கனிந்த மனம் வீழ்வதில்லை!

திரைத் தெறிப்புகள் – 90 :

*

சில பாடல்களைக் கேட்கும்போது – கேட்கும் கணம் மனதை அமைதிப்படுத்தி, சாந்தப்படுத்தும். அப்போதைய நெருக்கடியில் இருந்து மனசை விடுவித்து, நெகிழ்வு கொள்ளச் செய்யும்.

அப்படி அமைதிப்படுத்தும் பாடல்களில் ஒன்று தான் 1964-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல்.

“அமைதியான நதியினிலே ஓடும் – ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.

காற்றினிலும், மழையினிலும் கலங்க mவைக்கும் இடியினிலும்,
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும்…”

ஏரி ஒன்றில் படகை ஓட்டியபடியே, எதிரெதிரே அமர்ந்து, சிவாஜியும்,  தேவிகாவும் பாடுவதைப் போல் அமைந்திருக்கும் இந்தப் பாடல் காட்சி.

இந்தப் பாடல் வரிகளுக்கு சிவாஜி முகத்தில் காட்டும் குழைவும், தேவிகா வெளிப்படுத்தும் வெட்கம் கலந்த சிணுங்கலும் பார்க்க ரசமாக இருக்கும்.

“தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது,
தென்னைதனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது.

ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது..
காற்றடித்தால் சாய்வதில்லை. கனிந்த மனம் வீழ்வதில்லை…”

என்று இந்தப் பாடலை டி.எம். சௌந்தரராஜன் அவ்வளவு அழுத்தமான குரலில் பாடியிருக்க, மெல்லிய அருவி விழுவதைப் போல தொடரும் பி. சுசீலாவின் குரல்.

“நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது.
நாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது.”

இந்த வரிகளைப் பாடி முடித்ததும், பி. சுசீலாவின் குரலும்,  டி.எம். எஸ்-ஸின்  குரலும் இணைந்து, “அமைதியான நதியினிலே” பயணம் செய்து நிறைவடையும்போது, சிவாஜி, ஏரியின் நடுவே நிற்கும் ஒற்றை மரத்தின் மீது ஏறி நிற்பார்.

எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. ராமமூர்த்தி இசையமைப்பில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடலை, அமைதியான இரவுப் பொழுதில் வெளிச் சத்தங்கள் அடங்கிய நிலையில் கேட்டுப் பாருங்கள், மனதிற்குள் அமைதி மெதுவாக நிறைவதை உணர்வீர்கள்.

*

-மணா.

*

Comments (0)
Add Comment