முதல்ல அந்தப் புரட்சி செய்ததே நான்தான்!

நடிகை பானுமதி

“இப்போ எடுக்கிற லவ் ஸீன் எல்லாம் பாத்தா கண்ணு சுத்தறது” 1985ல் சினிமா அனுபவம் பற்றிய பானுமதியின் சுவாரஸ்ய பதிவு…

****

இதுவரையில் தான் நடித்த படங்களிலிருந்து முக்கிய காட்சிகளைத் தொகுத்து, ‘மலரும் நினைவுகள்’ மாதிரி ஒரு படமாகத் தயாரித்து தணிக்கைக்கு அனுப்பியுள்ளார் டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா.

அண்மையில் எழும்பூர் அருங்காட்சியகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில், ‘எனது திரையுலக அனுபவம்’ என்ற தலைப்பில் பழைய அனுபவங்களாக இருந்தாலும், சுடச் சுடப் பேசினார் பானுமதி: “நான் நடிக்க வந்து 46 வருஷம் ஆகுது.

எங்கப்பாவோட இன்ட்ரஸ்ட், எனக்கிருந்த மியூசிக் இன்ட்ரஸ்ட்டாலதான் நான் சினிமாவுக்கே வந்தேன்.

நான் 39, 40-ல்தான் இந்த ஃபீல்டுக்கு வந்தேன்… முதல் படம் ‘வரவிக்ரம்’ தெலுங்குல. அப்போ எங்கப்பாவோட நண்பர் சீ. புல்லய்யா, எங்கப்பா கிட்ட வந்து என்ன நடிக்கக் கூப்பிட்டார். அந்தப் படத்துல நிறைய பாட்டு இருக்குன்னு சொன்னர்.

எங்கப்பா சங்கீதப் பைத்தியம். ‘கச்சேரி பண்ணா ஒரு ஊர்லதான் கேக்க முடியும். ஆனா, சினிமாவில பாடினா எல்லாரும் கேக்க முடியுமே’ன்னு சினிமாவில நடிக்கறதுக்கு என்னை கல்கத்தாவுக்கு அழைச்சிக்கிட்டுப் போனாரு.

அப்போ நான் அழுதேன்… ஏன்னா, அந்தக் காலத்தில சினிமாவில் நடிக்கறவங்களை சொஸைட்டில கொஞ்சம் கேவலமா பார்ப்பாங்க… இப்போ மாதிரி இல்ல. இப்போ எல்லாருமே சினிமாவில நடிக்கலாம்னு இருக்கு.

அப்போ சினிமாவில நடிச்சா கல்யாணம் ஆகறதுகூடக் கஷ்டம்னு இருந்தது. எங்கப்பா சொன்னாரு, ‘எந்த ஃபீல்டுதான் ஒழுங்கா இருக்கு..? எந்த ஃபீல்டா இருந்தாலும் நாம நடந்துக்கற முறைல தான் இருக்கு.

உன்னை நான் என் கண் இமை மாதிரி காப்பாத்துவேன்’னு சேலன்ஜ் பண்ணினாரு.

எங்கப்பாவுக்கு ரொம்ப வில் பவர். அதுதான் பின்னால எனக்கு வந்தது.

அவர் போட்ட அந்த உறுதியான அஸ்திவாரத்தினாலதான் என்னால எல்.ஐ.சி. பில்டிங் அளவுக்கு என் வாழ்க்கையிலே உயர முடிஞ்சுது. அந்தக் காலத்துல லவ் ஸீன்னா ஹீரோவும், ஹீரோயினும் கையைப் புடிச்சிக்கிட்டு ஹாய்யா நடப்பாங்க. தோள்ல சாஞ்சுக்குவாங்க.

இதுக்கு மேல லவ் ஸின்ஸ் எப்படி எடுக்கணும்னு அப்ப தெரியாது. படத்துக்காக அக்ரீமெண்ட் போடும்போதே, ஹீரோ என் கையப் பிடிக்கக்கூடாது. தோள்ல சாயக்கூடாதுன்னுல்லாம் எங்கப்பா கண்டிஷன் போட்டாரு.

இப்போ எடுக்கிற லவ் ஸீன் எல்லாம் பாத்தா கண்ணு சுத்தறது. ஆடம்பரங்களோ, இந்த சினிமா ஸ்டாரோட ஜிகுபிகுவோ எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.

எங்கப்பா எனக்குக் கொடுத்த ட்ரெயினிங் அந்த மாதிரி. என்னை நான் ஒரு நடுத்தர குடும்பத்துப் பெண்ணாத்தான் எப்போதும் நினைச்சுக்கறேன். அதனாலதான் இன்னும் எங்க வீடு மத்த வீடுகள் மாதிரி சாதாரணமாத்தான் இருக்கும்.

