மம்மூட்டிக்கு ஜோடியாகும் சமந்தா!

கௌதம் மேனன் மலையாளம் மற்றும் தமிழில் இயக்க உள்ள படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருந்த நிலையில் தற்போது சமந்தா நாயகியாக நடிக்க உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மம்மூட்டி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்க இருப்பதாகவும், படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் இந்தப் படம் உருவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை சமந்தா ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான `விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் நாயகியாக நடித்தவர்.

அதைத் தொடர்ந்து மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருக்கிறார்.

மேலும் அதிரடி த்ரில் படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வரும் 15ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் மம்மூட்டி 20 ஆம் தேதி முதல் படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மம்மூட்டி மற்றும் சமந்தா ஆகிய இருவரும் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் திரைப்படத்தில் இணைகின்றனர்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment