திரைத் தெறிப்புகள் – 54 :
*
தமிழ் சினிமா உலகில் இதுவரை இப்படியொரு கனிந்த குரல் பாடல் வழியே வெளிபட்டு ரசிர்களைப் பித்துப் பிடிக்க வைத்ததில்லை.
அந்த அளவுக்கு வசியப்படுத்திய குரலுக்குச் சொந்தக்காரர் ஏழிசை பாகவதர் என்றழைக்கப் பட்ட எம்.கே. தியாகராஜ பாகவதர். அவர் மீது பெரும் பக்தி கொண்ட ரசிகர்களும், ரசிகைகளும், இருந்ததால் தான் 1944-ம் ஆண்டில் தீபாவளி அன்று வெளிவந்த திரைப்படமான ‘ஹரிதாஸ்’ மூன்று தீபாவளிகளைக் கடந்து சென்னை பிராட்வே திரையரங்கில் ஓடியது.
அந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை.
இந்தத் திரைப்படத்தில் ஜி. ராமநாதனின் இசையமைப்பில்,
“அன்னையும் தந்தையும் தானே.. பாரில்
அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்…”
– என்று துவங்குகிற இந்தப் பாடலை எழுதியவர் அப்போதைய பிரபலமான பாடலாசிரியரான பாபநாசம் சிவன்.
‘ஹரிதாஸ்’ திரைப்படத்தில் இந்தப் பாடல் துவங்கும்போது, தன்னுடைய தாய், தந்தையரின் கால்களை நீர் ஊற்றிக் கழுவி, அவர்களின் கால்களில் விழுந்து வணங்கியபடி இந்தப் பாடலைப் பாடுவார் எம்.கே.டி.
பாடலுக்கு இடையே டி.ஆர். ராஜகுமாரியின் வசீகர முகம் வெளிப்பட்டிருக்கும்.
“தாயினும் கோவில் இங்கேது – ஈன்ற
தந்தை சொல் மிக்கதோர் மந்திரமேது.
சேயின் கடன் அன்னை தொண்டு – புண்ய
தீர்த்தமும் மூர்த்தித் தலம் இதில் உண்டு…”
அந்தக் காலத்தியே திரைமொழிக்கேற்றபடி பாடல் வரிகள் அமைந்திருக்கும்.
அந்தப் பாடலைக் கேட்கும்போது நம் காதோரம் இனிமையாக வயலினை லாவகமாக ஒருவர்
இசைப்பதைப் போலிருக்கும். அவ்வளவு நளினத்துடன் இருக்கும் தியாகராஜ பாகவதரின் குரல்.
“தாயுடன் தந்தையின் பாதம் – என்றும்
தலை வணங்காதவன் – நாள் தவறாமல்
கோவிலில் சென்று என்ன காண்பான்? நந்த
கோபாலன் வேண்டும் வரந்தருவானோ..
பொன்னுடல் தன் பொருள் பூமி – பெண்டு
புத்திரரும் புகழ் இத் தரை வாழ்வும்
அன்னை பிதா இன்றி ஏது ?- மரம்
ஆயின் விதையின்றிக் காய் கனி ஏது.”
என்று பாடல் நிறைவு பெறும்போது கேட்கிற அல்லது பார்க்கிற நமது மனமும் நிறைந்திருக்கும்.
இதே உணர்வு தான் அன்றைய பார்வையார்களின் மனங்களையும் அன்று நிறைத்து, தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸை மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஓட வைத்துக் கொண்டாட வைத்திருக்கிறது.
– மணா.