவரம் செய்பவர் வரவில்லை.
கண்ணாடி முன் நின்று கொண்டு, நானே மொட்டை அடித்துக் கொண்டேன். இப்போது, ஊரடங்கில் நான் நடித்த பல படங்களை டி.வி. சேனல்களில் காண்பிக்கிறார்கள்.
அதைப் பார்க்கும்போது தான், சினிமா உலகில் எனது பங்களிப்பும் இருக்கிறது என்பதை உணர முடிந்தது.
ராதா:
‘முதல் மரியாதை’ படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாது. என்னை சினிமாவுக்கு அறிமுகம் செய்த ‘கிரேட்’ பாரதிராஜா சாரின் படம்.
இரு விதங்களில் இது எனக்கு முக்கியமான படம். சிவாஜி சாருடன் இணைந்து நடித்தது ஒன்று. எனது 99–வது படம் என்பது மற்றொன்று.
கர்நாடக மாநிலம் தலக்காடு பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்தது. நான் கேரளப்பெண். எனக்கு, கர்நாடகாவின் சூழல், உணவு போன்ற எல்லாமே வித்தியாசமாக இருந்தது. படப்பிடிப்பின்போது, அவர்கள் கலாச்சாரத்தைக் கொஞ்சம் கற்றுக்கொண்டேன்.
சிவாஜி சார் மனைவி கமலா அம்மா, ஷூட்டிங் தளத்துக்கு (சிவாஜி) சாருக்காக உணவு கொண்டு வருவார். அதில் மீன் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
எல்லோரும் அமர்ந்து சாப்பிடுவோம். எனக்கு மட்டுமல்லாமல், எனது ரசிகர்களுக்கும் பிடித்த படம் ‘முதல் மரியாதை’.
– பி.எம்.எம்.
#கேஆர்_விஜயா #KR_Vijaya #டிஎம்_சவுந்தரராஜன் #TM_Soundarajan #தெய்வம் #Deivam #சரத்குமார் #Sarathkumar #சூரியன் #Suriyan #ரோஜா #Roja #ராதா #Radha #முதல்_மரியாதை #Mudhal_Mariyathai #சிவாஜி #Sivaji_Ganesan