‘பாகுபலி’யில் முதலில் நடிக்க மறுத்தது ஏன்?

ரம்யா கிருஷ்ணன் விளக்கம்

தெலுங்கு தேசத்து பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்க, பிரபாஸ், ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்த படம் ‘பாகுபலி’.

10 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸ் ஆன இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த சில ஆண்டுகளில் வெளியானது.

இரண்டு பாகத்தையும் ஒன்றாக இணைத்து ‘BAHUBALI-THE EPIC’ என்ற பெயரில் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர்.

3 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் வகையில் படத்தை ‘டிரிம்’ செய்துள்ளார் ராஜமவுலி.

இரண்டு பாகங்களுக்காக எடுக்கப்பட்ட பல காட்சிகள், நீளம் கருதி படத்தில் சேர்க்கப்படவில்லை. அந்த காட்சிகள் ரீ-ரீலீஸ் செய்யவிருக்கும் படத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஏற்ற சிவகாமி பாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது.

ஆனால், பாகுபலி படத்தில் நடிக்க முதலில் ரம்யா மறுத்து விட்டார். இது குறித்து அவர் அளித்த பேட்டி :

“ ‘பாகுபலி’ படத்தில் சிவகாமி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா என்னை அணுகினார். 44 நாட்கள் கால்ஷீட் கேட்டார். நான் அதிர்ந்து போனேன். அவ்வளவு நாட்கள் தேதிகள் தர முடியாது எனக் கூறி அந்த வாய்ப்பை நிராகரித்தேன்.

அவர் என்னிடம் கால்ஷீட் கேட்டபோது, படத்தின் கதை குறித்தோ, எனது வேடம் பற்றியோ, பட்ஜெட் குறித்தோ எதுவும் தெரியாது.

கொஞ்ச நாட்களுக்கு பிறகே பாகுபலியின் கதை, எனது கேரக்டர் போன்ற விவரங்கள் தெரிய வந்தன. அதன் பின்னரே அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என மனம் திறந்து பேசினார்  ராஜாமாதா.

– பாப்பாங்குளம் பாரதி

Comments (0)
Add Comment