ஒரு சினிமா ஸ்டார் வீடுங்கற மாதிரி ஒரு ஆடம்பர அமைப்பைப் பார்க்க முடியாது. இத நான் ஏன் பெருமையா சொல்லிக்கறேன்னா, கேரக்டர்ங்கறதை படத்துல மட்டும் பார்க்காம, நான் என் பர்சனல் லைஃப்லயும் கரெக்டா பார்த்துக்கிட்டு வர்றேன்.

41-ல மெட்ராஸுக்கு வந்தோம். ‘பக்திமாலா’ன்னு ஒரு படம். வட நாட்டுக்காரர் ஒருத்தர் எடுத்தாரு. அதுல மீராபாய் மாதிரி கேரக்டர்.

அந்தப் படத்துக்காகத்தான் நான் மொதல்ல டான்ஸ் கத்துக்க வேண்டி வந்தது. அதுவரைக்கும் எனக்கு டான்ஸ் தெரியாது. அந்தப் படத்துல நான் டான்ஸ் நல்லா பண்ணலை. அதனாலேயே அந்தப் படத்தைப் பார்க்க எனக்கே பிடிக்காது.

அதுக்கப்பறம் ‘கிருஷ்ணப்ரேமம்’ அத ‘ராமகிருஷ்ண ப்ரேமம்’னுகூட சொல்லலாம். எதுக்குன்னா அதிலதான் – என் கணவரா வரப்போறவர் அசோசியேட் டைரக்டரா இருந்தாரு.

அப்போ என் கல்யாணப் பேச்சு வந்தது. நான் அவரைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என் சிஸ்டர் மூலமா சொன்னேன்.

அவர் பேசறது எந்த மொழி, என்ன ஜாதின்னு கூட எனக்கு சரியாத் தெரியாது. எங்கப்பா கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாரு.

1943-ல டவுன்ல வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்துல எங்க கல்யாணம் நடந்தது… அதுக்கப்புறம் சினிமாவில நடிக்கக்கூடாதுன்னு ரெண்டு பேருமா சேர்ந்து முடிவெடுத்தோம்.

எனக்கு சினிமாவில நடிக்கறதில இஷ்டம் இல்ல. இத நான் எத்தனையோ தடவை சொல்லியிருக்கேன்… இன்னிக்கும் சொல்றேன்.

எனக்கு பாடற, எழுதற திறமைங்க இருந்தாலும், இந்தத் தொழிலுக்கு வர்றதுக்கு முன்னாடியே நடிச்சா கேவலமா நினைப்பாங்கங்கற எண்ணம் மனசுல அழுத்தமா பட்டதால எனக்கென்னவோ சினிமாவில வொர்க் பண்ணணும்னா இஷ்டம் இல்ல. ஆனா அதுக்காக நான் தொழிலை அலட்சியம் செய்யலே.

நான் மூட் சரியில்லாம அலட்சியமா பண்ணினாலும் பார்த்தவங்க ‘பானுமதி எவ்வளவு ஈசியா பண்ணியிருக்காங்க பாருங்க’ன்னுதான் பாராட்டுவாங்க.

கல்யாணத்துக்குப் பிறகு ஆறு மாசம் வீட்டுலேயே சமைச்சுக்கிட்டிருந்தேன் பி.என்.ரெட்டி வந்து ‘சொர்க்க சீமா’வில நடிக்கக் கூப்பிட்டாரு.

என் கணவர் அனுப்பமாட்டேன்னு சொன்ன பிறகு கூட அவரை கம்ப்பெல் பண்ணி என்னை நடிக்க வெச்சாரு… தமிழ்ல நான் ஒரு படத்துல நடிக்கும் போது ஒரு அனுபவம்… அந்தப் பட டைரக்டர் எல்லா பெண்ணுங்களையும் ‘என்னடீ”ன்னு கூப்பிடறது வழக்கமாம். என்னையும் ‘என்னடீ”ன்னாரு. நான் திருப்பி ‘என்னடா’ன்னேன்.

அப்படியே அசந்துட்டாரு. நான் சொல்லியிருக்கக் கூடாதுதான்… திமிரு… அப்போ ஆர்ட்டிஸ்ட்டுகளை எல்லாம் அந்த மாதிரி கூப்பிடற வழக்கம் இருந்ததாம். எனக்கு அதெல்லாம் பிடிக்கலை… சொல்லிட்டேன்.

ஆர்ட்டிஸ்ட்டுங்களுக்கு மரியாதை கொடுக்கணும்னு மொதல்ல புரட்சி செய்ததே நான்தான்…! படவுலகிலே எனக்கு கோபக்காரி, ரொம்ப ஸ்ட்ரிக்டுன்னு எல்லாம் பட்டம் உண்டு.

எல்லா ஹீரோவும் என்கிட்ட நெருங்கப் பயப்படுவாங்க. ஏன், எம்.ஜி.ஆர்., சிவாஜிகூட என்கிட்ட ஒரு மரியாதையோட தூரத்திலதான் இருப்பாங்க.

அப்பதான் மொதல் தடவையா எம்.ஜி.ஆர். என்னை ‘அம்மானு கூப்பிட ஆரம்பிச்சாரு. நான் என்னைவிடப் பெரியவங்களுக்கும் அம்மா ஆயிட்டேன், 30 வயசிலியே! ‘சரி, இதுவும் ரொம்ப செளகரியமா போச்சு’னு நெனச்சுகிட்டேன்.

‘என்னடீ”ய விட ‘அம்மா பெட்டர் இல்லையா? அதுக்கப்புறம் சிவாஜியும் என்னை ‘அம்மா’னு கூப்பிட ஆரம்பிச்சாரு… எனக்கும் பெருமையா இருந்தது.

டைரக்டர் டி.ஆர்.சுந்தரத்துக்கு இந்த விஷயம் தெரிய வந்தது போலிருக்கு… அவரு என்னை என்னங்கனு கூப்பிட்டாரு…

‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ ஷூட்டிங்… அப்போ எல்லாம் நடிகர்களை ஒரு மாட்டுக்கொட்டா மாதிரி இடத்துல தான் தங்க வைப்பாங்க. பெரிய ஆளுங்கன்னா ஏதோ ஹோட்டல்ல தங்க வைப்பாங்கன்னு கேள்விப்பட்டேன்..

நான் சொன்னேன், ‘மிஸ்டர் சுந்தரம், உங்களுக்கு ஆர்ட்டிஸ்ட் மேல கொஞ்சம் மரியாதை இருந்தா அவங்களுக்குத் தங்க நல்ல இடம் கொடுங்கோ’னு சொன்னேன்.

‘என் கூட என் மாமியாரும் வருவாங்க. அவங்க மடி ஆசாரம் ரொம்ப ஜாஸ்தி. நான் ஹோட்டல்லே எல்லாம் தங்க முடியாது… எனக்குப் பாதுகாப்பு வேணும்… அதனால ஆபீஸ்ல இருக்கறேன்’னு சொன்னேன்.

சுந்தரம் அவரோட ஆபீஸ்ல டேபிள் எல்லாம் நகர்த்திப் போட்டு எங்களுக்கு இடம் பண்ணிக் கொடுத்தாரு. எங்க மாமியார் அங்கேயே குமிட்டி வெச்சு சமைச்சாங்க.

இதுக்கப்புறம்தான் ஆர்ட்டிஸ்ட்டுக்கெல்லாம் மரியாதை கொடுக்கணும்னே வந்தது. அதுக்கப்புறம் நான் நடிச்சு வந்த படங்கள் எல்லாமே ஜூப்ளிதான்.

நான் அலிபாபாவில நடிக்கும்போது, சிவாஜி ஷூட்டிங்குக்கு வந்திருந்தாரு, அப்போ, ‘இந்தம்மாவோட ஒரு படம் நான் ஆக்ட் பண்ணா நல்லாயிருக்குமேனு காமிராமேன் டபிள்யூ. ஆர். சுப்பாராவ் கிட்ட சொன்னாரு. உடனே ‘கள்வனின் காதலி’ புக் ஆச்சு.

எம்.ஜி.ஆர். சிவாஜி, ரங்காராவ்னு என்கூட நடிச்சவங்கள்லாம் நல்ல ஆர்ட்டிஸ்ட்டா இருந்தாங்க…

58-லே எனக்குக் ‘கலைமாமணி’ பட்டம் கொடுக்கணும்னு வந்தாங்க.

அப்ப நான் அதனோட மதிப்பு தெரியாம, அதெல்லாம் வயசானவங்களுக்குத்தான் கொடுப்பாங்’கனு சொல்லி அந்த விழாவுக்குப் போகலை.

இதுக்கும் காரணம் திமிரு… ஆனா. அப்ப அப்படி செஞ்சதுக்கு இப்போகூட ஃபீல் பண்றேன்.

அந்தம்மாவுக்கு இன்னும் ‘கலைமாமணி’ பட்டம். கொடுக்கலையா?’னு எம்.ஜி.ஆர். இப்போ கேட்டாராம்.

இவ்வளவு நாள் கழிச்சு எனக்குக் கொடுத்தா எப்படின்னு தங்களோட முதுகைக் காப்பாத்திக்கறத்துக்காக ஒரு டைரக்டரா எனக்குக் ‘கலைமாமணி’ பட்டம் கொடுத்துட்டாங்க.

என்னதான் இருந்தாலும் ஒரு நடிகைக்குத் தர வேண்டிய ‘கலைமாமணி’ பட்டம் எனக்கு பாக்கியிருக்கு!” என்று பேசிக் கொண்டே போன பானுமதி திடீரென்று “என்னை மன்னிச்சுக்கோங்கோ. இன்னிக்கு உபவாசம்” என்று சொல்லி உட்கார்ந்து விட்டார்.

நன்றி: விகடன்

Comments (0)
Add Comment